ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது.2015 முதல் 2018 ஆண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைக்கேடுகள் குறித்து ஆராய்வற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, சுகாதார அமைச்சின் கீழுள்ள நிறுவனம், பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஶ்ரீலங்கா விமான நிறுவனம், விவசாய அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள் சிலருக்கு எதிராகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், இதன் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





