தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரானுடன் முன்னாள் கிழக்கு ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லா கைகுலுக்கும் ஒளிப்படத்தினை வழங்கி அவருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, கல்லடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களினால் கண்டறியப்பட்ட உண்மையின் அடிப்படையிலேயே ஆளுநர்கள் இராஜினாமா செய்துள்ளனர். எனினும் ஏனைய அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளமை கேலிக்கூத்தான ஒரு விடயமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமையினை நிரூபிக்கவேண்டும், இனத்தின் அடையாளத்தினை உறுதிப்படுத்தவேண்டுமானால் இது நேரமல்ல. இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்பவர்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.





