
அரசு, மக்களுக்கு பாரியளவில் சேவைகளை வழங்கி வருவதாக, ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
ஃபோர்ட் பெஸ்ட் என்னும் வருடாந்த பார்பிக்கியூ நிகழ்வில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த காலங்களில் ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களை விடவும் முற்போக்கு பழமைவாத அரசாங்கம் ஓராண்டு காலப் பகுதியில் பல்வேறு விடயங்களை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, குரோதப் பேச்சு, இனவாதம், மத விரோதப் பிரசாரங்கள் போன்றவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன்’ என கூறியுள்ளார்.
டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சியின் ஒன்ராறியோ அரசு, முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்த போதும், அவை பலராலும் அதிகம் விமர்சிக்கப்பட்டவொரு விடயமாகவே இருந்தது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில், மிக முக்கியமாக அகதிகள் மற்றும் குடிவரவாளர்களுக்கான சட்டச் சேவைகளுக்கான நிதி முற்றாக நீக்கப்பட்டிருந்ததனை, பலரும் மோசமாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
