சர்வதேசத்தின் கொள்கைகளுக்கு இணங்கசெயற்படுவதனாலேயே இந்த அரசாங்கத்துக்கு நாட்டை முறையாக வழிநடத்த முடியாது போயுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளினாலேயே தாங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தறையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்காக பணியாற்றியிருந்தோம். அந்தத் தேர்தலில் எமது தரப்பு தோல்வியடைந்ததை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்தார்.
கட்சி அவருக்கு வழங்கப்பட்டதையடுத்து, அரசாங்கத்துடன் எமது கட்சி சில காலம் இணைந்து செயற்பட்டது. எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் எமக்கு திருப்தியளிக்காத காரணத்தினால், நாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறி, தற்போது மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துக் கொண்டுள்ளோம்.
இப்போது, இந்த அரசாங்கத்தை வெளியேற்ற முழு வீச்சுடன் செயற்பட்டு வருகிறோம். இந்த நான்கரை வருடங்களில் இந்த நாடு அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, இந்த அரசாங்கத்தை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை.
சர்வதேசத்தின் கொள்கைக்கு இணங்கவே இந்த அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது.இதனால், பாதுகாப்பு, வாழும் உரிமை, தனி மனித சுதந்திரம் என அனைத்தும் இன்று இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.” என கூறினார்.





