LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 9, 2018

பாடசாலைகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளினூடாக மனித விழுமிய மேம்பாடுகளைக் கற்பித்தல்

பாடசாலைகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளினூடாக மனித விழுமிய மேம்பாடுகளைக் கற்பித்தல்
'இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்' இத் தலைவர்களை உருவாக்கும் பொறுப்பில் முக்கிய பங்கு வகிப்பது பாடசாலையாகும். பாடசாலைகளே சமூகத்திற்கான சிறந்த சமூகமொன்றை உருவாக்கும் கேந்திர தளமாக உள்ளது. ஒரு பிள்ளையின் சமூகமயமாக்கல்களில் பங்களிப்புச் செய்யும்  நிறுவனங்களில் பாடசாலையும் ஒன்றாகும். அத்தகைய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் வகுப்பறைக் கற்றலுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காது பாடசாலைகளில் இடம் பெறும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பங்கு கொள்ள வேண்டும்.
பாடசாலை என்பது கல்வி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் ஒரு நிறுவனம் ஆகும். பாடசாலைக் கலைத்திட்டமானது கற்றல், கற்பித்தல், கல்விப் புறச் செயற்பாடுகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றது. கலைத்திட்டமானது கல்வி நடவடிக்கைகளை மட்டுமல்லாமல் மாணவர்களுடைய அனைத்து அனுபவங்களையும் செயற்பாடுகளையும் ஒன்று திரட்டி ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு விடயமாக விளங்குகின்றது. ஆகவே சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விழுமியம் சார்பான பல விடயங்களையும் மாணவன் முக்கிய பாடங்களினூடாக மட்டுமல்லாமல் இணைப்பாடவிதான செயற்பாடுகளினூடாகவும் புற வேலைகள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளும் வகையில் பாடசாலைக் கல்வி ஓழுங்கமைக்கப்படல் வேண்டும். 

இன்று கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளையே முதன் மையமாகக் கொண்டு கலைத்திட்டம் உருவாக்கப்படுகின்ற போதும் வகுப்பறைக்கு வெளியே இடம்பெறும் விளையாட்டுக்கள், விழாக்கள், கூட்டங்கள், பிராத்தனைகள், போட்டிகள் போன்றவைகளும் முக்கியம் பெறும் நிலையைக் காண்கின்றோம். நூலறிவை மட்டும் மாணவர்களுக்கு வழங்குவதை விடப் புறச் செயற்பாடுகளிலும் முழுமனதோடு விரும்பி ஈடுபடுகின்ற தன்மை மாணவர்கள் மத்தியில் வளர்க்கப்படல் வேண்டும். பாடசாலைகளில் இடம்பெறும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் வகுப்பறைக் கற்பித்தலை மேம்படுத்த உதவுவதோடு மனித விழுமியங்கள் பற்றிய அறிவையும் மாணவர்களுக்கு ஊட்டுவதாக அமைகின்றது. உதாரணம் - இணைக் கலைத்திட்ட செயற்பாடுகளான நூல் நிலைய வாசிப்பு, விஞ்ஞான ஆய்வுகூடப் பரிசோதனைகள், மனையியல் பயிற்சிகள், விவசாயம், தொழில் முன்னிலைப் பாடங்கள், கைவேலை, தையல் பயிற்கிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

மாணவர்கள் நூல் நிலையத்தை பயன்படுத்துபவர்களாக காணப்படும் போது இங்கு கடைப்பிடிக்க வேண்டிய பல ஒழுங்கு முறைகள் பற்றிய விளக்கத்தினை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும். நூல் நிலையத்தில் மற்றவர்களுடைய செயற்பாட்டிற்கு எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்த முற்படாமல் இருக்கின்ற நிலையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தலே ஒரு சிறந்த மனித விழுமிய மேம்பாடாகக் கொள்ளப்படுகின்றது. நூல்களின் ஒழுங்கு முறைகள், பாட ரீதியாக அவற்றின் வரிசை நிலைகள், நூல்களைப் பயன்படுத்தும் முறைகள், அவற்றை இரவற் பெறும் முறைகள் போன்ற விளக்கத்தை மாணவன் பெற்றிருக்க வேண்டும். சிறந்த கல்வியியலாளர்களின் நூல்கள், ஆன்மீக நூல்கள், வரலாற்று நூல்கள், நல்வழி நூல்கள், சமய நூல்கள் போன்றவைகளைப் பயன்படுத்தும் போது சிறந்த உயர்ந்த விழுமிய சிந்தனைகள் பல மாணவர்கள் மத்தியில் வளர்ந்து செல்கின்றன. 

பாட மேம்பாடு தொடர்பாக இன்று பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் முக்கிய ஒரு செயற்பாடாக கல்விச் சுற்றுலாக்கள் அமைகின்றன. நூல் அறிவுடன் அனுபவ அறிவையும் பெற்றுக் கொள்ள சில விடயங்களை நேரில் சென்று பார்த்து அறிந்து கொள்ளும் போது கற்க வேண்டிய விடயங்களை மாணவர்கள் இலகுவில் புரிந்து கொள்கின்றனர். அனுபவத்தின் மூலம் கற்ற விடயங்கள் எப்போதும் மாணவனுடைய ஞாபகத்தில் நிலைத்து நிற்கின்றன.                   வரலாற்று உண்மைகள், நுண்கலைகள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை கல்விச் சுற்றுலாக்கள் மூலம் மாணவர்களால் அடையப்படுகின்றன எனக் கூற முடியும். இவை மூலம் பலவகை யான விழுமியங்கள் மாணவர்கள் மத்தியில் வளர்க்கப்படுகின்றன.                             உதாரணம் - தலைமை தாங்கும் பண்பு, பொறுப்புக்களை பகிர்தல், கட்டுப்படுத்தல், கீழ்ப்படிதல், குழுவாகச் செயற்படுதல் போன்ற நற்பண்புகள் மாணவர்களுக்கு கிடைக்கின்றன.

பாடசாலைகளில் இடம்பெறும் மன்றச் செயற்பாடுகளும் விழுமியக் கல்வியை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மூலம் மாணவர்களது பல்வகையான ஆற்றல்கள், திறன்கள் விருத்தி செய்யப்படுகின்றன. தமிழ் இலக்கிய மன்றம், சாரணீய அமைப்பு, மாணவ தலைவர்களின் மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்றன இன்றைய பாடசாலை நடைமுறையில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புக்களாக கொள்ளப்படுகின்றன. இம் மன்றங்களில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் மன்றங்களின் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதோடு மாணவர்களின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக ஒவ்வொரு மன்றத்திற்கும் பொறுப்பாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். இம்மன்றங்களில் சேரும் மாணவர்கள் மத்தியில் பலவகையான சமூக விழுமியங்கள், தனி விழுமியங்கள் வளர்ந்து வருவதனை அவதானிக்க முடிகிறது. 

பாடசாலையின் இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாணவர்களால் விரும்பிப் பங்கேற்கக் கூடியதாகவும் அமைவது விளையாட்டிப் போட்டியாகும். அனைத்து மாணவர்களும் இல்லங்களின் வெற்றியைக் கருத்திற் கொண்டு போட்டியுணர்வை ஏற்படுத்தும் வகையில் தமக்கு பொருத்தமான விளையாட்டுக்களில் பங்குகொள்வர். இதன் போது மாணவர்களுடைய ஆளுமை வளர்வதோடு பல சிறந்த பண்புகளும் வளர்க்கப்படுகின்றன. தசைநார்க் கட்டுப்பாடு, உடல்உறுதி, உடற்சமநிலை, தலைமைத்துவப்பண்பு, விட்டுக்கொடுப்பு போன்ற சிறந்த விடயங்களையும் நல்ல குணங்களையும் மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
ஓவ்வொரு பாடசாலைகளிலும் பரிசளிப்பு விழா, ஆசிரியர்தின விழா, சமய விழாக்கள் போன்றவை நடத்தப்படுவது யாவரும் அறிந்த விடயம். இவ் விழாக்களில் மாணவர்களுக்கென பல பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதோடு அதற்கு பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களிடம் அவர்களுக்குரிய கடமைகள் பங்களிக்கப்படுகின்றன. அங்கத்தவர் தெரிவு மாணவர்களாலேயே தெரிவு செய்யப்படும் போது ஒரு தலைவனுக்கு கட்டுப்படும் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குகள், கீழ்ப்படிதல், ஏற்றுக்கொள்ளல் போன்ற விழுமியங்கள் மாணவர்கள் மத்தியில் வளர்க்கப்படுகின்றன. 

வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாட அலகுகளுக்கு அப்பால் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை புறக்கலைத்தட்டம் எனலாம். இவை பாடசாலை ஒன்றின் பரந்த கலைத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டாலும் பாடவிதானச் செயற்பாடுகளுக்கு புறம்பாக இருப்பதால் மட்டுமே புறக்கலைத்திட்டம் என்று கூறப்படுகின்றது.
மாணவர்கள் காலை ஒன்றுகூடல்களின் போது பொதுவான ஓர் இடத்தில் சேர்ந்து கொள்ளும் நிலை பாடசாலைகளில் காணப்படுகின்றது. இந்த ஒன்றுகூடல் பெரும்பாலும் பத்து நிமிடங்கள் நடைபெறும். இந்த நேரத்தில் மாணவர்கள் தத்தமது மதவழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் உடற்பயிற்சியும் இடம்பெறுகின்றது. இதன் மூலம் தொடர்கின்ற கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு முன்னேற்பாடாகவே உடற்பயிற்சிகள் இடம்பெறுகின்றன. 

காலை ஒன்றுகூடல்களில் சமயப் பிரார்த்தனைகள் முதலிடம் பெறுகின்றன. இதற்காக தனியிடம் ஒதுக்கப்பட்டு அது புனிதமான இடமாக கொள்ளப்படுகின்றது. விசேட விழாக்களின் போது இங்கு பூசைகள் இடம்பெறுவதுண்டு. அக்காலங்களில் பிரார்த்தனையைத் தொடர்ந்து அதிபரினால் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதோடு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆசிரியர்கள் நற்சிந்தனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமன்றி மாணவர்களும் இச் செயற்பாட்டில் பங்குகொள்கின்றனர். இந்த நற்சிந்தனையானது மாணவர்களின் நடத்தை மாற்றத்திற்கு முக்கியமான ஒரு உந்துசக்தியாக அமைகின்றது.
ஒவ்வொரு மாணவனும் தன்னால் கற்கப்படும் பாடம் தொடர்பாக அவற்றைப் பரிசோதித்துப் பார்த்து கற்றலை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், பயிற்சிகள், செயன்முறைகள், செயற்றிட்டங்கள் போன்றன இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல் போன்ற பாடங்கள் விஞ்ஞான ஆய்வுகூடப் பரிசோதனைகளையும் மனையியல், விவசாயம் கட்டட நிர்மாணம் போன்ற பாடங்கள் உள்ளக வெளிக்களப் பயிற்சிகளையும் செயன்முறைகளையும் கொண்டுள்ள பாடங்களாகும். இவைகளின் மூலம் கலைகள் பற்றிய விழுமிய சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய கலை சார்ந்த விழுமியம் தொடர்பாக சித்திரம், சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கியலும் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இத்தகைய பாடங்கள் அனைத்தும் குழு உணர்வு, கூட்டுப் பொறுப்பு, தலைமை தாங்கும் பண்பு, மன்னிப்பு கேட்கும் பழக்கம், விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம், மதித்தல், ஏற்றுக் கொள்ளுதல் போன்ற சிறந்த பழக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மாணவர்களின் சிந்தனை ஆற்றல், கற்பனை ஆற்றல், செயற்றிறன் போன்றவைகளைத் தூண்டி வளர்த்து விடுகின்றன.

அவை தவிர்ந்த பல செயற்பாடுகள் பாடசாலைகளில் நடைபெறுகின்றன. பாடசாலை வளங்களைப் பொறுத்தும் சில செயற்பாடுகள் பாடசாலைகளுக்கிடையில் வேறுபடுகின்றன. அந்த வகையில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் ஊடாகவும் புறக்கலைத்திட்டச் செயற்பாடுகளினூடாகவும் மனித மேம்பாடு தொடர்பான பல விழுமியங்கள் மாணவர்கள் பாடசாலையில் பெற்று சமூகத்திற்கேற்ற நல்ல பிரஜைகளாக உருப்பெறுகின்றார்கள். இன்றைய உலகில் மக்களிடையே ஏற்படும் தேவையற்ற போட்டி மனப்பான்மைகள் மூலம் மாணவர்கள் மத்தியில் சில தீய சிந்தனைகளும் பழக்கவழக்கங்களும் அவர்களின் நடத்தைகளில் சீரற்ற மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இவைகளையெல்லாம் களைந்து வளமான எதிர்காலத்தை உருவாக்குவது ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் கைகளிலேயே தங்கியுள்ளது.

செல்வி.க.கிருஷனா
கல்வியியல் சிறப்புக்கற்கை
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்
வந்தாறுமூலை




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7