ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஜூன் 13, 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஷங்காய் ஒத்துழைக்கு மாநாட்டில் இந்திய பிரமதர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டின் போது, இரு தலைவர்களும் ஒரே இடத்தில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதால், இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ்குமார் கூறுகையில் ‘‘இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பில்லை. இதற்கான எந்த திட்டமிடலும் செய்யப்படவில்லை’’ எனக் கூறினார்.
கடந்த பெப்ரவரியில் புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பின் தற்கொலை படைத்தாக்குதலில் 40 படைவீரர்கள் உயிரிழந்தனர். இதன்பின்னர், இருநாடுகளிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சு மீண்டும் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





