முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று (சனிக்கிழமை) முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்தார்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 824ஆவது நாளாக, தமது உறவுகள் எங்கே எனக்கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பெருமளவான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





