இலங்கையில் தற்போது ஒரு சமூகம் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
கினிகத்தேனை மத்திய கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமை அவர்களுடைய ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றது. பதவி விலகல் சரியா பிழையா என்பதை விட ஒரு சிறந்த உதாரணமாக அவர்கள் சமூக ரீதியாக சிந்தித்து செயற்பட்டிருக்கிறார்கள்.
இன்று இந்த நாட்டில் ஒரு சமூகம் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நான் உணர்கின்றேன். சமூகங்கள் தனித்தனியே பிரிந்து நிற்பதால் எதனையும் சாதிக்க முடியாது. முஸ்லிம்களிடம் இருக்கின்ற ஒற்றுமை மலையகத்திலும் வடகிழக்கிலும் தெற்கிலும் கூட இல்லை.
நாங்கள் ஒரு தேசிய பிரச்சினைக்கு ஒன்றுபட்டு செயற்படுவது இல்லை. கட்சி ரீதியாக பிரிந்து நிற்கின்றோம். இதுவே எங்களுடைய நாட்டில் பல பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்படாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
எனவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பேச்சுவார்த்தையின் மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.





