ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான ஜி-20 மாநாடு வரும் ஜூன் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் ஜப்பானில் நடைபெறவுள்ளது. அதில் அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், இம்மாநாட்டின் போது ட்ரம்ப் மற்றும் புடின் ஆகியோருக்கிடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி அலுவலகமான கிரெம்லின் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரெம்லின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஷ்கோவ், “ஜப்பானில் இம்மாதம் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின் போது புடின் மற்றும் ட்ரம்ப் சந்திப்பை எதிர்பார்க்கலாம். இந்த சந்திப்பில் எதுவும் இடம்பெறலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பனிப்போர் நடந்துவரும் நிலையில் இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பை உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





