சீனப் பொருட்கள் மீது மேலும் 50 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி விதிக்கக் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சீனாவுடனான வர்த்தக விவகாரம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “சீனாவுடனான பேச்சுவார்த்தையில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்துள்ளன. என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
சீன பொருட்களுக்கு மேலும் 300 பில்லியன் டொலர்கள் அளவில் வரி விதிப்பது குறித்து யோசித்து வருகிறோம். இதை சரியான தருணத்தில் அமுல்படுத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
எனினும், எந்த பொருட்கள் மீது வரி விதிக்கப்படவுள்ளது என்பது குறித்த தகவல்களை ட்ரம்ப் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சீனா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் வர்த்தகப் போர் உச்சத்தை அடைந்துள்ளது. இரு நாடுகளும் மாறிமாறி பொருட்கள் மீதான வரி விதிப்பை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





