80களில் இருந்து ஈழத்து கவிதைப் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய வாதம், பெண்ணிலை வாதம், வாழ்வியல் ஒடுக்கு முறையினால் ஏற்பட்ட வாதம் என பல கூறுகளை முன் வைத்து மாற்றத்திற்குக் காரணமாகச் சொல்லலாம்.
பெண் படைப்பாளிகளின் கவிதைகளில் ஆண், பெண் முரண் ஆணாதிக்கம், சீதனம், கல்வி கற்கப் போதல் தடை, இன்னும் பாலியல் வல்லுறவு போன்ற கருப்பொருளாக கவிதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளனர்.
சில நேரங்களில் ஒரு பெண் பல வகை அடக்கு முறைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக குடும்பம், சமூகம், தனி மனிதன், அரசு, சூழல் போன்ற பல வகை அடக்கு முறைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்படுகின்றாள்.
1980களின் பின்வந்த பெண் படைப்பாளிகள் பெண்களுக்கு விளைவிக்கப்படும் தீவிர கொடுமைகளுக்கு எதிராக கவிதைகளில் குரல் எழுப்பி சமூக மாற்றத்தை கொணர்ந்ததை குறிப்பிடுவதவசியம்.
ஈழத்து பெண் படைப்பளிகளில் பெண்ணிலை வாதம் பேசியவர்களில் மிக முக்கியமானவர்கள் சங்கரி, அஷ்ரபா நூர்தீன், பாமதி, கலை மகள் கிதாயா, சுல்பிகா, வானதி, பாரதி என தொடர்கிறது இவ்வாறு ஆணாதிக்கம் சமூக அடக்கு முறை பாலியல் வல்லுறவு பற்றி தங்கள் கவிதைகளில் பேசியவர்களில் முக்கியமானவர் அஷ்ரபா நூர்தீன் இவரின் முதற் கவிதை தொகுதி ஆகக் குறைந்த பட்சம் (2012) நீங்களும் எழுதலாம் வெளியீடாக வந்துள்ளது.
அஷ்ரபா நூர்தீனின் கவிதைகளில் கவிதா மொழியின் இயங்கு நிலை தனித் தன்மை பெற்றிருக்கின்றது. ஒரு பெண்ணின் பன்முக அவலங்களை வேட்கையுடன் அவர் படைப்புக்களில் காட்சிப்படுத்தும் விதம் உரத்த குரலாக அமைந்துள்ளது. அஷ்ரபாவின் “ஆகக்குறைந்த பட்சம்” எனும் தொகுதியின் முதற் கவிதையில்
உண்பதற்கு உணவும்
உடுப்பதற்குத் துணியும்
வாழ்வதற்கு உரிமையும்
அவளுக்கு
வழங்கச் சொன்னது இஸ்லாம்
இவ்வரிகளில் இஸ்லாம் ஒரு பெண்ணின் உரிமைகளை வழங்கி விட்டது. எனினும் இஸ்லாமிய பெயர்களில் வாழ்பவர்கள் அல்லது தங்களுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டிக் கொண்டவர்கள் மேலும் பொதுத் தன்மையுடன் சொல்வதாயின் சமூகம் பெண்ணை அடிமையாகவும் கயமைத்தனத்தால் தீண்டப்படும் அவலத்தின் துயர்தலையும் பெண்ணுக்கும் உணர்வுகள் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என கருத்து தொனிவதையும் அவதானிக்கலாம்.
மூலை முடுக்கெங்கும்
நீலத் திரைக்குள்
மூல்கிக் கிடக்கும்
வாலிபமும் வயோதிபமும்
தன் வெறி தீர்க்க
குறி நிமிர்த்தி அலைகிறது
“சில நண்பர்களுக்கும் சில உறவினர்களுக்கும் இன்னும் சில மனிதர்களுக்கும்” என்னும் கவிதைகளின் வரிகள் இவை ஒழுங்கு படுத்தப்படாத உணர்வலைகளும் சரி செய்யப்பட வேண்டிய மனதின் பின்னங்களும் இன்னும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பால் நிலை பதிவுகளும் என இக்கவிதை வடிவத்தை அறிந்து கொள்ள போதுமான பொறிகளாக அது நம் மனதில் உரசிகிறது.
அஷ்ரபாவின் “உன்னை உனக்கு உணர்த்தாமலே” கவிதையின் சில வரிகள்
முட்களே நிரம்பிய
ஆண்கள் உலகத்தில்
பூக்கள் யாவும்
மௌனமாய் இரத்தத்தில் தோய்கின்றன
நமது அடிமைத் தனம்
வீறிட்டழுதிடிமும்
விடிவற்ற நமது பரம்பரை
இங்கு நீயும்
இன்னோர் புழுவாய்
அஷ்ரபாவின் இக்கவிதையினூடாக எவை உரத்துப் பேசப்படுகின்றன என நேர் எதிர் மறையாக இனங்காண எனக்கு சிறிது நேரம் பிடித்தது தொப்புள் கொடியறுபட்டு ஜனித்து வேறாகி அழகு காட்டும் குழந்தையின் நாளை பற்றியதான முன்யோசித்தல் பொதுவாக எவருக்கும் வரலாம். அவ்வாறான யோசித்தலின் குறிப்பாகத் தான் தான் சார்ந்த வாழ்வியலின் அதிகாரப் பலம் என்ற போர்வையில் நடக்கும் அத்தனை கொடூரங்கள் மீதும் கசப்புணர்வு கொண்டவள் எனும் பிரக்மையுடன் இக்கவிதை அமைந்துள்ளது.
வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும்
நீ ஒரு ஆண் என்பதை நிருபிக்கும்
எனதன்பு சிநேகிதனே
உனக்கு இன்னும் ஏன்
பெண் அடிமைத்தனம் பற்றிய
அதிக பட்ச அக்கறை
“இரு வேறுலகங்கள்” என்ற அஷ்ரபாவின் கவிதையில் பெண் வெறும் சடம் என்றும் ஆண் வீரத்தின் சொந்தக் காரனாகவும் நோக்கும் சமூகத்தின் அசமத்துவத்தை இக்கவிதை சொல்லி நிற்பதோடு ஆணும் பெண்ணும் சமத்துவமானவர்கள் என்பதை கூறுகிறார்.
எப்போதும் எந்த நேரமும்
பருத்த தொடைகள் பற்றியும்
விரிந்த சடைகள் பற்றியும்
பெருத்த முலைகள் பற்றியும்
கவி மழை பொழிகின்றாய்
இது அஷ்ரபாவின் “இறக்கைகள்” கவிதையின் வரிகள் இக்கவிதை கவிஞனை விமர்சிக்கின்றது. குறிப்பாக பெண் உடல், பெண் சதை, பெண்ணின் மறைதலின் அழகு என எழுதும் படைப்பாளியை குறி வைத்து பெண்ணின் வலி எப்படி பிற பெண்களின் ஆன்மாவையும் வாழ்வியலையும் பாதிக்கின்றன என்று அஷ்ரபா அறிந்திருக்கிறார்.
அஷ்ரபாவின் குரல் பெண்களின் குரல்! கவிதைகள் பொதுத் தன்மை கொண்டவை! ஆனாலும் எதிலும் சில முரண்களிருக்கின்றன. அஷ்ரபாவின் படைப்புக்களிலும் அது எல்லைகளுக்கு அப்பால் நகர்ந்துள்ளது.
பெண்ணிலை வாதம் சார்பு நிலைப்பட்டவர்கள் விமர்சன ரீதியாகவும் அறச்சார்போடும் பேசப்படுவதுமுண்டு எனினும் மறைதலின் அழகு அல்லது மறைத்தலின் அழகு எனச் சொல்லப்படுகின்ற பெண் உடல் ஆண் உடல் பற்றிதான வெளிப்படைத் தன்மை சில நேரங்களில் முகம் சுளிக்க வைக்கின்றது ஆனாலும் பெண்களின் துயரத்தையும் பாதிப்பையும் முதன்மையாகக் கொண்ட அஷ்ரபா கவிதைகள் பல வகை உணர்வுகளின் இடை விடாத தீவிரக் கொந்தளிப்பின் வெளிப்பாடு.
ஏ. நஸ்புள்ளாஹ்