
ஆச்சரியமளிக்கக் கூடிய வகையில் வௌிப்படுத்தும் ஒரு இயற்கை பாலம் பெரு நாட்டில் உள்ளது.
வெறும் புற்களைக் கொண்டு கைகளால் நெய்து தயாரிக்கப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ பகுதியில் ஓடும் அபோரிமாக் நதிக்கு குறுக்கே இந்த பாலம் அமைந்துள்ளது.
இன்கா அரசில் இந்த பாலம் நகரங்களை இணைத்தது. யுனெஸ்கோவால் 2013 ஆம் ஆண்டு உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது.
புற்களால் செய்யப்பட்ட இந்த பாலத்தின் கயிற்றை ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்தி, புது கயிற்றை இரு பக்கமும் பிணைக்கிறார்கள். பல தலைமுறைகளாக இந்த பழக்கம் தொடர்ந்து வருகின்றது.
இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் கூடி, சிதிலமடைந்த கயிற்றை அப்புறப்படுத்தி புது கயிற்றை கட்டி, இந்த பாலத்திற்கு உயிரூட்டுகிறார்கள்.
பாலம் கட்டும் பணியில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவதுடன், பெண்கள் இந்த பாலத்திற்கான கயிற்றை புற்கள் கொண்டு நெய்து தருவார்கள். மூன்று நாட்கள் இந்த பாலம் கட்டும் பணி இடம்பெறும்.
முதல் நாள் ஆண்கள் அனைவரும் கூடி, புற்களால் நெய்யப்பட்ட சிறு கயிறுகள் அனைத்தையும் ஒன்றாக்கி பெரிய கயிறாக மாற்றுகிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் இதற்கான கயிற்றை வழங்கி பங்களிப்பு செய்ய வேண்டும்.
கயிறு உறுதியாக இருக்க இந்தப் புற்களை நன்கு அடித்து, பின் தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னே நெய்வார்கள்.
பழைய கயிறு பாலம் ஆற்றில் தள்ளிவிடப்படுவதுடன், மக்கிப் போகும் பொருள் என்பதால் அது ஆற்றில் கலந்து நாளடைவில் மக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாலம் கட்டும் பணியில் எந்த நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட மாட்டாது. முழுவதுமா புற்கள் மற்றும் மனித ஆற்றலை கொண்டு மட்டுமே இந்தப் பாலம் கட்டப்படுவது சிறப்பம்சமாகும்
