ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்துள்ள ஐந்து வழக்குக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி சமர்ப்பித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.
அத்தோடு இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
2010 – 2014 காலப்பகுதியில் சதொச ஊழியர்கள் 153 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு, அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் அரசாங்கத்திற்கு 40 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் ஏராஜ் பிரியந்த பெர்னாண்டோ, முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் மொஹிதீன் காதர் மொஹமட் சாஹிர் ஆகியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





