
மக்களிடையே இருந்த மதப்பற்று தற்போது இல்லை என்று அந்த மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பரந்த துல்லியமான கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.
அரபு மொழி வானொலி சேவை ஒன்றுக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல்களை நடத்தியது. கடந்த 2018-19 ஆண்டுகளில் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் தங்களை “மத நம்பிக்கையற்றவர்கள்” என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எண்ணிக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 8 லிருந்து 13 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
30 வயதிற்குட்பட்ட அரபு பிரஜைகளே அதிகளவில் தங்களை மத நம்பிக்கையற்றவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதில் ஏமன் நாடு மாத்திரம் விதிவிலக்காக உள்ளது. அதேபோன்று ஒரு பெண் அங்கு பிரதமர் அல்லது ஜனாதிபதியானால் பெரும்பாலான மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள்.
இதில் அல்ஜீரியா மட்டும் விதிவிலக்காக உள்ள நிலையில், அங்கு 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஒரு நாட்டின் தலைவராக பெண் பதவியேற்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆனால் வீட்டு விவகாரங்கள் என்று வரும்போது, பெரும்பாலான பெண்கள் உட்பட, பலரும் கணவர்தான் குடும்பத்திற்கான இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று நம்புகின்றனர். மொரோக்கோ நாட்டில் மட்டும் சரிபாதிக்கும் குறைவான மக்களே கணவன்மார்கள் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.
