
பேருக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இடம்பெற்றது
இதன்போது பிரதேச செயலகம், மாகாண காணி திணைக்களத்தில் இதை நடைமுறைப்படுத்த போதிய ஆளணி இல்லையென கூறப்பட்டது. இருப்பினும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை இணைத்து காணி உறுதி வழங்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.
இதேவேளை மகாவலி, தொல்லியல் மற்றும் வனத் திணைக்களத்தின் காணி சர்ச்சைகள் குறித்து ஆராய சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்ய முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்தோடு முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. இந்த விடயம் தொடர்பாகவும் மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள், ஆளுனர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்ட கூட்டமொன்றை விரைவில் கூட்டி ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாகாணத்தில் நில அளவையாளர், வரி மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பல வெற்றிடங்கள் இருப்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு ஓய்வுபெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் செயற்பட விண்ணப்பிக்குமாறு இரண்டு தடவை ஊடகங்கள் வாயிலாக தான் அறிவித்தும் எவரும் முன்வரவில்லை என ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஆளணி பற்றாக்குறை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந்த பிரச்சினையை தீர்க்க ஓய்வுபெற்ற வைத்தியர்களை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
