LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 27, 2019

தவக்கால சிந்தனைகள் ( சீராக் ஆகமம் தரும் ஞானமுள்ள வார்த்தைகள்)

ஞானம் என்பது . . .
'ஞானமெல்லாம் ஆண்டவரிடத்திலிருந்தே வருகின்றது. அது என்றும் அவரோடே இருக்கின்றது.
கடற்கரை மணலையோ, மழைத் துளிகளையோ, முடிவில்லாக் காலத்தையோ யார்தான் கணக்கிட முடியம். வான வெளியின் உயரத்தையோ, நிலவுலகத்தின் அகலத்தையோ, ஆழ்கடலையோ, ஞானத்தையோ யார்தான் தேடிக் காண்பர்?
எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டதுடன் கூர்மதி கொண்ட அறிவுத் திறன் என்றென்றும் உள்ளது.
(உயர் வானிலுள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று| என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள்)
ஞானத்தின் ஆணி வேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவன் யார்? (ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்து கொண்டவர் யார்?)
ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்| தன் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்குரியவர்.'

எது சரி, எது தவறு? என்றும், நீதியானது எது, உண்மை எது, பொய் எது என்றும், தவறனது எது? என்று பிரித்தறியும் வல்லமை ஞானமாகும். ஞானம் இறைவனால் அருளப்படுகின்றது. அதற்கென்று விசேட கல்வி எதுவும் தேவையில்லை. படிப்பறிவில்லாதவன் கூட ஞானத்தை அடைந்து கொள்ள முடியும். திறந்த மனதும், அதற்கான ஆவலும் மனதில் இருந்தால், ஞானத்தை இறைவனிடம் இருந்து அடைவது கடினமாக இராது.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்

ஞானம் என்பது . . .
'அவரே ஞானத்தைப் படைத்தவர், அதைக் கண்டு கணக்கிட்டவர், தம் வேலைப்பாடுகளையெல்லாம் அதனாலே நிரப்பியவர்.
தம் ஈகைக்கேற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்.  தம் மீது அன்பு கூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.
ஆண்டவரிம் கொள்ளும் அச்சமே மாட்சியும், பெருமையுமாகும். அதுவே மகிழ்ச்சியையும், அக்களிப்பையும்,  நீடிய ஆயுளையும் வழங்குகின்றது. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது| ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது முடிவு மகிழ்ச்சிக்குரியதாய் அமையும். அவர்கள் இறக்கும் நாளில் ஆசி பெறுவார்கள். ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம். அது இறைப் பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றில் இருக்கும்போதே அருளப்படுகின்றது. ஞானம் மனிதரின் மத்தியில் முடிவில்லாத அடித்தளத்தை அமைத்துள்ளது. அவர்களது வழி மரபினரிடையே நீங்காது நிலைத்திருக்கும்.'

ஞானம் என்னும் கொடையானது தாய் வயிற்றில் இருக்கின்போதே அருளப்படுகின்றது. தன் தாய் மூதாட்டி வயிற்றிலே ஆறு மாத காலமான யோவான் சிசுவாக இருந்தபோது, அங்கு விரைந்து வந்த மரியாளின் வாழ்த்துரைகளைக் கேட்டபோது அக் குழந்தை அந்த வாழ்த்தை அடையாளம் கண்டு மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கிறது. அபிமன்யு தாயின் வயிற்றில் இருக்கின்றபோது அவளது தமையன் கிருஷ்ணன் அவள் துயிலும்போது சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைவது பற்றி உபதேசிக்கிறான். ஆனால் அதை உடைத்துக் கொண்டு வெளிவருவது பற்றி சொல்லுமுன்னே அந்த இடத்தை விட்டுப் போய் விடுகின்றான். அர்ச்சுனனும், கண்ணனும் இல்லாத வேளை பார்த்து கௌரவர்கள் சக்கர வியூகம் அமைத்து போருக்கு அறை கூவல் விடுத்தபோது அதை எதிர் கொள்ளும் அறிவு அபிமன்யூக்கு மாத்திரம் இருந்தது. அவன் வெற்றியோடு உள்ளே நுழைந்த போரிட்டாலும் அதிலிருந்து வெளிவரும் அறிவு அவனிடமில்லாத காரணத்தினால் சூழ்ந்து வந்த எதிரிகளால் வீழ்த்தப்படுகின்றான். ஞானம் எங்கள் பிறப்புரிமையாக இறைவனால் வழங்கப்படுகின்றது. அதை இனங் கொண்டு வளர்த்துக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு!

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்

ஞானம் என்பது . . .
'ஞானம் மாந்தரின் நடுவே முடிவில்லாத அடித்தளத்தை அமைத்துள்ளது. அவர்களது மரபு வழியினரிடையே நீங்காது நிலைத்திருக்கும். ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் நிறைவு. அது தன் கனிகளால் மனிதருக்குக் களிப்பூட்;டுகின்றது.
அது அவர்களின் இல்லங்களை விரும்பத்தக்க நலன்களால் நிரப்பிவிடும்| தன் விளைச்சலால் அவர்களது களஞ்சியங்களை நிறைத்திடும்.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் மணிமுடி| அது அமைதியைப் பொழிந்து உடல் நலனைக் கொழிக்கச் செய்கிறது. ஆண்டவரே அதனைக் கண்டு கணக்கிட்டார்| அறிவாற்றலையும், நுண்ணறிவையும்  மனிதருக்கு மழையெனப் பொழிந்திட்டார்| அதை உறுதியாய்ப் பற்றிக் கொண்டோரை மாட்சிமையால் உயர்த்திட்டார்.'

ஞானம் நிறந்த உள்ளம் கடவுளின் தகமையால் நிறைந்திருக்கும். நீதிமானாக வாழும் அந்த மக்களுக்கு அருளும், நலனும், செல்வமும் என்றும் குறைவில்லாமல் இருந்து கொண்டேயிருக்கும். காலத்தையும், ஞாலத்தையும் பற்றிய அறிவு அவர்களிடத்தில் நிறைந்திருப்பதால் காலத்தே பயிர் செய்யவும், அதன் அறுவடையை நிறைவாக அனுபவிக்கவும் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டும்.

சாலமோன் சிறுவனாக இருந்தபோதே இறைவன் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, நுண்ணறிவு கொண்டவனாக ஞானத்தை அருளுமாறு வேண்டிக் கேட்டான். அது அவனுக்கு நிறைவாகக் கொடுக்கப்பட்டது. அதனால் பூமியின்  நீள அகலத்திற்கு மாட்சியோடு அரசாள அவனுக்கு அருள் கிட்டியது.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்

ஞானம் என்பது . . .
'ஆண்டவிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் ஆணிவேர்| அதன் கிளைகள் நீடிய வாழ்நாட்கள். (ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் பாவங்களை விரட்டி விடுகின்றது| அது இருக்கும்போது சினத்தையெல்லாம் அகற்றி விடுகின்றது)
பொறுமையும் தன்னடக்கமும் :
நேர்மையற்ற சினத்தை நியாயப்படுத்த முடியாது| சினத்தால் தடுமாறுவோர் வீழ்ச்சியடைவர். பொறுமையுள்ளோர் தக்க காலம் வரை அமைதி காப்பர்| பின்னர் மகிழ்ச்சி அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும். ஆவர்கள் தக்க காலம் வரை நா காப்பர்| பலருடைய வாயும் அவர்களது அறிவுக் கூர்மையை எடுத்துரைக்கும்.'

எத்தவர் காக்கினும் நா காக்க, காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்கிறது குறள். பொறுமை மிகவும் பெறுமதியானது| வலிமையானது. நம்மை அடக்கியாள அது நமக்கு வழிகாட்டும். நமக்கு முன் வந்து எதிர்த்து நிற்கும் எந்தப் பலசாலியையும் தோற்கடிக்க வல்ல வல்லமையை தந்து நிற்கும். அதனால்தான் பொறுத்தார் அரசாள்வார் என்கின்றோம். பொறுமை நம்மை நீங்கும்போது ஆத்திரமும், அவசரமும் நம்மில் குடி கொள்கின்றது. இதனால் நம் தெளிவும் விடைபெற்று விடுகின்றது. தெளிவில்லாத நிலையில் நாம் எடுக்கும் எந்த முடிவும் பிழைத்துப் போகவே செய்யும். அவசரமாகச் செயற்படவும், அதனால் நிதானம் தவறவும் செய்கின்றது.

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்

ஞானமும், ஒழுக்கமும்:
'ஞானத்தின் கருவூலங்களில் அறிவார்ந்த பொன் மொழிகள் உண்டு| பாவிகளுக்க இறைப்பற்று அருவருப்பைத் தரும். ஞானத்தை நீ அடைய விரும்பினால், கட்டளைகளைக் கடைப்பிடி. ஆப்போது ஆண்டவரே உனக்க ஞானத்தை வாரி வழங்குவார்.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானமும் நற்பயிற்சியுமாகும்| பற்றுறுதியும் பணிவும் அவருக்கு மகிழ்ச்சி தரும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தைப் புறக்கணியாதே| பிளவுபட்ட உள்ளத்தோடு அவரிடம் செல்லாதே.
மனிதர் முன் வெளி வேடம் போடவேண்டாம்| நாவடக்கம் கொள். நீ வீழ்ச்சியுறாதவாறு செருக்கு கொள்ளாதிரு| உன் மீதே மானக் கேட்டை வருவித்துக் கொள்ளாதே.  ஆண்டவருக்கு அஞ்சி நடக்காமலும், மனதில் கள்ளம் கொண்டிருந்தாலும் ஆண்டவர் உன் மறைவான எண்ணங்களை வெளிப்படுத்துவார். அனைவர் முன்னிலையிலும் உன்னைத் தாழ்த்துவார்.'
ஞானம் மனதில் இருக்கின்றபோது அதுவே நமது பாதையைச் செப்பனிட்டு நம்மை வழி நடத்தும். செருக்கு நமது நாவின் கட்டுக்களை அவிழ்த்து விட  நம் பேச்சே நம்மை இழிவுபடுத்தம் நிலையை நாம் உருவாக்கிக் கொள்ளுவோம்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்

விபூதிப் புதன்
'ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால் சோதனைகளை எதிர் கொள்ள முன் ஏற்பாடுகளைச் செய்து கொள். உள்ளத்தில் உண்மையானவானாய் இரு| உறுதியாக இரு. துன்ப வேளையில் பதற்றத்துடன் செயலாற்றாதே. '

இன்று முதல் தபசு காலம் முடியும் வரை நாளும் ஒரு சிலுவைப்பாதை சிந்தனையை செய்வோம். இந்தக் காலத்தைத் தக்க முறையில் எம்மை மாற்றியமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுவோம்.

சிலுவைப் பாதை பாடுகளின் பாதை மட்டுமல்ல
நம் வாழ்வின் பாதையுங் கூட.

மனிதனாக நான் வாழ
சிலுவைப் பாதை
என்னைச் சிந்திக்கச் செய்கிறது.

அந்தச்  சிந்தனை ஒரு தியானமாகி
எனக்குள் ஒரு முறை
நானே உற்று நோக்கி
தெரிகின்ற குறைகளை, நிறைகளை
சீர்தூக்கிப் பார்த்து
ஒரு முழுமையான மனிதனாக என்னை மாற்ற
சிலுவைப்பாதைச் சம்பவங்கள்
என்னைத் தூண்டுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டின் முன்னே
நடந்து முடிந்துவிட்ட
வெறும் சம்பவமல்ல இது.

நம் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கும்
நிகழ்வுகள் இவை.

துன்பப்பட்டவன் வாழ்வு இது.
துன்பப்படுபவன் வாழ்வுக்கு வழியும் இது.

எனவே,
சிலுவையின் பாதையில் நாம் நடப்போம்
சிந்திக்கும் பாதையில் நாம் நடப்போம்
புறக் கண்களை மட்டுமல்ல
அகக் கண்களையும் கூட திறந்து நடப்போம்.

முதலாம் நிலை
இயேசு சாவுக்குத் தீர்வையிடப்படுகிறார்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.

'தீயோனின் அறிவுரைப்படி நடவாதவன், பாவிகளின் வழியில் செல்லாதவன், பழிகாரர் கூட்டத்தில் அமராதவன் பேறுபெற்றவன்'
'நீதித் தீர்ப்பு வரும்போது தீயோர் நிலை குலைந்து போவர்; நல்லவர் சபையில் பாவிகள் நிலைத்திரார்.'
(சங். 1 : 1 மற்றும் 4)
வஞ்சகம் அறிவுக்குத் திரைபோட, வெஞ்சினம் கண்களை மறைக்க சதிகாரர் ஆடுகின்ற ஆட்டம்.
உதிக்கும் சூரியனில் கரிக்கும், கறைக்கும் இடமிருப்பதாக நயவஞ்சகரின் கொக்கரிப்பு.
சேற்றின் நடுவே இருந்தாலும் தாமரையில் ஏது சேறு? பாவிகள் நடுவே வாழ்ந்தாலும் இயேசுவில் பாவக்கறை இருக்க முடியுமா?
பரபாசுக்கும்,  பரமனுக்கும் வித்தியாசம் புரியாத அறிவிலிகள் நடுவே பதவிக்காக நீதியைக் கைகழுவி விடும் பிலாத்துக்கள்.
வாழவைக்க வந்த தெய்வம் வாழாவெட்டியாகப் போனதிங்கே.
தன் கண்ணில் குத்தி நிற்கும் நாட்டுக் கட்டையைக் கண்டு கொள்ளாமல், கண்டு கொள்ள மனமில்லாமல், அயலவன் கண்ணில் தூசைக் காட்டும் அவல ஜீவன்கள் நடுவே ஒரு உத்தமர் இங்கே மௌனியாக!
நீதி ஸ்தலத்திலே சத்தியம் வாயடைத்துப் போயிற்று உண்மை ஊமையாயிற்று!! மனதில் மட்டும் நீதி எப்படி வரும்?
சிந்திப்போம்:
பிறர் செய்த செயல்களைப் பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு எனக்கு மனம் தந்தீரே, இறiவா உமக்கு நன்றி!
பிறரைத் தீர்ப்பிட்டு அவரது மாண்பைச் சிதைக்கின்ற மனிதனாக நான் வாழாமல் இருக்க வழிகாட்டிய இறiவா உமக்கு என் நன்றி!
தேவையான இடத்தில் வாய் திறந்து நீதிக்காக்குரல் கொடுக்கத் துணிவை எனக்குத் தந்தமைக்காகவும் இறiவா எனது நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!

'ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக் கொள்| அவரை விட்டு விலகிச் செல்லாதே. உனது வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய். என்ன நேர்ந்தாலும் ஏற்றுக் கொள். இழிவு வரும்போது பொறுமையாய் இரு.
நெருப்பில் பொன் புடமிடப்படுகின்றது| ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.'

இறைமகன் இயேசுவும் தமது திருப்பாடுகளின் வாயிலாக புடமிடப்படுகின்றார்| அதனாலே உயர்வடைகின்றார்!

இரண்டாம் நிலை
இயேசுவின் தோள் மீது சிலுவை சுமத்தப்படுகின்றது .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'பாவியானவன் தீமையைக் கருத்தரிக்கின்றான்; தீவினையைக் கருவாகக் கொண்டிருக்கின்றான்;,  வஞ்சகத்தைப் பெற்றெடுக்கின்றான்.
'குழியைப் பறிக்கிறான், அதை ஆழமாக்குகிறான்;;;, தான் பறித்த குழியில் தானே விழுகிறான்.
'அவன் செய்யும் தீமை அவன் தலைமேலேயே வந்து விடும். அவன் செய்த கொடுமை அவன் மேலேயே படும்.'
(சங் 7: 14, 15)
உலகத்தைச் சுமக்கும் தோளுக்குச் சிலுவை ஒரு பாரமா? ஆனாலும் இயேசுவுக்கு அது பாரமாக இருக்கிறது.
கொடியை மீறிக் காய்கள் பெருத்துவிட்டால், கொடியே நழுவிச் சரிவதில்லையா? உலகின் பாரத்தைவிட அதன் பாவங்கள் கனமானவை. எனவேதான் சிலுவை கனக்கிறது.
அவமானச் சின்னம் அதைத் தோளில் ஏற்றி, அனந்தக் களிநடனம் புரியும் அரக்கர் கூட்டம், எப்படி அது தன்மானச் சின்னமாக – வெற்றியின் சின்னமாக மாறி விட்டது என்பதை உணர்ந்து கொள்ளப்போகிறது?
பாமரர் கூட்டமல்ல அது பரத்தையர் கூட்டம்! ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சொன்னதைச் செய்யும் கூட்டம். காசைக் கண்டால் கடவுளையே விற்கத் தயங்காத கூட்டம். அதன் நடுவே இயேசு.
தலையிலே முள்முடி, உடலெல்லாம் கசையடி.
அவரை அழிக்க எண்ணியோர் வெட்டுகின்ற குழி, தமது கால் வரை சரிந்து விட்டதை இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை.

சிந்திப்போம்:
என் வாழ்வில் எதிர்ப்பட்ட பொறுப்புக்களை – சுமைகளை – பொறுமையோடு ஏற்றுச் சுமக்க மனவலிமையைத் தந்த இறiவா உமக்கு நன்றி!
தன்மானம் பெரிதென எண்ணி, காற்றடிக்கும் திசையெலலாம் கருத்துமாறி, செயல்மாறித் திரியாது, நேழ்மையாய் வாழும் மனப் பக்குவத்தைத் தந்த இறiவா உமக்கு நன்றி!
மற்றவர் அழிவு கண்டு மகிழ்கின்ற மனம் எனக்கில்லை இறiவா, உமக்கு என் நன்றி!
என் சுமையை மற்றவர் மீது போட்டுவிட விரும்பாத உணர்வை எனக்களித்தமைக்கும் நன்றி இறiவா!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!

'ஆண்டவரிடம் பற்றுறுதி கொள், அவர் உனக்குத் துணை செய்வார்| உன் வழிகளைச் சீர்படுத்து, அவரிடம் நம்பிக்கை கொள் !
ஆண்டவருக்கு அஞ்சுவோரே அவரிடம் இரக்கத்திற்காக காத்திருங்கள். நெறி பிறழாதீர்கள்| பிறந்தால் வீழ்ச்சி அடைவீர்கள். ஆண்டவருக்கு அஞ்சுவோரே அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குக் கைமாறு கிடைக்காமற் போகாது.'

ஆண்டவரிடம் கொள்ளும் நம்பிக்கை எந்த அளவுக்கு உறுதியானதாய் இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த நம்பிக்கை நமக்கு வரம் அருளுகின்றது.

மூன்றாம் நிலை
இயேசு முதல் முறை நிலத்தில் வீழ்கிறார் .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'எளியோர் படும்  துன்பத்தின்  பொருட்டும்,  ஏழைகள்  விடும்  பெருமூச்சின்  பொருட்டும்  இதோ  நான்  எழுகிறேன் | பாதுகாப்பு  வேண்டுபவனுக்கு அதை நான் அளிப்பேன்.'  என்றார்  ஆண்டவர்
சங் . 11: 3)
பலவீனங்களே வீழ்ச்சிக்கு வழிகோலுகின்றன. ஆன்மாவில் வலுவிருந்தும் உடலில் நலிவிருந்ததால் இயேசு இங்கே வீழ்ந்து கிடக்கின்றார்.
மரமொன்றின் வளர்ச்சியோடு வைரம் அங்கே சேராவிட்டால், காற்றை எதிர்த்து நிற்க முடியுமா? உடல் பலத்தோடு ஆன்மீக பலமும், உளப்; பலமும் தேவை.
வாழ்க்கை அனுபவங்கள் வெறும் சம்பவங்களாகவே போய் விட்டால், பெய்த மழைக்கு அடித்துவரும் இன்னுமொரு காட்டாற்று வெள்ளந்தான். அது தங்கி நிற்க வேண்டும்; குளமாக வேண்டும், வளம் சேர்க்க வேண்டும். அனுபவம் தருகின்ற உறுதிதான் விழுந்தாலும் மீண்டும் எழுந்து வர தைரியத்தைக் கொடுக்கிறது.
பாதைகளில் பள்ளமும் படுகுழியுமென்றால் பயணம் சீராக அமைவதுண்டா? உள்ளத்தில் கரடுமுரடென்றால் வாழ்க்கைப் பயணம் நேராய் அமைந்திடுமா? தடுக்கி விழுதல் - பாவத்தில் இடறி விழுதல் - அங்கே புதுமையன்று.
சிந்திப்போம்:
உடல் சோர்ந்து வாடினாலும், உள்ளம் வாடாது உறுதியோடு வாழ எனக்கு வரம் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
உள்ளம் நலிவுற்று, வாழ்வில் துன்புற்றாலும் உம்மிலே நம்பிக்கை வைத்து வாழ வரம் தந்த இறiவா உமக்கு நன்றி!
போகின்ற எனது வாழ்க்கைப் பயணத்திலே, நான் தவறிலே தடுக்கி விழுந்தாலும் மீண்டும் அதினின்றும் விடுபட்டு என் வாழ்வைச் செவ்வனே தொடர அருள் ஈந்த இறiவா உமக்கு நன்றி!
என் உள்ளம் கலங்கித் தடுமாறும்போதெல்லாம் என் அருகில் நின்று என்னைத் தேற்றிப் பலம் தந்த இறiவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!


'ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்| பாவங்களை மன்னிப்பவர். துன்ப வேளைகளில் காப்பாற்றுகிறவர்.
கோழை நெஞ்சத்தவருக்கும், ஆற்றலற்ற கையருக்கும், இரட்டை வேடமிடும் பாவியர்க்கும் ஐயோ கேடு வரும்!
உறுதியற்ற உள்ளத்தினருக்கும் ஐயோ கேடு வரும்|  ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை| எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு இராது.'

ஆண்டவரிடம் கொள்ளும் பற்றுறுதி நமக்கெல்லாம் காப்புறுதி போலானது. எந்த ஆபத்து நடந்தாலும் அது நம்மைக் காப்பாற்றும், நமக்கேற்படும் பிரச்சினைகளிலிருந்து பாதிப்பில்லாமல் வெளியே வர துணை செய்யும். எனவே இறைவன் மீது நம்பிக்கை கொள்வது நம்மைப் பலப்படுத்திக் கொள்ள அதி சிறந்த வழியாக இறைவனாலேயே நமக்கு அருளப்படுகின்றது.

நான்காம் நிலை
இயேசு தன் தாயாரைச் சந்திக்கின்றார் .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'ஆண்டவரே உம் இல்லத்தில் தங்கி வாழ்வோன் யார்? உமது திருமலையில் குடியிருப்பவன் யார்?
'மாசற்ற வாழ்க்கை நடத்துபவன், நீதி நியாயத்தைக் கடைப்பிடிப்பவன், இதயத்தில் நேரியவை நினைப்பவன்!
'நாவால் எப்பழிச் சொல்லும் கூறாதவன், அயலவனுக்குத் தீமை செய்யாதவன் ; பிறரைப் பழித்துரைக்காதவன்;
'தீயோரை இழிவாகக் கருதுபவன், ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்;,
'தனக்குத் துன்பம் வந்தாலும், தந்த வாக்குறுதியை மீறாதவன், தன் பணத்தை வட்டிக்குக் கொடுக்காதவன், மாசற்றோருக்கெதிராக கைக்கூலி வாங்காதவன், இங்ஙனம் நடப்பவன் என்றும் நிலைத்திருப்பான்.'
(சங். 14 : 1 – 5)
ஆண்டவர் இயேசுவின் இல்லத்திலும், அவர்தம் உள்ளத்திலும் தங்கியிருக்கும் அன்னையவள் தன் வாழ்வில் கறையேதும் காணாதவள், பிறர் குறையேதும் சொல்ல இடம் வைக்காதவள்; துன்புறுகிறாள்!
துன்புறும் அன்னையைக் காண இயேசு அதிகம் வருந்துகிறார். அதிலும் ஆளுக்கு ஆள் ஆறுதல்!
காய்த்த மரமே கல்லெறிக்கும், பொல்லெறிக்கும் ஆளாகும். அதனால் காய்க்கின்ற மரமெல்லாம் இந்த அவதிக்கு ஆளாகின்றன என்றும் இல்லை.
நற்கனி தரும் மரம் படும் வேதனை நச்சுக் கனி தரும் மரத்திற்கு வருவதில்லை.
நீதிக்காக – நியாயத்திற்காக – உண்மைக்காக குரல் கொடுப்பவன் குரல்வளையே நசுக்கப்படுவதுண்டு.
பிறர் துன்பத்தில் ஆறுதலாய் இருக்க அவர் சுமைகளைக் குறைப்பதைவிட வேறு மார்க்கம் நமக்கு உண்டா?
சிந்திப்போம்:
நன்மை செய்து வாழவும், நீதிக்கு என்றும் துணை போகவும் எனக்கு மனமும், வாய்ப்பும் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
நாவால் தீமை புரியாமலும், பிறரைப் பழித்தொதுக்காமல் போற்றி வாழவும் என்னில் பண்பு வைத்தமைக்காக இறiவா உமக்கு நன்றி!
துன்புறும் அயலவன் மனக்குறையை ஆறுதலாகக் கேட்கப் பொறுமையைத் தந்த இறiவா உமக்கு நன்றி!
சொன்ன சொல் தவறாமல வாழவேண்டும் என்ற வேகத்தை என்னில் வைத்த இறiவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!

'உறுதியற்ற உள்ளத்தோரே உங்களுக்கும் ஐயோ கேடு|  ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை. எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு இராது.
தளர்ச்சிடைந்தோரே உங்களுக்கும் ஐயோ கேடு வரும் !  ஆண்டவர் உங்களைச் சந்திக்க வரும்போது என்ன செய்வீர்கள்?
ஆண்டவருக்கு அஞ்சுவோரே அவரது சொற்களைக் கடைப்பிடிப்பர்| அவர் மீது அன்பு செலுத்துவோர் அவர் தம் வழியைப் பின்பற்றுவர்.'

இறைவனைச் சந்திக்கின்றபோது நாம் என்ன செய்யப்போகின்றோம்? நாளொன்றுக்கு பல தடவைகளில் இறைவன் நம்மைச் சந்திக்கிறார். நமக்கு முன்பின் அறிந்திராத வேடங்களில் அவர் எம்மைச் சந்திக்க வருகிறார். அவரைச் சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோமா? அப்படிச் சந்திப்பதில் ஆவலாக இருக்கின்றோமா? இந்தத் தவக்காலத்தில் நம்மைத் தேடி ஏழை வடிவில், நாம் அறியாதார் வடிவில் அவர் வருவதை நாம் உணர்ந்து கொள்ளத் தயாரா? பல தடவைகளில் ஏழைகள் பொய்யர்கள் என்றும், நம்மை ஏமாற்றி பிழைப்பாக பிச்சை எடுக்கிறார்கள், உழைக்க விரும்பாதவர்கள் என்று அவர்களுக்கு உதவ முன்வராத நம் நடத்தையை நாம் நியாயப்படுத்த முயல்வதுண்டு. காரணங்களைக் கண்டு பிடிக்க முயல்வதனால் நம் பொறுப்புக்களிலிருந்து நாம் தப்பி விட முடியாது.  நம்மை நோக்கி உதவிக்காக நீட்டும் கரங்களுக்கு உதவி செய்வதே நம் கடன். உண்மையில் அக்கரங்கள் பொய்யானவையாக, நம் உதவிக்கு தகமையற்ற கரங்களாக இருக்குமனால் இறைவனே அதனைத் தீர்மானித்து அதற்கு வேண்டிய தண்டனை வழங்குவார். அதை விடுத்து மற்றவரைத் தீர்ப்பிட்டு நமது கடமையை அனாவசியமான காரணங்களால் நாம் பறக்கணிப்போமானால் அதற்கான தண்டனையையும் சேர்ந்தல்லவா நம்மீது வந்து சேரும்?
ஐந்தாம் நிலை
இயேசு சிலுவை சுமக்க சீரேனான சீமோன் உதவி செய்கின்றார் .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'இறiவா  என்னை  மீட்டருளும்; ; ஏனெனில்  வெள்ளம்  என்  கழுத்து  மட்டும்  பெருக்கெடுத்துள்ளது.
'ஆழ்ந்த  சேற்றில்  அமிழ்ந்திக்  கிடக்கின்றேன்,  கால்  ஊன்ற  இடமேயில்லை. ஆழ்ந்த  வெள்ளத்தில்  அகப்பட்டுக் கொண்டேன், வெள்ளம் என்னை மூழ்கடிக்கின்றது;
'கூவிக் கூவி களைத்துவிட்டேன், என் தொண்டையும் வறண்டு போயிற்று என் இறைவன் துணையை எதிர்பார்த்து  என்  கண்களும்  பூத்துப் போயின.' (சங். 68 : 1 – 3)
தண்ணீரில் தத்தளிக்கும் எறும்பு கூட உயிர் தப்பிக் கரை சேர சிறு துரும்பாவது கைகொடாதா என்றுதான் வழி பார்க்கும்.
மூச்சுமுட்டி, சுவாசம் தடைப்படும்போதுதான் காப்பாற்ற ஏதும் - யாரும் - அகப்படமாட்டார்களா என்று கை எட்டித் தாவுகின்றது.
தலையிடியும் காய்ச்சலும் தனக்கொன்று, பிறனுக்கொன்றா? பாதையிலே நெருஞ்சி முள். அது ஆள் பார்த்துக் குத்துவதில்லை. அது குத்தினாலும் வரும் வேதனையும், வலியும் சகலருக்கும் ஒன்றே!

சேற்றிலே சிக்கிவிட்ட யானையைத் தேரை கூட ஒரு முறை உதைத்துப் பார்க்குமாம்.

பொறியென்று தெரியாத நிலையில்தான் எலி உணவு தேடி அதிலே நுழைந்து மாட்டிக் கொள்கிறது. மாட்டிக் கொண்ட பிறகுதான் அறிவு வந்து ஒட்டிக் கொள்கிறது.;
நான் வாழ நீ சாகலாம் என்னும் மனம், நீ வாழ நான் சாவேன் என்கிறதா?
சிந்திப்போம்:
பிறரை எண்ணி அவருக்காக வாழும் மனப்பான்மையை எனக்குக் கற்பித்து வழி காட்டிய இயேசுவே உமக்கு நன்றி!
தன்னலத்தை ஒதுக்கிவிட்டுப் பிறர்நலத்திற்கு முதலிடத்தை என் வாழ்வில் கொடுக்க வரம் தந்த இறiவா உமக்கு நன்றி!
துணையின்றி பரிதவிப்பவர்க்கு உதவுகின்ற மனத்தையும், வாய்ப்பையும் எனக்குத் தந்த இறiவா உமக்;கு நன்றி!
நெஞ்சிலே காயப்பட்டு கண்ணீரில் தத்தளிக்கும் உள்ளங்களுக்கு இதம் தரக் கூடிய ஆறுதல் வார்த்தைகளை எனக்குள்ளே விதைத்து வளரப்பண்ணிய இறiவா உமக்கு நன்றி!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
'ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவர்தம் விருப்பத்தையே தேடுவர். அவரிடத்தில் அன்பு பாராட்டுவோர் அவர்தம் திருச்சட்டத்தில் நிறைவு அடைவர்.
ஆண்டவருக்கு அஞ்சுவோர் முன்னேற்பாடாய் இருப்பர். அவர்தம் திருமுன் தங்களைத் தாழ்த்திக் கொள்வர்.
ஆண்டவரின் கைகளில் நாம் விழுவோம்| மனிதரின் கைகளில் விழ மாட்டோம்,  ஏனெனில், அவருடைய பெருமையைப் போன்று அவரது இரக்கமும் சிறந்தது என்று அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.'
கடவுளிடம் தஞ்சம் புகுவோர் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையேயில்லை. அவரே நமது பாதுகாப்பும், அரணுமாக இருப்பார். தீமை அதை நெருங்கவே முடியாது. அவர் நம்மைப் புல்லுள்ள இடங்களின் மேற்கே அமர்ந்த  தண்ணீரண்டை அழைத்துச் செல்வார்.
ஆறாம் நிலை
இயேசுவின் திருமுகத்தை வெரோனிக்காள் துடைக்கிறாள் .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'எனக்குத்  தீமை  செய்தோரை எதிர்ப்பது யார்? என் சார்பாக எழுந்து பேசுவது யார்? தீமை செய்தோரை எதிர்த்து என் சார்பாகப் பேசுவது யார்?
'ஆண்டவர் எனக்குத் துணை செய்திராவிடின், விரைவாகவே என் ஆன்மா கீழுலகம் சென்றிருக்கும்.
' 'இதோ என் நடை தள்ளாடுகிறது ' என்று நான் நினைக்கையில், ஆண்டவரே, உம் அருள் என்னைத் தாங்குகிறது.' (சங். 93 : 16 – 18)
படரத் துடிக்கும் கொடிக்கு அங்கே கொழுகொம்பு அவசியம்; அது இயற்கை நியதி!
வாழ்வில் துடிக்கும் உயிருக்கு உதவிக்கரம் அங்கே நீள வேண்டியதும் அவசியம்.
தேவையென்றால் ரோஜா மலர் பறிக்க அதன் மரத்தின் முட்களின் உறுத்தலை நாம் தாங்கிக் கொள்வதில்லையா? அவசியமென்றால் எம் உயிரையே பணயம் வைத்து நமக்கொரு நன்மையைத் தேடிக் கொள்வதில்லையா?
புற்றைக் கட்டச் சிரமப்படுகிறது கறையான்;| அது தான் குடியமரவா அதைக் கட்டுகிறது?
அயலவன் துன்பத்தில் ஆறுதல் கொடுக்க நமக்கு இன்னுமேன் தயக்கம்? நம் பயணத்தில் நடை தளர்ந்து தள்ளாடும்போது இறைவன் என்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் எனக் கேட்கிறோம்.
அடுத்தவனின் கால் பலமிழக்கும்போது, கால் கொடுக்க வேண்டாம், ஒரு தோள் கூடவா கொடுத்து அவனை உறுதிப்படுத்தக் கூடாது?
சிந்திப்போம்:
எனக்கு வரும் தீங்கையும், இழப்பையும் எண்ணாமல் அடுத்தவர் கண்ணீரைத் துடைக்கின்ற மனம் தந்த இறiவா உமக்கு நன்றி!
துன்பம் வரும் நேரத்தில் 'இதோ இவன் இருக்கிறான்;, இவள் இருக்கிறாள்' என்று என்னைப்பற்றி அடுத்தவர் நம்பிக்கை கொள்ளும்படியாக நான் நடந்து கொள்ள அருள் தந்தமைக்காக உமக்கு நன்றி இறiவா!
பலன் எண்ணிப் பணி செய்யாமல், மற்றவர் மனம் எண்ணிப் பணி செய்ய எனக்கு நல்ல மனம் தந்த இறiவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
'குழந்தைகளே உங்கள் தந்தையாகிய எனக்குச் செவி சாயுங்கள், நான் கூறுவதன்படி செயற்படுங்கள். அப்போது காப்பாற்றப்படுவீர்கள்.
பிள்ளைகளை விட தந்தையரை ஆண்டவர் அதிகம் மேன்மைப்படுத்தியுள்ளார். பிள்ளைகள் மீது அன்னையருக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
தந்தையரை மதிப்போர் தம் பாவங்களுக்கு கழுவாய் தேடிக்கொள்ளுகின்றனர்.'

தந்தையாம் இறைவனை ஒவ்வொரு கட்டத்திலும் மேன்மைப்படுத்தியவராய் நாம் இயேசுவைக் காண்கின்றோம்.  தம் மரண முடிவைத் தெரிந்திருந்தும். அதன் கொடுமையை அனுபவித்திருந்தும் தமது விருப்பத்தை முன்னிறுத்தாமல் 'உமது சித்தப்படியே எனக்காகட்டும்' எனறுற தன்னையே தன் தந்தையின் சித்தத்திற்கு உட்படுத்திக் கொள்வதை நாம் காண்கின்றோம். கூடுமானவரை இந்தத் தவக்காலத்திலாவது என் மட்டில் இறைவன் கொண்டுள்ள சித்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

ஏழாம் நிலை
இயேசு இரண்டாம் முறை தரையில் வீழ்கிறார்; .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'வறியவரைத் தரையினின்றும் தூக்கி விடுகிறார்; ஏழையைக் குப்பை மேட்டினின்றும் கைதூக்கி விடுகிறார்.
'தலைவர்களிடையே, தம் மக்களை ஆளும் தலைவர்களிடையே அமர்த்துமாறு அவனைக்  கைதூக்கி விடுகிறார்.'
                   (சங். 112:7-8)
கங்கை நீர் சேற்றிலே கலக்கின்றபோதுதான் அது சேற்று நீராக மாறுகின்றது. அது மலை உச்சியில் நின்றும் புறப்பட்டுப் பாய்கின்றபோது பனிபோன்ற தூய்;மையுடன்தான் இருக்கிறது.
நீர் பள்ளம் நோக்கித்தான் பாயும். மனிதனும் தவறுவதென்பது ஒன்றும் இயற்கைக்குப் புறம்பானதல்ல.
புரிந்த தவறை விட்டுவிலகி மீண்டும் அந்தச் சேற்றிலே விழாமல் இருக்கின்ற மனிதனே புனிதனாகின்றான்.
தன்னைவிட்டுத் தன் குறைகளை அகற்றி விட முயலும் மனிதனுக்குத்தான் இறைவனும் கை கொடுத்துத் தூக்கி விடுகின்றார்.
தென்றல் காற்றிலும் நாணல் வளைகின்றது| புயல் காற்றிலும் நாணல் வளைகின்றது. ஆனாலும் அது மீண்டும் நிமிருகின்றது.
வளையும் அந்த நாணலின் இயல்பு எம்மிலும் வரவேண்டும் - வளைவதிலல்ல, நிமிருவதில்!
சிந்திப்போம்:
பூவோடு சேர்ந்த நாராக என்னோடு பிறர் சேர்ந்து நல்மனம் பெறும்படியாக என்னை நற்பண்புகளால் உருவாக்கிவிட்ட இயேசுவே உமக்கு நன்றி!
பற்பல ஆசைகளும் மனதை வளைத்து வாட்டினாலும், அவற்றை வெற்றி கொண்டு நிமிருகின்ற மன உறுதியைத் தந்த இறiவா நன்றி!
தவறு செய்தவர் தம்மை ஒதுக்கித் தள்ளிவிடாது  மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குகின்ற தாராள மனதை எனக்குத் தந்த இறiவா உமக்கு நன்றி!
'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.' என்று மன்னித்து வாழும் அருளை எனக்குத் தந்தமைக்காக இறiவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!

'தந்தையரை மதிப்போர் பாவங்களுக்கு கழுவாய் தேடிக் கொள்கின்றனர்.
அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.
தந்தையரை மதிப்போருக்கு தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்| அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடு வாழ்வர்| ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையருக்கு மதிப்பு அளிப்பர். தலைவர் கீழ்ப் பணியாளர்கள்போல் அவர்கள் தம் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்'

அன்னையும் பிதாவும் முன்னறியும் தெய்வங்களாக அமைகின்றனர். அவர்களுக்குப் பின்னர் தான் நாம் தெய்வத்தையே அறிய வருகின்றது. அது கூட அவர்கள் சொல்லித்தான் தெரிய வருகின்றது. அவர்களே நம் இயலாத குழந்தைப் பருவத்தில் நம்மைக் காக்கும் தெய்வங்களாக அமைகின்றனர். ஆனாலும் நம்மால் எந்த அளவுக்கு நமது முழு முதற் கடவுள்களான பெற்றோரை கனம் பண்ணுகின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க இந்த நாட்கள் நமக்கு உதவ வேண்டும். குழந்தைகள் இல்லாத பெற்றோர்கள் முதியோர் இல்லங்களைத் தஞ்சம் அடைவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே! இருந்தும் சகல வசதிகளோடும் வாழும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கவனிப்பாரற்று வாடுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?

எட்டாம் நிலை
இயேசு அழுது புலம்பும் ஜெருசலேம் பெண்களுக்கு
ஆறுதல் கூறுகிறார்; .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன,  பாதாளங்களின் கன்னிகள் என்னைக் சுற்றிக் கொண்டன. கவலைக்கும் துன்பத்திற்கும் நான் ஆளானேன்.
'நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவியழைத்தேன். 'ஓ ! ஆண்டவரே என் உயிரைக் காத்தருளும் ' என்று வேண்டினேன்.
'ஆண்டவர் கருணையும், நீதியும் உள்ளவர்; நம் இறைவன் இரக்கம் உள்ளவர். '
(சங் 114 : 3 – 5 )
குறைகள் மனதின் கவலைகளாகின்றன. இயலாமையில் கவலை கண்ணீர் வரச் செய்கின்றது.
எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சம், என்ன செய்வது என்ற கவலையைத் தருகின்றது. ஒன்றுமே ஆகவில்லை என்றால் கண்ணீர் வருகின்றது.
கவலைப்படுவதில்தான் என்ன பயன்? உயரம்தான் ஒரு முழம் கூடுமா? கழன்றுபோன உடல் மயிர்தான் மீண்டும் வந்து ஒட்டுமா? கையைப் பிசைந்து நிற்பதைவிட, கையை எறிந்து வேலை செய்வதே நமக்குப் பிரச்சினையில் நன்மை தரும்.
தெய்வம் என்னை அழைத்தது. தாயின் கர்ப்பத்தில் என்னை அறிந்தது. எனக்கு வேண்டியது எதுவேன அவர் அறிவார். காலத்தில் - உரிய நேரத்தில் - வேண்டும் அருளைத் தருவார்.
வாழ்வோ - இல்லை சாவோ – தருவது அவரே என்பதைப் புரிந்து கொண்டால், கவலைகள் வாழ்வில் வருவதில்லை.
இயேசு இல்லா வாழ்வை எண்ணி ஜெருசலேம் மக்கள் அழுதார்களா? இல்லை, ஒரு நல்லவன் படும் வேதனை கண்டு குமுறி அழுதார்களா?
கவலையைப் போன்றே கருணையும் கண்ணீர் வரச் செய்யும்.
சிந்திப்போம்:
இன்னல் வரும்போது கவலைப்பட்டு நிற்பதைவிட்டு, உம் உதவியைப் பெற்று அதை வெற்றி கொண்டிட மன வலிமையைத் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
அடுத்தவர் துயரைக் கண்டு என் துயர் போல எண்ணிக் கலங்கும் கருணையை எனக்குத் தந்த இறiவா உமக்கு நன்றி!
வாழ்வை உம் கையில் கொடுத்துவிட்டு உம் பாதையில் செல்லும் ஆசையை எனக்குத் தந்தமைக்கு இறiவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
1..4
14. 'சொல்லாலும், செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்|  அப்போது உங்களுக்கு ஆண்டவரின் ஆசீர் கிடைக்கும்.
தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும்| தாயின் சாபம் அவற்றை வேரோடு பறித்து எறிந்து விடும்.
உங்கள் தந்தையரை அவமதிப்பதில் பெருமை கொள்ளாதீர்கள்| உங்கள் தந்தையரின் சிறுமை உங்களுக்குப் பெருமை தராது. தந்தை மதிக்கப்பட்டால் அது பிள்ளைகளுக்குப் பெருமை| தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை.'

ஒரு தந்தை எவ்வளவுதான் தீங்கானவனாக இருந்தாலும், உணவுக்காக பசியோடு அப்பம் கேட்கும் தன் பிள்ளைக்கு அதன் தந்தை பாம்பைக் கொடுக்க மாட்டான் என்று இயேசு தெளிவு படுத்துகின்றார். ஒரு தந்தைக்குரிய பரிவோடு இறைவன் நம்மைப் பார்க்கின்றார். எனவே நமக்குத் தேவையானதிலும் பார்க்கிலும் மேலதிகமாகவே அவர் எங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறார். 'கேளுங்கள் கொடுக்கப்படும்,  தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள்' என்று அவர் எடுத்துச் சொல்லுகின்றார். தேடல் நம் வாழ்வில் முக்கிய இடத்தை எடுக்கின்றது. தேடல்தான் நமக்குத் தேவையானதை நாம் கண்டடைய நமக்கு உதவியாக அமைகின்றது. அதே நேரம் நாம் இனங்கண்டு எமது தேவைகளை தந்தையாம் இறைவனிடம் கேட்டு நிற்கின்றபோது அவர் அதை நமக்கு வழங்குகிறார். இந்த தபசு காலத்தில் நம்மை, நமது இதயத்தைத் தட்டித் திறக்க நாம் முன்வரும்போது  அதன் கதவுகள் வழியே நம்மை இனங் கண்டு கொள்ள முடியும். அவ்வாறு நமக்குத் தேவையானதை நம் தந்தையாம் இறைவனிடம் கேட்டுப் பெற பணிவுடன் நாம் முன்வரும்போது அது அவருக்குப் பெருமை சேர்க்கின்றது. தன் சொல்லைக் கேட்டு தன் மைந்தர் செயற்படுவது குறித்து அவர் மகிழ்ச்சியடையாமல் போவாரோ?

ஒன்பதாம் நிலை
இயேசு மூன்றாம் முறை தரையில் வீழ்கிறார் .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'விழுந்து நொந்து போன யாவரையும் ஆண்டவர் தாங்குகிறார், தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார். 'ஆண்டவரே, எல்லோருடைய கண்களும் நம்பிக்கையுடன் உம்மையே நோக்குகின்றன.'
(சங். 114 : 14, 15)

விழுவதென்பது வாழ்வில் விழுதல் மட்டுமல்ல, பாவத்தில் விழுதல் மட்டுமல்ல, மனிதப் பண்பில் விழுதலையும் அது காட்டும்.'
கடமைகளினின்றும் விழுதல், சொன்ன சொல்லினின்றும் விழுதல், பொறுப்புக்களினின்றும் விழுதல், பதவியிலிருந்தும், அந்தஸ்திலிருந்தும் விழுதல் என்பனவற்றையும் கூட அது குறிக்கும்.
மனதில் தோன்றும் களைப்பும், பணியில் தோன்றும் சலிப்பும், விழுமியங்களில் தோன்றும் அசிரத்தையும் இந்த விழுதலை எம்மில் உருவாக்கி விடும்.
காற்றாக அலையும் முகில்நீர் ஒடுங்கும்போது, பாரந்தாங்காது நிலத்தில் விழத்தான் செய்கிறது.
ஆனாலும் அதன் வீழ்ச்சியில் ஒரு மலர்ச்சி, ஒரு புதுமை, ஒரு குளிர்ச்சி ஏற்படுகிறது.
நமது வீழ்ச்சியும் மற்றவர்களுக்கு எழுச்சியாகும்போதுதான், அவ் வீழ்ச்சியிலே அர்த்தம் பிறக்கிறது.
கிறீஸ்துவின் வீழ்ச்சியும் அதைத்தான் செய்கிறது. உண்மையில் அது வீழ்ச்சியல்ல, ஒரு உயர்ச்சிக்கு ஆயத்தமாகத் தன்னை நிலம் மட்டும் தாழ்த்திக் கொள்கின்ற நிகழ்ச்சி அது.
சிந்திப்போம்:
என் கடமைகளில், பணிகளில் நான் தவறிவிடாமல் கவனத்தோடு நடக்க எனக்கு அவதானத்தைத் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
மனதில் களைத்து, உணர்வில் சோர்ந்து நின்றாலும், மனிதப்பண்பை இழக்காமல் நான் வாழ வரம் ஈந்த இறiவா உமக்கு நன்றி!
முன்னணியில் திகழ்ந்தாலும் முதலிடம் வேண்டாமல், தலைவராய் மிளிர்ந்தாலும் தனியிடம் நாடாமல், உயர்வாய் வாழ்ந்தாலும் எளிமையைக் கைவிடாமல் நான் வாழ வரம் தந்த இறiவா உமக்கு நன்றி!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
'குழந்தாய், உனது தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு| அவரது வாழ்நாளேல்லாம் அவரது உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி| நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே.

தந்தைக்குக் காட்டும் பரிவு மறுக்கப்பட மாட்டாது. அது உன் பாவங்களுக்கு களுவாயாய் விளங்கும். உன் துன்ப நாளில் கடவுள் உன்னை நினைவு கூருவார்| பகலவனைக் கண்ட பனிபோல் உன் பாவங்கள் மறைந்தொழியும். தந்தையரைக் கைவிடுவோர், கடவுளைப் பழிப்பவர் போலாவார்| அன்னையர்க்கு சினம் மூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்.'

குழந்தைப் பருவம் போன்றே முதுமைப் பருவமும் அமைகின்றது என்பார்கள். அது அன்புக்காக ஏங்கும் பருவம். தன் பிள்ளைகளுடனும், பிள்ளைகளின் பிள்ளைகளுடனும் சேர்ந்து கொஞ்சிக் குலாவி வாழ விரும்பும் வயதுக் காலம். ஆனாலும், முதுமை அவர்களது நினைவுக்குத் தடை போடும் வாய்ப்புக்கள் அதிகம். இதனால் நமக்கு எரிச்சலையும். அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகமாக அமையும் வாய்ப்பும் உண்டு. பொறுமை நம்மைக் கட்டிப் போட வேண்டும்| அவர்களது நிலைமையைப் பரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு வாழப் பழக வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ள முன்வந்தால் நமது மகிழ்ச்சிக்கு அளவிராது.

பத்தாம் நிலை
இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள்; .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'எனக்குற்ற  மானக்கேடு எந்நேரமும் என் கண் முன்னே நிற்கிறது. வெட்கம் என்னை முகம் கவிழச் செய்கிறது.
'என்னை நிந்தித்துத் தூற்றுபவன் பேசுவதைக் கேட்கும்போது(ம்), என் எதிரியையும், பகைவனையும் நான் பார்க்கும்போது(ம்) வெட்கிப் போகிறேன்.'
(சங். 43 : 18,16)
ஆடையில்லா மனிதன் அரை மனிதன் - அவமானத்துக்குரிய மனிதன் - பரிகாசத்துக்குரிய மனிதன்.
ஆடம்பர இடத்திலே ஆரவாரமில்லாது, கந்தலாக உடுத்தினாலும் அவன் ஆடையில்லா மனிதனே! அரை மனிதனே!!
ஆளைவிடவும் ஆடையின் ஆடம்பரத்திற்கே மதிப்பையேற்றும் மனித நாகரீகம் இங்கே - இது கம்பீரமான பிச்சைக்காரர்களின் போலி வேடம்.
கற்பில்லாக் கண்களுடன் ஆடையோடு ஆளை உரித்துப் பார்க்கும் காமக் கண்கள் நம்மவர் கதிர் வீச்சுக் கண்கள்.
நிர்வாணம் பார்வையில் மட்டுமல்ல, மனிதரிவர் மனத்திரையிலும்தான். ஒழுக்கம் ஒழுங்காக இல்லாதவரை அவமானமும், தலை குனிவும் எங்கே அழியப்போகிறது? எருமை இனத்திற்கே சேற்று நீர்தானே சந்தனமும், பன்னீரும்?
ஆழுக்குற்ற கிணற்று நீர் இறைக்கப்படாதவரை ஊற்று நீருக்கு அதிலே வேலையேது?
மனம் தெளியட்டும் - மனித மாண்பை மதிக்கட்டும் - உணர்வுக்கும் உணர்ச்சிகளுக்கும் வேலி ஒன்றை அமைக்கட்டும்.
பிச்சை கூடத் தரும்போது, அதைக் கொச்சையாக்கிப் போடாமல், நீட்டும் கரம் வெட்காது பெற்றுக் கொள்ளும் காலம் வரவேண்டும்.

சிந்திப்போம்:
உணர்விலே – உணர்ச்சியிலே, சொல்லிலே – சிந்தனையிலே கற்பைக் காத்து நடக்க எனக்கு வரம் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
அடுத்தவனை எனது ஆடம்பரத்தால் கூனிக் குறுகச் செய்யாமலும், கந்தை உடுத்தினாலும் அடுத்தவனும் மனிதனே என்று அன்போடு பழகிப் பண்போடு நடக்கவும் அருள் தந்த இறiவா உமக்கு நன்றி!
பிச்சை எடுப்பவனும் என்போன்ற மனிதனே என்று ஆதரிக்க வரம் ஈந்த இறiவா நன்றி!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
16. தாழ்ச்சி:
'குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்| அவ்வாறாயின் கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்.
நீ பெரியவனாய் இருக்குமளவுக்கு பணிந்து நட| அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.
(உயர்ந்தோர், புகழ் பெற்றோர் பலர் இருக்கின்றனர்| ஆனால் எளியோருக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.'

தாழ்ச்சி தாழ்வைக் குறிப்பதில்லை. அது பணிவைக் குறிக்கிறது. தன்னைத் தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான் என்ற இறைவாக்கு மரியாள் மட்டில் எவ்வளவு நிஜமானது என்பதை நாம் கண்டு கொள்கின்றோம். தன்னை ஆண்டவரின் அடிமையென்று தன்னை அவள் தாழ்த்திக் கொண்டதால் முழு உலகத்திற்குமே அவள் அரசியாக உயர்த்தப்படுகின்றதை நாம் காண்கின்றோம். தனக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்டமடித்துக் கொள்கின்றவன், உண்மையில் எல்லாம் அறிந்தவர் முன் ஒரு நாள் சிறுமைப்பட்டுப் போகின்றான்.
ஒன்றைச் சரியாக அறிந்து கொள்ள முனைபவன் முதலில் அந்த விடயம் குறித்துத் தனக்கு எதுவுமே தெரியாது என்கின்ற நிலைக்குத் தன் மனதில் தாழ்ச்சி கொண்;டு தனது மனதை வெறுமையாக்கிக் கொள்ளாத வரை அவனால் தான் கற்க விரும்பும் விடயத்தை முழுமையாகக் கற்க முடியாது. தனக்கு எதுவுமே தெரியாது என்று தாழ்ச்சியைக் கடைப்பிடிப்பவன், சந்தர்ப்பம் கிடைக்கும்போது தான் அறிந்திருப்பதை வெளிப்படத்தும்போது சிறப்படையவே செய்வான்.'

பதினோராம் நிலை
இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்; .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'எனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன பொல்லதவர்களின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது, என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
'என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள், என் உடையின் மீது சீட்டுப் போடுகிறார்கள்.'
(சங். 21 : 16, 18)

எரிகின்ற வீட்டில் பிடுங்கினது வரை இலாபம் எனச் சொத்துச் சேர்க்கும் மனிதர் இந்த உலகில். வீட்டில் கட்டை உயிர் விட கடைசி மூச்சு இழுக்கும்போது சொத்துக்குச் சிண்டு பிடிக்கும் உறவுப் பிசாசுகள்.
நல்லது செய்வதற்கும் நாலு பணம் கறக்கின்ற உத்தியோகப் பிச்சைக்காரர்கள். ஏழை வயிறானாலும் அடித்துப் பறிப்பதிலே விட்டுக் கொடாத இலஞ்சப் பேய்கள். மருந்து செய்ய ஏங்கும்போது தனியார் மருத்துவமனைச் சேவகம். காசில்லையேல் நல்ல கவனிப்பில்லை. படிக்கவென்று சேரப் போனால் அங்கும் பெருந்தொகைத் தண்டம்!
குறுக்கு வழிப் பணத்திலின்று ஆசை கொண்ட மனித மனங்கள் இங்கே நிறைய! மனித நேயங்களைத்தான் அங்கே காணமுடியவில்லை.
மண்ணில் நிறைந்துவிட்ட அக்கிரமங்கள், மனித மனங்களிலே விளைந்து ஆணிகளாகக் காய்த்து நிற்கின்றன.
ஒரு இயேசு இங்கே போதாது, ஓராயிரம் இயேசுவும் போதாது! ஆணிகள்தான் நாளும் இங்கே அறுவடையாகின்றனவே. பாவங்கள் மீது அவை உரசி உரசிக் கூர்மையாகின்றன.
சிந்திப்போம்:
உள்ளதைக் கொண்டு மனநிறைவைக் காணும் மனதைத் தந்த இயேசுவே உமக்கு நன்றி!

அடுத்தவன் வாழ்வு கண்டு என் வாழ்வை மாற்றி கஷ்டப்படாத உறுதியை எனக்குத் தந்த இறiவா உமக்கு நன்றி!

பணத்திற்கு வாழ்வில் முதலிடம் தர மறுத்து, மனித நேயத்தை நாடும் இதயத்தை எனக்குத் தந்த இறiவா உமக்கு நன்றி!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,

எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!

17. 'ஆண்டவரின் ஆற்றல் பெரிது. ஆயினும் தாழ்ந்தோரால் அவர் மாட்சிமை பெறுகிறார்.
உனக்கு கடினமாக இருப்பவற்றைத் தேடாதே| உனது ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே.
உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்| ஏனெனில் மறைந்துள்ளவை பற்றி நீ ஆராய வேண்டியதில்லை.
உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே| ஏனெனில் உனக்குக் கட்டளையிடப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை.'
நமக்கு அப்பாற்பட்டவை எவை? நமது அறிவை மீறியவை எவை? நம்;மால் அதை கணித்துக் கொள்ள முடியுமா? நம்மால் ஆராயப்படக் கூடியவை, நாம் தலையிடக் கூடியவை, நாம் ஆராய்ந்தறியக் கூடியவை எவை என்பதில் நமக்குள்ளேயே சிக்கல் தோன்றவே செய்யும். ஆழந் தெரியாமல் காலை விட்டுவிட்டு பின்னர் மூக்குடைபட்டுக் கொள்வது அறிவுடமையாகாது. 'எண்ணித் துணிக கருமம்' என்கிறது வள்ளுவன் வாக்கு. அதே நேரம் திட்டமிட்டு ஒரு பணியைத் தொடங்காமல் பின்னர் இழுக்குப்பட்டு தலை குனிவதை விட திட்டமிட்டு பணியில் இறங்குவது மேலானது என்பதை இயேசு வீடு  கட்டுபவன் ஒருவனுக்கிருக்க வேண்டிய திட்டமிடல், போர் தொடுக்க முன் அரசன் ஒருவன் ஆராய்ந்து பார்க்க வேண்டியவை பற்றி தன் உவமைகளால் எளிமையாக எடுத்தியம்புவதை மனதிற் கொண்டு, நம் கவனத்துக்குரிய விடயங்களில் மட்டும் நாம் இறங்குவது, நமது மரியாதையைக் காக்கும் என்றும்; மட்டுமல்லாது, நமது சக்தி, காலம், முயற்சி என்பவற்றை மீதப்படுத்தி நமக்கான விடயங்களில் வேகத்துடன் செயற்பட வழி சமைக்கும்.
பன்னிரெண்டாம் நிலை
இயேசு சிலுவையில் மரிக்கிறார் .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'பகமை நிறைந்த சொற்களால் என்னை வாட்டினர்; காரணம் எதுவுமின்றி என்னை வதைத்தனர்.
'நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றஞ் சாட்டினர் நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.'
(சங். 108: 3, 4)

வித்தொன்றின் மரணத்தில்தான் புது வாழ்வொன்று பிறக்கின்றது. எனவே மரணம் வாழ்வுக்கு முடிவு அல்ல.
மரணங்கள் தீமைகளைத்தான் முடித்து வைக்கின்றன. ஏனெனில் நன்மைகள் ஒரு நாளும் மரணிப்பதில்லை.
நாம் விட்டுச் செல்லும் உள்ளங்களில் வாழும் வரை நமக்கு மரணம் என்பதேது?
மரணம் எம்மை மனித உள்ளங்களில் விதைத்துச் செல்லுகின்றது.
மரணத்தின் நினைவுகள் பயங்கரம் தரலாம், ஆனாலும், மரணம் நமக்குப் பயங்கரம் தரலாகாது. அது நமக்குப் புதுவாழ்வுக்குப் பூபாளம் இசைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், மரணம் வாழ்வுக்கு எதிரானவைகளுக்குத்தான் அஸ்தமனத்தைக் கொண்டு வருகிறது.
இயேசு சிலுவையில் மரிக்கவில்லை – சிலுவைக்குத்தான் மரித்தார்;| பாவத்திற்கு மரித்தார்.அதனாலேயே வாழ்வு பிறந்தது – உண்மை வாழ்வுக்கு மரணம் ஒரு உதயம்.
தீமை புரிந்தோர் நாண நன்னயம் செய்தல் தீமையைச் சாகடிக்கும் ஒரு செயல்தான்.
சிந்திப்போம்:
தீமைகளைச் சாகடிக்கும்படி நன்மைகளைச் செய்ய எனக்கு மனம் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
எம் வாழ்வுக்காய் மரணத்தைத் தைரியமாய் எதிர் நோக்கும் அருள் தரும் இறiவா உமக்கு நன்றி!
என்னைப் பாதிப்பவர் தமை மன்னித்து, 'அறியாமற் செய்கிறார்கள்.' என்று பெருமனத்தோடு கூறுகின்ற வரம் எனக்குத் தருகின்ற இறiவா உமக்கு என் நன்றி!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
18. 'மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது| தவறான கணிப்புக்கள் தீர்ப்புக்களை உறுதிப்படுத்தியுள்ளன.
(கண் இல்லையேல் பார்க்க முடியாது, அறிவு இல்லையேல் அது இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதே.'
பிடிவாதம் கொண்டோர் இறுதியில் தீமைக்குள்ளாவர்| கேட்டினை விரும்புவோர் அதனால் அழிவர்.'

இறுமாப்பு, அனைத்தும் தெரிந்த போக்கு, எல்லாம் எனக்குத் தெரியும், நான் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்ற சிந்தனைப்போக்கு நமது செருக்கை வெளிக்காட்டுகின்றது. செருக்கு ஒருவனின் வீழு;ச்சிக்கு வழி கோலும் என்பது நிச்சயம். சரியானதை, உண்மையானதை, நீதியானதை அறிந்திருந்தும் தம் போக்குத் தவறு என்று கண்டு கொண்டாலும் விட்டுக் கொடுக்காது அதிலேயே பிடிவாதமாக இருப்பது அவரவர் அழிவுக்கே வழி சமைக்கும். அடுத்தவருக்கு தீமை நினைப்பவன், சரியானதை மாற்றியமைத்து தன் போக்கிற்கு அனைத்தையும், அனைவரையும் தவறாக திசை திருப்புவன் அழிவையே சந்திப்பான்.

பதின் மூன்றாம் நிலை
மரியின் மடியில் உயிர் பிரிந்த இயேசு .. ..

திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
'சிறைப்பட்டவர்களின் புலம்பலைக் கேட்கவும், சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும், உன்னதங்களிலுள்ள தம் திருத்தலத்தினின்று ஆண்டவர் தம் பார்வையைத் திருப்பினார்.'
(சங். 101: 19, 20)

இடி தாங்கிப் பழகிய உள்ளம் அடி தாங்க அழுவதில்லை. ஆனாலும் மடி தாங்கிய மகனின் சாவு, வெடி தாங்கிய பாறையாக அன்னை உள்ளத்தைச் சிதறடிப்பது இடிக்கும் மேலான சாட்டை சொடுக்கப்பட்டதன் அடையாளம்.
 சாவுக்கென குறிக்கப்பட்டிருந்தார், கொடியவர் கைச் சிறைப்பட்டிருந்தார்;| அதன் வேதனையையும், சோதனையையும் அவர் அறிவார்.

வேண்டும் நமக்கு விடுதலை! ஆனால் எதினின்று விடுதலை? எப்படியான விடுதலை? இதில்தான் கருத்து மோதல், எதிர்பார்ப்பிலே மோதல்!
இறைவன் வகுக்கும் விடுதலை என்ன? நாம் குறிக்கும் விடுதலை என்ன? நம் பேதமைகளிலிருந்தும், மூட நம்பிக்கை, அளவுக்கு மீறிய உலக நாட்டங்களிலிருந்தும் வேண்டும் நமக்கு விடுதலை!
இறைவன் சொல்லும் விடுதலைக்கு நாம் உரியவராக வேண்டுமென்றால், நாம் அவரிடம் முற்றாகச் சரணடைந்துவிட வேண்டும். அங்கேதான் செத்துப் போகும் மனங்களுக்குக் கூட ஆறுதல் கிட்டுகிறது.
தன்னையே இறைவனிடம் வழங்கிவிட்ட இயேசுவுக்கு அன்னையின் மடியே அங்கு பெரும் ஆறுதல்.

சிந்திப்போம்:
சிறைப்பட்டோர், சாகடிக்கப்பட்டோர், விலாசமின்றிப் போய்விட்டோர் கதற வைத்துச் சென்ற உள்ளங்ளுக்கு ஆறுதல் தர எனக்கு வாய்ப்பளித்த இயேசுவே உமக்கு நன்றி!
மூடப்பழக்க வழக்கம், மூட நம்பிக்கை, அறியாமை, இயலாமைகளினின்றும் என்னை விடுவித்துத் தலை நிமிர்ந்து வாழ எனக்கு வரம் ஈந்த இறiவா நன்றி!
தீங்குகள் என்று மட்டுமல்ல, என் வாழ்வில் முழுவதையும் உம் கையில் ஒப்படைத்து, எதையும் எதிர் நோக்கும் மனத்துணிவை எனக்குத் தந்த இறiவா உமக்கு என் நன்றி!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
19. 'அடங்கா மனத்தோர் தொல்லைகளால் அழுத்தப்படுவர்| பாவிகள் பாவத்தைப் பெருக்குவர்.
இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை| ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது.
நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்து கொள்வர்| ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.'
'துள்ளுகின்ற மாடு பொதி சுமக்கும்' என்பது ஆன்றோர் வாக்கு! அந்தச் சுமையின் அழுத்தம் பாடாய்ப் படுத்தும். விட்;டுக் கொடுப்பதால் யாரும் கெட்டுப் போவதில்லை| மாறாக மனமும் வாழ்வும் தளர்ச்சியோடு சுகமாக முன்செல்ல அது வழி செய்யும். நமக்கு நாமே தேடிக் கொள்ளும் தீங்குகள் நம்மாலேயே களையப்பட வேண்டுமேயல்லாது வேறொருவால் அதை நமக்குச் செய்து தர முடியாது. இயேசு நம் பாவத்திற்காகத் தன்னையே கழுவாக, பிராயச்சித்தமாக சிலுவையில் பலியாக்கிய பின்னும் பாவங்கள் மண்ணில் பெருகவே செய்கின்றன. இயேசுவாக வாழ வேண்டிய தலைவர்களாலேயே பாவம் மண்ணில் வளர்க்கப்படகின்றது. அந்தப் பாவங்கள் அவர்களாலே கழுவப்பட வேண்டுமேயல்லாது இயேசு மீண்டும் ஒரு முறை பிறந்து வந்து சாக முடியாது! அடையாளங்களையும், அனுமானங்களயும் நம் வாழ்வின் போக்கில் மட்டும் அவதானித்துக் கொள்ளலாம் என்றில்லை| அடுத்தவர் வாழ்வைக் கொண்டும் நம்மால் அனுமானித்துக் கொள்ள முடியும்.

பதின் நான்காம் நிலை
இயேசு கல்லறையில் அடக்கமாகிறார் .. ..

திவ்விய யேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர சுவாமி.
'தரையினுள்; துஞ்சுவோர் யாவரும் அவரை மட்டுமே ஆராதிப்பர், கல்லறைக்குச் செல்கிற  யாவரும் அவர் முன் தலை வணங்குவர்.'
(சங். 21: 29)
கல்லறைகளின் பசிக்குச் சவங்கள்தான் தீனி! உள்ளமெனும் கல்லறையில் எத்தனை விதமான பிணங்கள்தான் நாளும் சங்கமமாகின்றன?
பார்வைக்கு வெள்ளை தீட்டியிருந்தாலும், கல்லறைக்குள் எல்லாமே எலும்பும், நாற்றமும்தான். இயேசுவை வைத்தது கல்லறையிலல்ல. அது அவருக்கு ஒரு ஓய்வறை! அதைப் புரியாத பரிசேயருக்குத்தான்  அது வழமையானதொரு கல்லறை!
கள்ளின் நிறமுந்தான் வெள்ளை! அதற்காக அதையே பால் என்று யாரும் அடம்பிடிப்பதில்லை.
தோற்றங்கள் என்றும் மயக்கம் தரும்| உண்மைகளும் அதனால் தடைப்பட்டுப் போகும்.
உள்ளத்தின் வெளிச்சம் மங்காதவரை, உண்மையின் வலிமை தோற்பதில்லை.
விசுவாசம் என்கிற வெளிச்சத்தில் கல்லறை நமக்கும் ஓய்வறைதான்.
என் உள்ளம் என்பது என்ன தீங்கான எண்ணம் வாழும் கல்லறையா? இல்லை நன்மைகள் நாள் பார்த்து நிற்கும் ஓய்வறையா?
சிந்திப்போம்:
என் உள்ளத்தைக் கல்லறையாக மாற்றிப் பாவங்கள் புழுவாய்ப் பெருகிடவிடாமல் பாதுகாத்துத் தந்த இயேசுவே உமக்கு நன்றி!
தோற்றங்களில் நான் மயங்கிடாது, இயல்பிலே மனிதரை, அவர் செயலை மதிப்பிட எனக்கு அருள் தந்த இறiவா உமக்கு நன்றி!
என் உள்ளம் என்பதை, அன்பு பூத்து நின்று, பரிதவிக்கும் உள்ளங்களின் உணர்வுகளுக்கு ஒரு ஓய்வறையாக மாற்றித் தந்த இறiவா உமக்கு என் நன்றி!

எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!

20. 'எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்| தருமம் செய்தல் செய்த பாவங்களைக் கழுவிப் போக்கும்.
நன்மை செய்தோருக்கே நன்மை செய்பவர்கள் தமது எதிர் காலத்தை எண்ணிச் செயல்படுகின்றனர்| தங்களது வீழ்ச்சிக் காலத்தில் அவர்கள் உதவி பெறுவர்.' 
வெயில் காலத்தில் வெட்கையைத் தணிக்க குளிரான இடத்தையோ, தொண்டைக்கு இதமான குளிர் பானங்களையோ மனிதர் தேடுவது வழமை. நாம் தெரிந்து தெரிந்து செருக்குடன் செய்யும் தவறுகள் நம் தலை மீது நாமே அள்ளிப் போடும் தணலைப்போன்று நம்மை எரித்துப் போடுகின்றன என்பதைப் புரிந்து கொண்டால் மனிதன் தவறுகள் செய்ய மாட்டான். செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டபிறகும் அதை நியாயப்படுத்திக் கொண்டு அதைத் தொடருபவனை மனிதன் என்கின்ற வகுப்புக்குள் அடக்கிக் கொள்ள முடியாது. 'தருமம் தலை காக்கும்' என்ற ஆன்றோர் வாக்கில் அர்த்தம் பலவுண்டு. ஆனாலும் தருமம் பண்ணுகின்றபோது நாம் என்ன நோக்கத்தோடு அதைப் பண்ணுகின்றோமோ, அது அந்த நோக்கத்தை நம் வாழ் நாளிலேயே அனுபவிக்கச் செய்யும். மாறாகப் பலன் எதிர்பாராது அடுத்தவன் வாழ வழி செய்வதையே நோக்கமாகக் கொண்டு எதிர்பார்ப்பின்றி செய்யும் தருமம், நமக்கு மட்டுமல்ல நம் தலைமுறைக்குமே காவலாய் நிற்கும்.   
சிலுவைப் பாதை தியானம். . . .
தியாகத்தின்  பாதை . . . .!
சிலுவைப் பாதை பாடுகளின் பாதை மட்டுமல்ல
நம் வாழ்வின் பாதையுங் கூட.
மனிதராக நாம் வாழ
சிலுவைப் பாதை எம்மைச்
சிந்திக்கச் செய்கிறது.

அந்தச் சிந்தனை ஒரு தியானமாகி
எமக்குள் ஒரு முறை
நாமே உற்று நோக்கி
தெரிகின்ற குறை நிறைகளைச்
சீர்தூக்கிப் பார்த்து
முழுமையான மனிதராக எமை மாற்ற
சிலுவைப் பாதைச் சம்பவங்கள்
எம்மைத் தூண்டுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டின் முன்னே
நடந்து முடிந்துவிட்ட
வெறும் சம்பவங்கள் இல்லை இவை.

நமது அன்றாட வாழ்வில் எதிரொலிக்கும்
நிகழ்வுகள் இவை.

துன்பப்பட்டவன் வாழ்வு இது.
துன்பப்படுபவன் வாழ்வுக்கு வழியும் இது.

எனவே,
சிலுவையின் பாதையில் நாம் நடப்போம்.
சிந்திக்கும் பாதையில் நாம் நடப்போம்.
புறக்கண்களை மட்டுமல்ல
அகக் கண்களையுங் கூட திறந்து நடப்போம்.

முதலாம் நிலை

இயேசு மரணத் தீர்வைக்குள்ளாகிறார்.
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
நீதி தவறிவிட்ட நிலை .. .. இங்கு பிலாத்துக்கள் அதிகரித்துவிட்ட நிலை.. ..
அன்னாசுகளும், கைப்பாசுகளும் வென்றுவிட்ட நிலை. .. ..
குற்றவாளிக்கும், சுற்றவாளிக்கும் இடையே வேறுபாட்டைக் காண மறுக்கும் கூட்டத்தின் நடுவே நீதி மூச்சுத் திணறி அவதிப்படும் காட்சி!

விடுதலை தரவந்தவன் யார்? .. .. பயங்கரத்தை உருவாக்கியவன் யார் ? புரியவில்லை அந்த மந்தைகளுக்கு.. .. 'இயேசு அவர்களுக்கு வேண்டாமாம் .. .. பரபாசே வேண்டுமாம்' .. யாரிடம் சொல்லி அழுவது இந்தப் பரிதாப சீவன்களை?
நீதிக்கும் தம் வாழ்வுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் நீதி வழங்க முற்படலாமா? குற்றமிழைத்தலையே தம் வாழ்வின் வேதமாக அமைத்துக் கொண்டவர்கள் .. .. தப்புக்குச் சூடுபோட நெருப்புக்குள் இரும்பை வைக்கலாமா?
முதுகிலே மூட்டையாய்ப் பாவம் கனத்திருக்க, அடுத்தவன் தோளிலே தொங்கும் பைக்குள் தவறுகள் தெரிவதாய்க் கூறலாமா? .. .. யார் யாருக்குத் தீர்ப்பிடுவதென்ற விவஸ்தையே இங்கிருப்பதாய்க் காணோம்... ..
குறைகள் கொண்டதே மனிதம் .. ..தவறுகள் அதிலே சகஜம்.. .. இதை மனதிலே வைத்து மற்றவரைப் பார்த்தால் .. .. தீர்ப்பிடும் பாவத்தைச் செய்யவே மாட்டோம்.
நீதியின் தேவன் இயேசுவிடமே நாம் அந்த உறுதியை வழங்குவோம்:
' எம் வாழ்வில் மற்றவரைத் தீர்ப்பிடமாட்டோம் இறiவா!'
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

21. 'குழந்தாய் ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே| கையேந்தி நிற்போரை காத்திருக்க வைக்காதே.
    பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே| வறுமையில் வாழ்வோருக்கு எரிச்சலூட்டாதே.
   உள்ளம் உடைந்தோருக்கு துயரங்களைக் கூட்டாதே| வறுமையில் உழல்வோருக்குக் காலம் தாழ்த்தாமல் 
   உதவி செய்.
   துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளி விடாதே| ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!'
அடுத்தவருக்கு, குறிப்பாக வறியவர்களுக்கு உதவுவது என்பது எங்களுக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நமக்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு. நாளாந்தம் கூச்சமின்றி தங்கள் கரங்களை நீட்டி பிச்சை கேட்போருக்கு உதவுவதைப் பார்க்கிலும் வாழ்வில் நல்ல இடத்தில் கௌரவமாக வாழ்ந்திருந்து சந்தர்ப்ப வசமாக ஏழையாகிப் போய் கை நீட்டி உதவி கோரத் தயங்கி நிற்கின்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு சத்தமின்றி காதோடு காது வைத்தாற் போன்று உதவி புரிவதென்பது நமக்குக் கோடி புண்ணியத்தைச் சேர்த்துத் தரும். அவர்களால் இதுவரை வாழ்ந்த வாழ்வைத் தொடர முடியாமலும், இருந்த வாழ்வை விட்டுக் கீழிறங்கி வாழ்வதும் சொல்ல முடியாத துயரத்திற்குரிய நிலையாகும். அப்படிப்பட்டவர்கள் நம்மைக் கேளாமலே நாம் முன் வந்து உதவும்போது அவர்கள் நெஞ்சில் உதிக்கின்ற ஒரு நன்றியுணர்வு இருக்கிறதே, அது நம்மை என்றும் பாதுகாத்து நிற்கும்.
இரண்டாம் நிலை

இயேசுவின் தோளில் சிலுவை
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்

பாரம் சுமக்கப் பழகிவிட்ட தோள்களுக்குப் பஞ்சுப் பொதி ஒரு பொருட்டல்ல.. ..ஆனாலும், பொதி சுமந்து வளைந்துவிட்ட முதுகிற்கு ஓய்வொன்று அவசியம் தேவை.. .. சுமந்து கொண்டு நிற்கின்றதேயென்பதற்காக கழுதையின் முதுகில் சுமையை அடுக்கிக் கொண்டே போவது மனித தர்மத்திற்கே ஒவ்வாதது.
இன்று, மனித வாழ்விலே சுமக்கவென்றே பிறந்துவிட்ட ஜீவன்களெனப் பலபேர் வாழத்தான் செய்கின்றார்கள். .. .. அதே சமயம் தம் சுமையை அடுத்தவர் தோளில் சரித்துவிட்டு சுகம் அனுபவிக்கும் மனிதங்களும் நம் மத்தியில் இல்லாமலில்லை. .. ..
சுமை தாங்கிகள் காலத்தில் நிலைத்து நிற்கின்றன .. ..அவை அடுத்தவர் சுமையை மௌனமாக ஏற்கின்றன. கோடையோ வசந்தமோ .. .. எதுவும் அவற்றை  அசைப்பதுமில்லை.
சுமக்கவென்று முன்வரும் மனங்களும், மௌனத்தில் வருவதை வரவேற்கின்றன. வாழ்வில் சுகமும், துக்கமும் அவற்றைக் கலக்குவதில்லை.
இயேசு சுமக்கவென்று வந்த மனிதர், .. .. மனித பாவத்தைத் தன் தோளிலே ஏற்க வந்த மனிதர்.. .. அவரிடம் முணுமுணுப்பிருக்கவில்லை .. .. முகஞ்சுழித்தலும் இருக்கவில்லை. .. ..கடமையைச் சுமையாய்ப் பொறுப்பேற்கிறார்.  .. வேள்வி செய்யும் மனிதனைப்போல உலகைச் சுத்தமாக்க முழுப்பாவக் கறையையும் தனக்கான சுமையாகத் தம் தோளிலே ஏற்று நிற்கிறார்.
நாம் சுமக்கின்ற மனிதரா? ... .. இல்லை மற்றவர் மேல் பொறுப்பைச் சுமத்துகின்ற மனிதரா?
நம் பழியை நாமே சுமந்ததுண்டா? .. ..இல்லை அடுத்தவர் பக்கமாகக் காயை நகர்த்திவிட்டு, தப்பினோம் பிழைத்தோம் என்று வாழ்பவரா நாங்கள்?
இயேசுவிடம் உறுதி அளிப்போம்:
'என் செய்கையின் பலன் எதுவானாலும் .. .. அதை நானே சுமக்கிறேன் என் இயேசுவே.  ..  ..என் வாழ்க்கைப் பொறுப்பு எதுவானாலும் .. .. அதை நானே ஏற்கிறேன் என் இயேசுவே .'
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

22. 'உன்னிடம் உதவி வேண்டுவோரிடத்திலிருந்த உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே| உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளித்திடாதே.
ஏழைகள் கசப்பணர்வினால் உன்னைச் சபித்தால், அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதல்களுக்குச் செவி சாய்ப்பார்.
மக்களின் அன்புக்கு உரியவனாய் இரு| பெரியோர்களுக்கு தலை வணங்கு.'
'ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்' என்பார்கள். கையேந்தி பிச்சை எடுப்பவர் மட்டும் ஏழை என்றாகி விடுவதில்லை. மனதில் தாழ்ச்சியும், உண்மையும், நன்மையும் உள்ளவர்களும் ஏழைகள் தான். நடக்கின்ற அநியாயங்கள் தமக்காயின் மட்டுமல்ல, அடுத்தவருக்கும் ஏற்பட்டு அவர்களும் துன்பப்பட வேலை பார்க்கின்றவர்களுக்கெதிராக உள்ளம் வெதும்பி சாபமிட்டால் அது நிச்சயம் கடவுளால் ஏற்கப்படவே செய்யும். அவர்கள் வாழ்வின் எந்த மட்டத்தில் இருந்தாலும் சரி, அரசியல், சமூக, ஆன்மீகத் தலைவர்களாக இருந்தாலும் இந்த நியதியிலிருந்து தப்பிக்கவே முடியாது. நம் மத்தியில் பலர் இருக்கிறார்கள், தாம் தெரிவு செய்து கொண்ட வாழ்வால் கடவுளுக்கு அடுத்தவர்களாய் தாம் இருப்பதாக எண்ணிக் கொண்டு தம்மால் எதுவும் முடியும் என்கின்ற தோரணையில் சிந்தித்துச் செயல்படுகின்றவர்கள் கடவுளின் சினத்திற்கு ஆளாக வேண்டியே தீரும்.
மூன்றாம் நிலை

தரையடிபட இயேசு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
நான் என்ற அகங்காரம் தலையிலே ஏறிவிட்டால் நாய் கூட வளர்த்தவனை ஒரு பொருட்டாக எண்ணாது என்கின்ற அளவுக்கு மனிதங்களின் நெஞ்சங்களில் நஞ்சை வளர்த்துவிடுகிறது. ..  கொப்பிலே ஏறிய பேயாட்டம் .. .. மனித வாழ்வில் அது போடும் சதிராட்டம்.
'நான்'  ஏறி எம் தலையிலே இருந்துவிட்டால் .. .. அடுத்தலன் என்ன ராசாவா? என்று எவருக்கும் ஒரே கேள்வியைத்தான் எழுப்பச் செய்துவிடும். .. .. இதனால் எம் வாழ்வே சரிந்து விழுந்துவிடும்.
மரக்கொப்பொன்று கனத்துவிட்டால் சிறு காற்றுக் கூட அதற்கு ஆபத்துதான். .. .. எந்நேரமும் அது விழும்,.. ..  சரியும்! அதற்குப் பிறகு அது உயிர் கொண்ட மரமல்ல.. .. விறகு!
மனித மனங்களில் தாழ்ச்சி விடைபெற்று நாளாகிவிட்ட கொடுமை இன்று இன மட்டத்திலே, மத மட்டத்திலே, மொழி மட்டத்திலே போட்டியும், அழிவுகள் எனவும் கிளம்பியிருக்கிறது. இங்கும் நானா?  நீயா? என்பதல்லவா போட்டி ? .. . இங்கு யார் வாழ்வது என்றல்லவா கேள்வி?
உயிர்களுக்கு விலைமதிப்பில்லை என்று யார் சொன்னது? .. .. அதன் விலை ஒரு தோட்டா என்றல்லவா யுத்தச் சந்தையிலே பேரம்? நானே வல்லவன் எனக் காட்டும் போட்டியிலே மிதிபடும் மனித நேயம் .. .. இயேசுவின் வடிவிலே .. .. பாதையின் ஓரத்திலே!
வீழ்ந்து கிடக்கும் இயேசுவிடம் சொல்லுவோம்: ' நான் என்ற எண்ணம் எம்மைச் சதியிலே வீழ்த்தினாலும் இயேசுவே.. .. சகதியில் நாம் அமிழ்ந்து விடாதபடி கை தாரும் இயேசுவே.'
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

23. 'ஏழைகளுக்கு கனிவோடே செவிசாய்| அவர்களுக்கு அமைதியாக, கனிவோடு பதில் சொல்.
       ஒடுக்குவோரின் கரங்களிலிருந்து ஒடுக்கப்பட்டோரை விடுவி| நீதியான தீர்ப்பு வழங்குவதில் உறுதியாய் இரு.
       கைவிடப்பட்டோருக்குத் தந்தையாய் இரு| அவர்களின் அன்னையருக்கு துணைவன் போல் இரு| அப்போது நீ                  உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்| தாயை விட உன் மீது அன்பு கூர்வார்.'
நீதிக்கான போராட்டத்தில் பின்னிற்பவரை தமக்கான அவர்களது போராட்டத்தில் இறைவன் கைவிட்டு விடுவார். அடுத்தவருக்கு நாம் என்ன அளவு கோலைப் பயன்படுத்துகின்றோமோ, அதே அளவால்தான் நமக்கும் அளக்கப்படும். இதுதான் உலக நியதி. இன்று அடுத்த வீட்டில் அநியாயம் நிகழ்கின்றபோது தட்டிக் கேட்க முன்வராது அதினின்றும், நமக்கென்ன என்கின்ற சிந்தனையுடன் விலகி இருக்கலாம். ஆனால் நாளை அதே ஆபத்து நம் வீட்டுக் கதவைத் தட்டும்போது நமக்காகக் குரல் கொடுக்க அடுத்த வீட்டில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
 நான்காம் நிலை
ஒரு தாயும், ஒரு மகனும்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
ஒரு தாய் தன் பிரசவத்தில் தன் மகவை முதலில் சந்திக்கிறாள் .. ..அந்தச் சந்திப்பிலேதான் எத்தனை உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். .. ..?
தாய்மையின் பூரிப்பு, .. .. ஒரு சாதனையின் பூரிப்பு, .. .. தன் உடலிலே உருவான தன் இரத்தத்தையும், சரீரத்தையும் காண்பதிலே அங்கே ஒரு நிறைவு!
முப்பத்தி மூன்றாண்டு காலம் .. .. அவளின் உழைப்பிலே வளர்ந்த செல்வம்.. .. இன்று புழுதிக்குச் சமனாக .. .. தாங்குமா தாயின் உள்ளம் ?
தன் பிள்ளைக்கு நோயென்றால் அதைவிடவும் துடித்துப் போய்விடும் தாய்மை, உருக்குலைந்து.. .. முகம் சிதைந்து .. .. குற்றவாளிபோல, பெற்றபிள்ள அழைத்துச் செல்லப்படுவதை எப்படிச் சகித்துக் கொள்ளும் ? .. .. மனதிலே பொறுத்துக் கொள்ளும்?
இன்று மனித மனங்களில்தான் மனித நேயத்திற்குப் பெருந்தட்டுப்பாடாயிற்றே!
எவர் எங்கு துன்புற்றாலும் அவர் நம்மவர் இல்லையென்று உறுதி செய்து கொண்ட பின் எதையுங் கண்டு கொள்ளாத மனிதர்களாக எம்மில் பலர்...!
மௌனத்தில் மனச்சாட்சியைத் துயில் கொள்ள விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கின்ற மனநிலையுடன் நாங்கள்.
வேதனைப்படும் இயேசுவிடம் சொல்லுவோம்:
'தாயின் வயிற்றில் உருவானாலும் .. .. அவள் மனதை உடைக்கத் தயங்காதவன் நான் இயேசுவே... .. துன்பப்படும் தாய்க்குலத்தை நினைத்தும் பாரா மனிதம் நான் இயேசுவே .. ..பார்வையாளனாய் நான் இருந்ததுபோதும் .. ..அன்னையர் கண்ணீரைத் துடைக்கும் பங்காளனாய் மாறவேண்டும் இயேசுவே. '
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

24. 'ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்| தன்னைத் தேடுவோருக்குத் துணை நிற்கும்.
       ஞானத்திற்கு அன்பர் வாழ்விற்கும் அன்பர்| அதனை வைகறையிலே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.
       அதனைப் பற்றிக் கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக் கொள்வர்| அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர்            ஆசி வழங்குவார்.
        அதற்குப் பணி செய்வோர் தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றனர்| ஞானத்திற்கு அன்பர் ஆண்டவருக்கும் அன்பர்'
ஞானத்தைத் தேடுவோர் சீரிய வழியில் நடக்கவே செய்வார்கள். இதனால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு மதிப்பும், சிறப்பும் வந்து சேரும். ஞானத்தோடு வாழ்பவராகக் காட்டிக் கொள்வொர் நிச்சயம் சிறுமைப்படுவார்கள். வாழ்வில் சரி எது, பிழை எது, தவிர்க்க வேண்டியது எது, சேர்க்க வேண்டியத என்பதை ஞானமே நமக்குக் கற்றுத் தருகின்றது.
ஐந்தாம்; நிலை
துணைக்கு வந்த சீமோன்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
கூடவே வாழ்ந்த சீடர்கள், ... .. நன்மைகள் அனுபவித்த மனிதர்கள், .. .. யாரும் இல்லை அங்கே அந்த இக்கட்டில் உதவி செய்ய.! வாழும் வரை உறிஞ்சி வாழ்ந்து, .. ..வாழவைத்த மரத்தையே காய்ந்து போகப்பண்ணும் ஒட்டுண்ணிகளாக மனிதங்கள் .. ..
வாழ்ந்து நிற்கும் மனிதர்களைக் கண்டு மனம் காய்ந்து போகும் மனிதங்கள். .. ..
பிறர் துன்பத்தில் உழலும் நிலை கண்டும் நெஞ்சில் ஈரம் பிறக்காத மனிதங்கள்.. ..
ஆறுதல் மொழிக்கே பஞ்சம் அந்த நாவுகளில்.. .. கருத்துள்ள உதவிக்கு வழியா இருக்கப்போகிறது?
வேடிக்கை பார்த்தவன்தான் சீமோன்...! இயேசுவின் நன்மை தீமை அதிகம் அறியான் .. .. கேள்விப்பட்டதுண்டு .. .. ஆனால் அதிகம் நம்பிக்கை கொண்டதில்லை.. ..அவனுக்குச் சிரிப்பு.!.. .. இந்தக் கோலத்தில் அப்படிப்பட்ட வல்லமையா? .. .. நம்பிச் சென்றவர்க்கு இதுவும் வேண்டும்.. .. இதற்கு மேலேயும் வேண்டும்.
அவரை அருகில் காணும் வரையுந்தான் இந்தச் சிந்தனையோட்டம்.. .. ! கண்ட பிறகு அவன் சிந்தையில் மாற்றம்!!.. .. கேள்விப்பட்டதற்கும் மேலான ஒருவரல்லவா இங்கே தள்ளாடித் துவளுவது?
தன்னை உந்தித்தள்ளி உதவச் செய்த போர் வீரனுக்கு அவன் நன்றி கூறவேண்டும்.
தக்க சமயத்தில் துன்புற்ற மனிதத்திற்கு கை கொடுக்க முடிந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி!
இவர்களில் ஒருவனுக்குச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவிடம் சொல்லுவோம்:
'வாழ்வில் துன்புற்ற வேளையில் நான் உதவி தேடி அலைந்ததுண்டு.. ..வாழும் மனிதர்களோடே உறவு வைத்ததும் உண்டு .. .. தேவையில் மனிதம் வாடியபோது .. தேடி நான் பார்த்ததில்லை. .. வாழவேண்டி துடித்தவர் தமக்கு நான் கைகொடுக்க மறுத்ததும் உண்டு.. .. இயேசுவே மனிதம் யாராக இருப்பினும் அது நீரே என நான் நினைத்தல் வேண்டும்.. .. அல்லல்படும் உயிர்களுக்கு நான் ஆறுதலாக அமைதல் வேண்டும்.'
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. ஆமென்.

25. 'ஞானத்திற்குப் பணிவோர் மக்களினங்களிற்குத் தீர்ப்பு வழங்குவர்| அதற்குச் செவி சாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்.
ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்| அவர்களுடைய வழிமரபினரும் அதனை உடமையாக்கிக் கொள்வர்.
முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும், அவர்களுக்கு அச்சநடுக்கத்தை வருவிக்கும்| அவர்களுக்குத் தன்மீது நம்பிக்கை ஏற்படும் வரை அவர்களை அது கண்டிக்கும், வதைக்கும்| தன் நெறி முறைகளால் அவர்களைச் சோதிக்கும்.'
நேர்மையாக, உண்மையாக வாழ்வது என்பத ஒன்றும் சுலபமான காரியமாகாது. அப்படி வாழாதவர்களிடமிருந்து நிச்சயமாக எதிர்ப்புக்களைக் கொண்டு வந்தே தீரும். ஏனெனில் நம்முடைய நேர்மை அவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் சந்தர்ப்பங்கள் அதிகம். இப்படியான வேளைகளில் தம் பாதுகாப்பைக் கருதி அல்லது தம்முடைய இருப்பை நிலைநாட்ட மற்றவர்கள் உண்மையாக வாழ முற்பட்டால் அதை எதிர்க்கவே செய்வர்.
ஆறாம் நிலை
பெண்ணின் துணிவு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
பெண்ணென்று அவள் தயங்கியதில்லை. .. ..தீமைகள்  நிலைபெற விட்டதுமில்லை.. .. தன் சக்திக்கேற்ற செயல் செய்தாள் .. .. இயேசு சொன்னதுபோல் அவள் வாழ்தலுற்றாள்.
பூமாதேவிபோல் அவள் பொறுத்திருந்தாள் .. .. கொடுமைகள் தீரும் என நினைத்திருந்தாள் .. ..அவள் பொறுமைக்கும் ஒரு எல்லையைக் கொண்டு வந்தார் .. .. இயேசு அழியவேண்டும் என முனைந்து நின்றோர்.
இரத்தமும் வேர்வையும் கண்ணை மறைக்குதிங்கே .. .. பலயீனம் நடையைத் தளரப் பண்ணுதிங்கே .. ..அதற்குள் மேலும் வன்முறையா? .. .. அவரின் உடலில் சாட்டையடியா?
பொங்கியெழுந்தது அந்தப் பேதை மனம் .. ..தடைகள் அவளைக் கண்டு அஞ்சின .. .. துணிந்தவள் ஒதுக்கித் தள்ளி வந்து இயேசுவின் முகத்தைத் துடைக்கிறாள். .. ..பலனைக் கையோடு பெறுகிறாள்.
நன்மைக்குப் பலனைத் தருபவர் இயேசு .. .. பலனுக்காய் நன்மைகள் செய்வதல்ல இலாபம்.
மனிதம் வாழ உதவுபவர் தமக்கு .. வாழ்வின் அருளைப் பொழிபவர் இயேசு.
உதவும் மனங்களுக்குப் பேதங்களில்லை .. ..வழங்கும் கரங்களுக்கு வேறுபாடுகள் இல்லை... .. ஆண் என்றும் பெண்ணென்றும் இல்லை. .. மனிதத்தை மதிக்கும் பண்பொன்றே தேவை. அநீதி கண்டு அது பொறுப்பதுமில்லை .. .. அநீதிக்குத் துணை போவதுமில்லை.
இயேசுவோடு பேசுவோம் .. .. ஆசையோடு சொல்லுவோம்..:-
' அநீதிகள் கண்டும் மௌனியாய் வாழாமல் .. .. நீதிக்காகச் செயல்படவேண்டும் .. நான் ஆணென்றும், பெண்ணென்றும் தயங்குதல் வேண்டாம் இயேசுவே. துணிவுடன் எதிர்க்கின்ற வரம் தர வேண்டும். '
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

26. 'அது (ஞானம்) அது மீண்டும் அவர்களிடமே வந்து அவர்களை மகிழ்விக்கும்| அவர்களுக்குத் தன் இரகசியங்களை வெளிப்படுத்தும்.
அதைவிட்டு அவர்கள் விலகிச் சென்றால், அவர்களை அது கை விட்டுவிடும்| அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.'
நீதி வழி நடக்க வேண்டியவர்கள் அதை விட்டு விலகி நடந்து தம் சுய நலனை மனதிற்கொண்டு செயற்பட முனைந்தால் அவர்கள் வாழ்வு நரகமாகும். அவர்கள் பெறும் வெற்றிகள் தற்காலிகமானதே. அவர்களும் ஏதோ தம் வழிதான் சரி வழி என்று தம் போக்கிலேயே தொடர்ந்தும் வாழ்வார்களானால் அவர்கள் வீழ்ச்சி நிச்சயம். கடவுள் அவர்களைத் தக்க தருணத்தில் கைவிட்டு விடுவார்.
ஏழாம் நிலை
வாட்டும் சிலுவை
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
துன்பங்கள் நாளும் தனித்து வருவதில்லை .. .. தன்னைக் கண்டு அஞ்சுபவர் தம்மை விட்டுப் போவதுமில்லை. .. பட்ட காலிலே பட்டு நிற்கும். .. .சுட்ட புண்ணிலே வேலைப் பாய்ச்சும்!
அழுகையும் , புலம்பலும் அதன் உடன் பிறப்பு. .. அழிவும் சாவும் அதன் பின் விளைவு.
துன்பத்தைப் பகிரத் துணையொன்று தேவை .. .. அதை எதிர்த்து நின்றிட நெஞ்சுரம் தேவை.!
இயேசுவோ ஒன்றும் நோஞ்சானல்ல. .. உடல் வலிமையில் அவர் சலித்தவருமில்லை... .. ஆனாலும், தொடரும் துன்பங்கள் அவரை வாட்டவே.. .. அவரது உடல் அவரைக் கைவிட்டது.
துன்பத்தின் தன்மை புரிந்தவர் அவர் .. .. வேதனையின் தன்மை தெரிந்தவர் அவர்.!
துன்பத்தின்போது துணைவர அவரைப்போலொரு நெஞ்சமில்லை... ..
பல சந்தர்ப்பங்களில் ஏதோ எமக்குத்தான் தீராத தலைவலியும், மாறாத மனவலியும் போலிருக்கும்.. ..
ஆனால் அடுத்தவர் கதையைக் கேட்பதில்தான் எம் துன்பம் ஒன்றும் பெரிதல்ல என்ற உண்மை எமக்குப் புரியவரும்.
நம் வாழ்க்கை நலமாய்ப் போகும்போது கடவுளை அதிகம் நினைப்பதில்லை. வாட்டும் துன்பச் சூழலில் கடவுளைப் பிரிய மனமில்லை.
துன்பத்தைச் சுமந்த இயேசுவிடம் எம் நெஞ்சத்தைத் திறந்து சொல்லி வைப்போம்:-
'துன்பம் வரும் வேளையிலே இயேசுவே.. .. உம்மை நினைக்கின்ற எந்தன் நெஞ்சம் ... ..சொகுசும் வசதியும் பெருகிவிட்டால் எண்ணியும் பார்ப்பதில்லை ஏன் இயேசுவே.? என் துன்பத்தில் உதவியைத் தேடும் நான் .. .. ஏன் பிறர் துன்பத்தில் பங்கு கொள்வதில்லை? சுயநலம் என்னை மாற்றினால் விடுதலை எனக்குத் தரவேண்டும். .. அயலவன் தன்னை என்போல நினைக்கின்ற பண்பைத் தரவேண்டும்.'
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.


27. 'தக்க நேரம் பார்| தீமையைக் குறித்து விழிப்பாய் இரு| உன்னைப் பற்றியே நாணம் அடையாதே.
ஒரு வகை நாணம் பாவத்திற்கு இட்டுச் செல்லும்| மற்றொரு வகை நாணம் மாட்சிமையையும், அருளையும்            தரும்.
பாகுபாடு காட்டி உனக்கே கெடுதி வருவித்துக் கொள்ளாதே| பணியின் பேரால் வீழ்ச்சி அடையாதே'

எட்டாம் நிலை
கண்ணீரும் கம்பலையுமாய்ப் பெண்கள்
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
கண்ணீரே வாழ்வின் நியதி என்ற நிலையிலிங்கு .. ..அழுவதற்கென்றே பிறந்துவிட்ட அனாதைச் சீவன்கள்.

தந்தையில்லை, தாயுமில்லை, பராமரிக்க யாருமின்றி .. ..ஒருவேளைச் சோற்றுக்கே வகையின்றி அலையும் பரிதாப மனிதங்கள்.. ..
பிச்சையெடுப்பதையே தொழிலாக எடுத்துக் கொண்டு விட்டதால், நிஜங்களுக்குப் பெரும் தட்டுப்பாடு இங்கே. ..!
பயணவேளையில் .. .. பாதையோரத்தில் .. .. கடைத்தாழ்வாரத்தில்.. .. எங்கும் பரிதாபக் கோலங்கள்.
இனவிகாரத்தின் கொடுமையால் அனாதையாகிப் போனவர்கள்.. .. தாய் தந்தை வெறுப்பினால்.. .. விளைந்த சண்டையினால் நாதியற்றுப் போனவர்கள்.. .. பொறுப்பற்றுத் தந்தை மதுவிலும், புகையிலும் சாம்பலாகிப் போனதால் திக்கற்றுப் போனவர்கள்.. .. இவர்கள் தெருவோரப் பிள்ளைகள்! கண்ணீரும் பசியும்தான் இவர்களது தாய்மொழி.. ..
வருவாய் ஏதுமின்றி.. .. வயிற்றுப் பசிபோக்க வழியுமின்றி .. .. வழிதவறிய உயிர்கள். .. .. உழைத்துக் காயும் மனிதங்கள்!
இதையெல்லாம் கண்டும் காணாதவர்களாய் நாங்கள்!!
அவர்களுக்கெல்லாம் ஆறுதல் கூறும் இயேசுவிடம் சொல்லுவோம்:-
' நன்றி சொல்லவேண்டும் இயேசுவே .. .. நான் உமக்குப் புகழ்பாடவேண்டும் இயேசுவே. .. அன்பு செய்ய நல்ல தாயுள்ளத்தையும், பாதுகாத்து வளர்க்க அன்புத் தந்தையையும்.. .. துணையாய் நிற்கச் சகோதரர்களையும்.. .. ஆபத்திலுதவும் நண்பர்களையும் .. .. கருத்தில் கலந்த மனைவியையும்.. .. எண்ணத்தில் நிறைந்த கணவனையும்.. ..வாழ்வின் நிறைவாய்ப் பிள்ளைகளையும்.. ..நலமாய்த் தந்த இயேசுவே உமக்கு நன்றி!.. இந்த நிறைவோடே, அழுகின்ற நெஞ்சங்களுக்கு உம்போல் ஆறுதல் வழங்கி நிற்க  நல்ல மனம் தரவேண்டும் இயேசுவே.'
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன. ஆமென்.

28. 'பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்து விடாதே.
ஞானம் பேச்சில் புலப்படும்| நற் பயிற்சி வாய் மொழியால் வெளிப்படும்.
உண்மைக்கு மாறாகப் பேசாதே.
உன் அறியாமைக்காக நாணம் கொள்.
உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே| ஆற்றின் நீரோட்டத்தை தடை செய்ய முயலாதே'

உண்மைக்காக, நீதிக்காக, அடுத்தவர் நன்மைக்காக பேச வேண்டிய இடத்தில் பேசாது விடுவது பெருந்தவறாகும். முகத்தாட்சணியம், நம் உயிர், பொருள் பண்டங்கள் மேல் உள்ள ஆசை, பணம், பதவி, பட்டங்களுக்காக வாய் மூடி மௌனியாய் இருப்பது அநியாயமான செயலாக அமைந்து விடும். அநீதிக்குத் துணை போவதாக அமைந்து விடும். உரியவருக்கு உரிய நீதி வழங்கப்படுவதை அது தடுக்கும். எது சரி, எது பிழை என்பதை ஞானம் நமக்குக் காட்டித் தரும்போது, தவறு நடந்தால் அது தவறு என்றும், சரியென்றால் அது சரியென்றும் வாய் திறந்து பேசுவது மனித குலத்திற்கு நன்மையே தரும். அது தருமமும் ஆகும். பேசாமை என்பது கோழைத்தனமாக அமைந்து விடும், காலந்தாழ்த்திப் பேசுவது கூட இழைக்;கப்பட்ட அநீதியை திருத்திக் கொள்ள உதவாமற் போய்விடும். நாம் தவறிழைத்தால் உரிய போதில் உரியவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வது நீதியானது. அத் தவறை உணர்ந்து வேண்டும் மன்னிப்பு நமக்குப் பெருமை சேர்க்கும். பவுல் அடியார் நீரோட்டத்திற்கெதிராக செயற்பட முனைந்து நின்றவர்தான். அதைத் தக்க வேளையில் இறைவன் தடுத்து நிறுத்தி 'நாட்டுக் கட்டையை எதிர்த்து உதைப்பது கடினம்' என்று உணர்த்தி வைத்தார். அதன் பிறகு நீரோட்டத்திற்கெதிராக நீச்சல் போடவேயில்லை. அதனோடு சேர்ந்து நீந்தினார்| உண்மைக்காக வாய் திறந்து பேசி போராடினார். அதனால் இறைவனுக்கு உகந்தவரானார்.

ஒன்பதாம் நிலை
வீழ்த்தப்பட்ட இயேசு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
அடிமேல் அடிவைக்க  அம்மியும் நகர ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். மீண்டும் மீண்டும் தூண்டப்படும் பலயீனமான மனது தவறும்!
நகருகின்ற பாதையில்  தடையொன்றைக் கண்டுவிட்டால் .. ..ஊருகின்ற நத்தை கூட சுற்றிக் கொண்டு போகும் .. ..! ஆனால் மனிதன் .. ..? சாக்கடை என்று அறிந்த பின்னும், பின்னர் சந்தனத்தைத் தெளித்துக் கொள்ளலாம் என்று .. .. சாக்கடைக்குள் இறங்கி விடுபவன்.
மற்றவர் தவறிலே தம் வயிற்றை வளப்படுத்திக் கொள்ளும் மனிதங்கள் மண்ணில் மலிந்தே கிடக்கின்றன. .. ..!
மற்றவனது வீழ்ச்சியில் தம் வாழ்வைப் பலப்படுத்திக் கொள்ளும் மனிதங்களும் இங்கு இல்லாமலில்லை.
பிறர் தவறினைக் கண்டு சிரிப்பவர் தமக்கு அவர்தம் வாழ்வே சிரிப்பாய் அமைந்துவிடும். .. .. தவறுபவர் தம்மைத் திருத்துவார் தமக்கு தர்மமே காவலாய் நிற்கும்.
மனம் தவறும் என்று தெரிந்தபின் சென்று தவறுதல் பாவம் ஆகும். தவறியபின் அதைத் தொடராமல் அதிலிருந்து மீள்வதே புனிதம் ஆகும்.
தவறியோர் வாழ்வுக்குக் கலங்கரை விளக்காம் இயேசுவிடம் போவோம்:-
' இயேசுவே தவறைப் புரிபவன் மனிதன் உணர்வோம் தெளிவோடு.. .. வீழ்ந்த பின் தெளிந்து திருந்துதல் புனிதம் அறிவோம் உணர்வோடு. பிறர் வீழ்ச்சியில் நாம் உயர்ச்சி காண்பதில் மகிழ்ச்சி கனவிலும் கிடையாது. வீழ்ந்தார் தம்மை வாழ வைப்பதே மனிதத்தின் சிறப்பாகும். சுயநலப்பற்று அறுத்த நிலையில் தவறிவிடாமலும், தவறப்பண்ணாமலும் வாழும் வரம் வேண்டும் யேசுவே.'  என்று இரைஞ்சி நிற்போம்.
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!


மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில்
இளைப்பாறக் கடவன. ஆமென்.

29. 'மூடருக்கு அடிபணியாதே| வலியோருக்குப் பாகுபாடு காட்டாதே.
இறக்கும் வரை உண்மைக்காகப் போராடு| கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார்.
பேச்சில் துடுக்காய் இராதே| செயலில் சோம்பலாகவும், ஈடுபாடின்றியும் இராதே.
வீட்டில் சிங்கம் போல் இராதே| பணியாளர் முன் கோழையாய் இராதே.'
உண்மைக்காக சாகும் வரை விட்டுக் கொடுக்காது போராடுவது கடவுளுக்கு உகந்த செயலாகும். 'சொல்வது தவறு என்றால் சுட்டிக் காட்டு| நான் சொன்னது சரியென்றால் நீ என்னை அடிப்பானேன்?' என்று மரணத்தின் விளிம்பிலிருந்தும் அஞ்சாது கேட்ட இயேசு பிலாத்திடம் உண்மைக்குச் சாட்சியம் சொல்லவே வந்தேன் என்று உறுதிபட நெஞ்சை நிமிர்த்தி நின்று பேராடுகின்றார். தமக்கு மரணத் தீர்வு கிடைத்தாலும் அவர் அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதை பிலாத்திடமே தெளிவாகக் காட்டி விடுகின்றார். நமக்குத் தெரிந்தவர் என்பதற்காகவும், அவருக்கு எதிராக நின்றால் நம் வாழ்வு பாதிக்கப்படும் என்பதற்காகவும் நாம் நீதியைக் கைகழுவி விட்;டால் தேவைப்படும்போது நீதி நம்மைக் கைவிட்டு விடும். எவர் எந்தளவுக்கு முக்கியமானவர்களாய் இருந்தாலும், பெரு மனிதர்களாக. புனிதர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டாலும் நாம் நீதி வழி நின்று போராடும்போது கடவுளின் அருள், நீதி தேவனின் வலிய கரம் நம்மோடு நம் போராட்டத்தில் உடனிருந்து செயற்படும் என்பது உறுதி!
பத்தாம் நிலை
அவமானப்படும் இயேசு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
பிறர் வெறுமை கண்டு .. .. அவர் வறுமை கண்டு .. .. மகிழ்ந்தவர் இயேசு அல்ல.. .. அடுத்தவர் ஏழ்மை கண்டு .. .. அவர் எளிமை கண்டு சிரித்தவர் இயேசு அல்ல ... ...!
மனித நிறத்தைக் கண்டு .. .. அவன் பணத்தைக் கொண்டு .. .. மதிப்பைக் கொடுத்தவர் இயேசு அல்ல .. ..ஒருவன் மதத்தைக் கொண்டு .. .. அவன் இனத்தைக் கொண்டு  இழிவு சொன்னவர் இயேசு அல்ல .. ..!
மனித மடமை கண்டு.. .. அவன் அறியாமை கண்டு நகைப்பவர் இயேசு அல்ல .. ..
ஆனால் அவரோ வெறுமையாக்கப்பட்டு .. .. பரிகசிக்கப்பட்டு .. .. நகைக்கப்பட்டு..
இன்று பெருமைப்படும் மனிதங்களாக வாழும் நாம் எத்தனை தூரம் கிறீஸ்தவன் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இயேசு வெறுத்தவற்றையும், .. .. செய்ய மறுத்தவற்றையும் செய்து கொண்டிருக்கின்றோம் .. ..?
நாம் உயர்ந்துவிட்டோமென்றும்,.. ..பிறர் தாழ்ந்து போயினரென்றும் சிரிப்பவர் வாழ்வு கண்டு ஒரு நாள் பிறர் நகைக்கவே செய்வர்.. .. ஏனென்றால் வாழ்க்கை என்பது  வண்டிச் சக்கரம் போன்றது... .. அதில் எந்தப் புள்ளியும் நிலையாய் இடத்தில் இருப்பதில்லை ... .. உயர்வும் தாழ்வும் அங்கே பழக்கம் .. .. இதை ஏற்காதார் வாழ்வு நகைக்குள்ளாகும் என்பதே உலக வழக்கம்!
மனிதத்தை மதிப்பார் அதன் நிலை கண்டு நகைப்பதுமில்லை, எள்ளி நகையாடுவதுமில்லை.. .. !
பிறரை மதித்த இயேசுவிடம் போய் உண்மையைச் சொல்லி வைப்போம்:-
'பிறர் வாழ்வைக் கண்டு.. .. அவர் வாதை கண்டு நகைத்தவன் நான் இயேசுவே.. .. அவர் நிறத்தைக் கண்டு, வெறுந் தோற்றங்கண்டு வெறுத்தவன் நான் இயேசுவே.. .. மற்றவர் அந்தஸ்துக்கும்.. .. அவர் பணத்திற்கும் மதிப்புத் தந்தவன் நான் இயேசுவே.. ..  அயலவன் மனத்திற்கும்.. .. அவன் குணத்திற்கும் இடத்தை நான் கொடுத்திட  வரம் தாரும் இயேசுவே.. .. '
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

30. 'பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே| கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக் கொள்ளாதே.
உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே| 'எனக்கு அவை போதும்' எனச் சொல்லாதே.
உனது நாட்டங்களுக்கும், வலிமைக்கும் அடிமையாகாதே| உனது உள்ளங்களின் விருப்பங்களைப் பின்பற்றாதே.
உனக்கு எதிராகச் செயற்படக் கூடியவன் யார் எனச் சொல்லாதே| ஆண்டவர் உன்னைத் தண்டியாமல் விடமாட்டார்'
பெறும்போது ஆவலுடன் கைகளை விரித்து நிற்கும் நாம் அடுத்தவர்க்கு கொடுக்கும்போது அதே கைகளை சுருக்கி மூடிக் கொள்கிறோம். அத்தனை கஞ்சத்தனம் நமக்கு. நிறைய இருந்தால் அள்ளிக் கொடுத்தும், குறைய இருந்தால் கிள்ளிக் கொடுத்தும், எதுவும் இல்லையென்றால் இரண்ட வார்த்தைகளையாவது ஆறுதலாகச் சொல்லி வை என்று கொடுக்கின்ற மனநிலை எப்படியாக இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். நாம் தேடிய தேட்டங்களில் முழுமையாக நம்பிக்கை வைத்து வாழுகின்ற நாம் நமது செயல்கள், சிந்தனைகள், சொற்கள் மூலம் நம்மை வந்தடையக்; கூடிய முதிசத்தை மறந்து விடுகின்N;றாம். வேளைகளில் நம்மில் நாமே அதிகம் நம்பிக்கை வைத்தவர்களாய் வாழ முற்படுகின்றோம். ஆனால் நினையாத நேரத்தில் வருவது இறைவனின் நீதி. அப்போது நாம் தேடிய எதுவும் நம்மோடு வருவதில்லை. வரும்போது நமக்கென ஏதையோ கொண்டு வருவது போன்று மூடிக் கொண்டு வந்த கரங்களை போகும்போது கொண்டு செல்ல எங்களிடம் ஒன்றுமேயில்லை என்பது போல் கைகளை விரித்து முடித்து வைக்கின்றோம் நம் வாழ்வை.
பதினோராம்; நிலை

சிலுவையில் இணைப்பு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
சிலுவையினின்றும் மீளாதபடி இயேசு ஆணி கொண்டு பிணைக்கப்படுகிறார் .. ..அவரல்ல ! .. .. கிறீஸ்தவமே அங்கு சிலுவையோடு இணைக்கபடுவது .. ..!! .. இனி சிலுவை வேறு .. .. கிறீஸ்தவம் வேறு  அல்ல!!!
மனிதனின் பாதையும், இறைவனின் பாதையும் குறுக்கறுத்ததின் அடையாளமாக இயேசு சிலுவையடையாளத்திலே வரலாற்றுச் சின்னமாகப் பிணைக்கப்படுகிறார்.
மனிதம் மண்ணில் நிலைபெறத் தன்னில் ஆணியை ஏற்றுகின்றார் .. .. இயேசு, புனிதம் மனிதனில் இடம்பெறவென்று சிலுவையில் ஏறுகின்றார்.
சிலுவையின்றேல் மீட்சியில்லை .. .. எமக்குச் சிலுவையின்றேல் ஒரு வாழ்க்கையில்லை என்கின்ற நிலையை உணர்த்தும் அடையாளமாகத் தன்னைச் சிலுவையில் பிணைக்க வைக்கின்றார் இயேசு.. ..!
எமக்காகத் தம் தோளிலும், பின்னர் கை, கால்களிலும் சிலுவையை ஏற்ற இயேசுவிடம் சொல்வோம்:-
' இயேசுவே , பாவத்தை மனதிலே கருத்தரிக்கும் நாங்கள் .. .. சாவின் கருவறைதான் ! ஆனால் எம் பாவத்தை நீர் சிலுவைக்கு மாற்றியதாலே எம் உள்ளத்தைப் புனிதம் ஆக்கினீர் .. .. நீரும் நானும் சந்திக்குமிடம்தான் சிலுவை என்று அறிவேன் .. .. சிலுவை வாழ்வில் அகன்றுவிட்டால் உம்மை நினைப்பது அருகிவிடும்.. .. ! கிறீஸ்தவம் காட்டும் சிலுவையில் என்னைப் பிணைத்திட வரம் தாரும் இயேசுவே.'
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

31. 'நான் பாவம் செய்தேன்| இருப்பினும் எனக்கு என்ன நேர்ந்தது? எனக் கூறாதே. ஆண்டவர் பொறுமை உள்ளவர்.
பாவத்திற்கு மேல் பாவம் செய்யும் அளவுக்கு பாவ மன்னிப்புப் பற்றி அச்சம் இல்லாமல் இராதே| ஆண்டவரின் பரிவு எல்லையற்றது.
எண்ணற்ற என் பாவங்களை அவர் மன்னித்து விடுவார் என உரைக்காதே. அவரிடம் இரக்கமும், சினமும் உள்ளன| அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்.'
பலரும் நாம் நம் பாவ வாழ்வின் விளைவால் மனச்சாட்;சியை சாத்தானிடம் அடவு வைத்து விட்டு, அது மரத்துப்போன நிலையில், தொடர்ந்தும் பாவங்கள் பண்ணுவதோடு கடவுளை ஏளனமாக எண்ணுகின்ற நிலைக்கும் சென்று விடுகின்றோம். கடவுள் என்ன செய்துவிட்டார்? எனக்கென்ன தண்டனையைத் தந்தார் அவர்? என்று இறுமாப்புக் கொள்ளுகின்றோம்.  மதத் தலைவர்கள் கூட தாம் இறைவனுக்கு அடுத்துள்ளவர்கள் என்பதால்  என்ன பாவமும் பண்ணலாம் என்று அடாவடியாக நடந்து கொள்ளுகின்றார்கள். இறைவன் ஏராளமாக வாய்ப்புக்களைக் கொடுக்கிறார்| பாவம் செய்யவல்ல, பாவத்திலிருந்து திருந்தவும், மனம் வருந்தி மன்னிப்புப் பெறவும்! அதை இறைவனுடைய பலயீனமாக எடுத்துக் கொண்டு கடவுளுக்கு அடுத்திருப்போர் என்ற மமதையில் குற்றம் பண்ணியவர்கள் இன்று சிறையிலடைக்கப்படுகின்றனர். தவறுகளில் மாட்டிக் கொண்டால், ஆளுக்கு ஆள் தூதனுப்பி மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முனைகின்றனர். மனம் திருந்தியல்ல, மானம் போய் விடுமென்று மூடி மறைக்கவே. தொடர்ந்தும் பாவத்தைப் பண்ண அவர்கள் தயங்குவதில்லை. சாதாரண மனிதர்களிடம் இருக்கும் மன உறுத்தல் கூட அவர்களிடம் இருக்குமா என்பது சந்தேகமே. கடவுள் ஏனோ அன்றறுப்பதில்லை. அவர் நின்றுதான், அதாவது பொறுமையோடு இருந்துதான் சாதிப்பவர்.

பன்னிரெண்டாம் நிலை

உயிரைத் தருகின்ற இயேசு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
மனிதனால் கொடுக்கப்படக்கூடிய அதியுயர் காணிக்கை உயிராகத்தான் இருக்க முடியும்! மனித மீட்புக்காக இயேசு கொடுக்கும் அதியுயர் காணிக்கை அவரது உயிராக அமைகிறது.
மனித இனத்தின் பாவங்களையெல்லாம் .. .. தம் தோளிலே ஏற்று,.. .. கடூரமான பாதை கடந்து தூக்கிச் சென்று .. .. சிலுவையில் அவற்றைத் தம்மோடு பிணைக்கப்பண்ணி.. .. அவற்றையெல்லாம் மரணிக்கப்பண்ணுகிறார் இயேசு!
பாவத்தின் விலை இயேசுவின் உயிர்.. ..! இந்த விலை நியாயமானதுதானா? .. .. நமது பாவத்திற்கு விலை இயேசுவின் உயிரா.. ..? இயேசுவின் உயிருக்கும் ஒரு விலையா.. .. ? இது முறையா.. ..?
ஒருத்தர் தவறு செய்ய இன்னுமொருத்தர் விலை கொடுப்பதென்பது எந்த வகையிலும் தர்மம் அல்ல! .. .. நீ விதைக்க அதை அடுத்தவன் அறுத்துக் கொண்டு போவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.. ..! ஆனால் பாவத்தை விதைத்துக் கொண்டு நீ திரிய.. .. இயேசு அதன் கனியை .. ..விளைவை அறுவடை செய்கிறார்... .. விடுதலை வாழ்வை உனக்கு உயில் எழுதி வைத்துவிட்டு .. ..தன் உயிரைத் தருகிறார்.. .. உனக்கு அருள் உயிரைத் தருகிறார்.
உலகிற்காக உயிர் தந்த இயேசுவிடம் சொல்லுவோம்:-
' இரத்தத்தால் விடுதலைக் கவி பாடி.. .. மரணத்தால் மீட்பென்னும் உயில் எழுதி .. ..தலைமுறைதோறும் எம்மை உம் அருட் சொத்தில் பங்கு பெறப் பண்ணிய இயேசுவே.. .. நான் செய்யும் தவறுகளின் பொறுப்பினை நான் ஏற்க வேண்டும்.. .. பாவத்தை விட்டு நான் விரண்டோட வேண்டும்.. .. அதற்கான நெஞ்சுறுதி எனில் வரவேண்டும்.. .. வளரவேண்டும்.'
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

ஏப்ரில் மாதம்
'ஆண்டவரிடம் திரும்பிச் செல்ல காலம் தாழ்த்தாதே| நாள்களைத் தள்ளிப் போடாதே. ஆண்டவரின் சினம் திடீரென்று பொங்கி எழும்| அவர் தண்டிக்கும் காலத்தில் நீ அழிந்து போவாய்.

முறைகேடான செயல்களில் நம்பிக்கை வைக்காதே| பேரிடர் நாட்களில் அவற்றால் உனக்குப் பலன் இராது.

எல்லா வகைக் காற்றிலும் தூற்றிக் கொள்ளாதே| எல்லா வழிகளிலும் போகாதே. இரட்டை நாக்குக் கொண்ட பாவிகள் இவ்வாறே செய்வார்கள்.'

ஒரு முறை செய்தது தவறென்று உணர்ந்து கொண்டால் அதற்கான பிராயச் சித்ததைத் உடனே தேடிக் கொள்ள வேண்டும். காலம் தாழ்த்துவது நமக்கான வாய்ப்பை அற்றுப் போகச் செய்து விடக் கூடும். ஒரு விடயத்தில் இறங்க போதுமான நேரம் எடுத்து ஆற அமர யோசித்துப் பார்த்து அதில் ஈடுபடுவது சகஜம்தான். 'எண்ணித் துணிக கருமம்'! அது தேவையானதாகவும் இருக்கும். ஆனால் தவறுக்குப் பிராயச்சித்தம் தேட காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது. சந்தர்ப்பம் என்பது தரித்து நிற்காத ஒரு பறவை என்பார்கள். ஒரு கணம் ஒரு கொப்பில் இருக்கும். அது நமக்கு அருகிலிருக்கும்;. உடனே அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். தவறவிட்டால், தாமதித்தால்;,  ஒரு நொடியில் அது அடுத்தவனுக்கருகில் இருக்கின்ற் கொப்புக்குப் பறந்து போய் விடும். அதன் பிறகு அதை வருந்தி அழைத்தாலும் வராது, கொப்பு மாறி கொப்பு போய்க் கொண்டே இருக்கும். அதன் பின்னர் பெரு மூச்சு விட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை. போன வாய்ப்பு போனதுதான். நினையாத நேரத்தில் மணமகன் வருவதைத் திரும்பத் திரும்ப இயேசு வலியுறுத்தி நின்றார். அதனால் காலம் கடந்த எதுவும் கடந்த செயலாகவே மாறி விடும் முன்னம் காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டியதே புத்தசாலித்தனமாகும். அது எதிர்க்காற்றாய் அமைவது நமக்குப் பாதகமாய் அமைந்து விடும்!

பதின் மூன்றாம் நிலை

அன்னையின் மடியில் இயேசு
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகின்றோம்.
அதேதென்றால் உமது திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்
ஆராரோ பாடி அவரை அழாமல் தூங்கப் பண்ணியவள் .. .. யார் யாரோ வாழவென்று பலியாகத் தனையீந்த அன்பு மகனை மடியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஒப்பாரி பாடுகிறாள்... ...! மலைபோல நடமாடி .. .. சென்ற இடமெல்லாம் நிறைந்துவிடும் அழகு மகன், உணர்விழந்து , உயிரிழந்து சவமாக அங்கே துவண்டிருக்கக் கண்டு.. .. தூக்கிப் போட்டுக் கொண்டு புலம்புகிறாள்.!!
உலக மீட்புக்கு ஒரு மகனை வழங்க வேண்டும் என்றே அவள் விரும்பி நின்றாள்.. .. இருந்தும் தன் மகனை இழப்பதென்றால் எந்தத் தாய்தான் பொறுத்துக் கொள்வாள்? .. .. அதுவும் தான் பெற்றெடுத்த தலைச்சனை.. ..?
மனிதங்களின் அக்கிரமங்கள் இன்று எத்தனை அன்னையரை கன்றிழந்த பசுவாகக் கதறப்பண்ணிருக்கின்றன... ..? இன்றுங் கூட அன்னையவள் வயிற்றினிலே பத்து மாதங்கள் சுமந்துபெற்ற உயிர்கள் புதைகுழிகளுக்குள் இருந்தல்லவா மீட்கப்படுகின்றன .. ..? உருக்குலைந்த எலும்புக் கூடுகளாகவல்லவா அவர்கள் சிதைந்து போயிருக்கின்றனர்.. ..?
இந்த அக்கிரமங்கள் தொடருமா.. ..? அல்லது வக்கிர மனங்கள் இன்னும் பலி கேட்குமா.. ..?

சிதைந்து விட்ட மனித நேயங்கள் வாட்டுவது பெற்ற தாயைத்தான்.. ..! மரியாளும் இதற்கு விதிவிலக்கல்ல .. ..! அவள் எதிர்பார்த்திருந்த முடிவுதான். .. ஆனாலும் இத்தகைய கொடூரத்தை அவள் கனவிலும் நினைத்திருந்ததில்லை !
பெற்றெடுத்த அன்னையை மனித மீட்புக்காகப் பிரிந்து சென்ற இயேசுவிடம் கூறி வைப்போம்.:-
'தாயென்ற பெருமையினைப் பெற்றெடுக்கும் போதெல்லாம் செத்துப் பிழைக்கும் அன்னையரின் துயர் நீக்க வரம் வேண்டும். இயேசுவே.. .. உலகின் ஒவ்வொரு மூலையிலும் யுத்தம் என்ற கொடிய நோய் பீடித்து மனிதரை அழிக்கின்ற கொடுமை இந்த மண்ணிலே மறைய வேண்டும்.. .. அதற்காக நான் அயராது உழைக்கின்ற வரம் வேண்டும்.'
எங்கள் பேரிற் தயவாய் இரும் சுவாமி.. .. எங்கள் பேரிற் தயவாய் இரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சர்வேசுரனின் இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவன.

2.
பதினான்காம் நிலை




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7