LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

தாயகச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

கனடா செய்திகள்

உலகச் செய்திகள்

கட்டுரைகள்

கலை இலக்கியம்

சினிமா செய்திகள்

Wednesday, April 29, 2026

தமிழ் சிங்கள சித்திரை புதுவருட கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகள் உவர்மலையில்

(ஷோபனா ஜெகதீஸ்வரன்)

தமிழ் - சிங்கள சித்திரைப் புதுவருடத்தை சிறப்பிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபையின் அமைப்புக்கள், கொத்தணிகள் மற்றும்  திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களிற்கிடையிலான கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகள் இன்று (29) காலை திருகோணமலை - உவர்மலை மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குமாரசிங்கம் குணநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர சம்பிரதாய பூர்வமாக நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நாகராசா மணிவண்ணன் அவர்களும் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் H.E.M.W.G திசாநாயக்க, கிழக்கு மாகாண பேரவைச் செயலக செயலாளர் N.வில்வரட்ணம் , ஆளுநரின் செயலாளர்  P.வாகீசன், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) ந.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,  அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வுகளைச் சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குமாரசிங்கம் குணநாதன் தலைமையுரையாற்றுகையில் கிழக்கு மாகாண சபையின் அமைப்புக்கள் கொத்தணிகள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பல்துறை சார் திறனை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய ஒற்றுமை மற்றும் பொது உணர்வுகள் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களது நட்பும் புரிந்து கொள்ளும் தன்மையை அதிகரிப்பதையும் நோக்காகக் கொண்டு தேசிய கொண்டாட்டமாக சித்திரைப் புத்தாண்டு விழாவை கொண்டாடும் குறிக்கோளுடனும் வருடந்தோறும் ஒழுங்கு செய்யப்படுகின்ற சிங்கள தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாடும் குறிக்கோளுடனும் இன்று சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வுகளாக அழகு ராணிப்போட்டி, கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், போன்ற பல்வேறு போட்டி நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு அதிதிகளால் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.














Saturday, April 25, 2026

பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தினக் கொண்டாட்டம்: எஸ்.ஏ.ஸ்ரீதரின் ‘மௌனப்புரட்சி’ நூல் வெளியீடு!

                                                         (க.ஜெகதீஸ்வரன்)

வாழைச்சேனை உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபை பேத்தாழை பொது நூலகத்தில் விசேட புத்தக தினக் கொண்டாட்டமும், சிறப்பு நூல் வெளியீட்டு விழாவும் மிக விமர்சையாக நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் திகதி உலக புத்தக தினத்தை முன்னிட்டு எழுத்தாளர்களைக் கௌரவித்தல், புதிய நூல்களை அறிமுகம் செய்தல் எனப் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளைப் பேத்தாழை பொது நூலகம் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில், இவ்வருடம் நூலகத்தில் உத்தியோகத்தராகப் பணியாற்றும் எழுத்தாளரும், கவிஞரும் இதழாசிரியருமான எஸ்.ஏ.ஸ்ரீதர் எழுதிய 'மௌனப்புரட்சி - புத்தகங்கள் செதுக்கும் புதிய உலகம்' எனும் இருநூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 இந்நூல் ஆசிரியரின் சொந்தப் பதிப்பகமான 'தமிழ்த்தாய் புத்தக இல்லம்' ஊடாக மிக நேர்த்தியாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தனிமனித முன்னேற்றம் முதல் சமூகப் புரட்சி வரை, பொருளாதார மேலாண்மை முதல் மன அமைதி வரை வாசிப்பு என்பது ஒரு மனிதனை எவ்வாறு செதுக்குகிறது என்பதை ஆழமான சான்றுகளுடன் விளக்கும் ஒரு முழுமையான வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, சமகாலத்தில் வாசிப்பின் முக்கியத்துவத்தை மேலைத்தேய ஆய்வுப் பாணியில் முன்வைக்கும் ஒரு முக்கிய ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.

இந்நூலின் ஆசிரியரான எஸ்.ஏ.ஸ்ரீதர், வாகரையில் உள்ள வெல்லையடிமடு எனும் கிராமத்தில் 1984இல் பிறந்தவர். 1990களில் நிலவிய உள்நாட்டுச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்து வாழைச்சேனையில் குடியேறினார். வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் உயர்தரம் வரை பயின்ற இவரை, மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நிமலன் சௌந்தரநாயகம் அவர்கள் எழுத்துத்துறையில் இனங்கண்டு ஊக்குவித்தார்.

தனது 16ஆவது வயதிலேயே கவிதை மற்றும் கதைகளை எழுத ஆரம்பித்த ஸ்ரீதர், இன்று கோறளைப்பற்று பிரதேசத்தின் மிகச்சிறந்த கலை, இலக்கிய ஆர்வலராகவும் ஆவணப்படுத்தல் பணியாளராகவும் மிளிர்கின்றார். ஏற்கனவே இவரது படைப்புகளாக:

தனித்திருக்கிறான் ஒரு தமிழன் (2003) - கவிதைத் தொகுப்பு

சங்கத்தமிழ் சிறுகதைகள் (2004) - சங்க இலக்கியங்களின் கதை வடிவம்

ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் இவர்கள் (2006)

என்றும் வாழும் எங்கள் அமரர் முருகேசு தவராஜா (2016) உள்ளிட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள 'மௌனப்புரட்சி' இவரது ஐந்தாவது நூலாகும். அத்துடன் இவரது வரலாற்று நாடக நூலான 'எல்லைகாக்கும் வீர மாகாளியம்மன்' மற்றும் அவர் தொகுத்துள்ள 'வாழைச்சேனை தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள்' ஆகிய நூல்கள் விரைவில் வெளிவரத் தயாராக உள்ளன.

 நூலகப் பொறுப்பாளர் திருமதி. புஸ்பா தயாளன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மூத்த எழுத்தாளர் கலாபூசணம் எச்.மெத்தியேஸ் அவர்கள் நூலினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சு.சுதாகரன் அவர்கள் நூலாசிரியரிடமிருந்து முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார்.

நூல் அறிமுக உரையை நிகழ்த்திய சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லா ஹாரூன் உரையாற்றுகையில்,

'மன அழுத்தங்களுடன் ஓய்வில்லாப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மாத்திரமன்றி சகலரும் வாசிக்க வேண்டியதொரு முக்கியமான நூல் இது. இதனை வாசித்து முடித்தபோது எனக்குள்ளேயே ஒரு பெரிய மாற்றத்தை இந்த 'மௌனப்புரட்சி' உண்டாக்கியுள்ளது. எழுத்தாளர் ஸ்ரீதர் எமது நூலகத் துறையின் பெருமிதம்,' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆசிரிய ஆலோசகர் எ.த.ஜெயரஞ்சித், தனது மாணவனான ஸ்ரீதரின் இலக்கிய வளர்ச்சியைப் பாராட்டியதுடன், அவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ந.நிமல்ராஜ், செயலாளர் எஸ்.ராஜ்கீதன் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தனது எழுத்துப் பணிகளுக்காக 2019ஆம் ஆண்டில் 'கலைஞர்' விருது பெற்ற எஸ்.ஏ.ஸ்ரீதர், தற்போது பொது நூலக உத்தியோகத்தராகப் பணியாற்றிக் கொண்டே இலக்கிய உலகிற்குத் தொடர்ந்து வலுச்சேர்த்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






























Sunday, April 5, 2026

15 ஆவது சோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் சுற்றுப்போட்டி - 2025 (2026)

 (க.  ஜெகதீஸ்வரன்)


இலங்கை சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தினால் கடந்த 04.04.2026 அன்று நடைபெற்ற 14 வயதிற்கு மேற்பட்ட போட்டியில் ஜப்பான் கராத்தே டோ சோட்டோகான் கற்றை நிறுவனத்தின்(JKSSA) மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை மற்றும் மயிலம்பாவெளி பயிற்சி நிலைய மாணவர்கள் சாதனை புரிந்துள்ளார்கள்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் 

R. ரணுஸ்ரன் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ச. நோயல் றிதுஷன் சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

சி. சதீஸ்வரன் சண்டைப் போட்டி மற்றும் காட்டா (Kata) போட்டி ஆகிய இரண்டிலும் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ந. யதோஷன், கி. பியூரி டெர்சியா மற்றும் J. ஜெனுஸ்ரன் ஆகியோர் இப்போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர்.

இம்மாணவர்கள்  வாழைச்சேனை இந்துக்கல்லூரி, கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம், தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரி ஆகிய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை JKSSA கழகத்தின் பிரதம போதனாசிரியர் ஷிஹான் H.M. விஜயகுமார் மற்றும் போதனாசிரியர்களான  சென்செய் M. நாகராஜா, சென்செய் T. சதானந்ததகுமார் ஆகியோர் இம்மாணவர்களை பயிற்றுவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.














 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7