பிரித்தானியாவின் காப்புறுதி நிறுவனமான அவிவா (Aviva) நிறுவனம் உலகளாவிய ரீதியில் தனது பணியாளர்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளது.அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் 1,800 பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
செலவீனங்களைக் குறைக்கும் முயற்சியாகவே இந்தப் பணியாளர் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் நிறுவனத்தின் வர்த்தகம் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றது என்றும் அவிவா சார்பாகக் கூறப்பட்டுள்ளது.
16 நாடுகளில் அவிவா காப்புறுதி நிறுவன அலுவலகங்கள் இயங்குகின்றன. அவற்றில் உலகளாவிய ரீதியில் 30,000 பேர் பணியாற்றுகின்றனர்.
பிரித்தானியாவில் லண்டன், நோர்விச், யோர்க், டோர்க்கிங், பிரிஸ்ரல், பேர்த், ஷெபீல்ட், ஈஸ்ற்லீ, கிளாஸ்கோ ஆகிய நகரங்ககளில் உள்ள அலுவலகங்களில் 16,000 பணியாளர்கள் உள்ளனர்.
பணியாளர் குறைப்பு நடவடிக்கை தமக்கு அதிர்ச்சியளிப்பதாக அவிவாவின் உலகளாவிய பணியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை நிறுவனத்தில் வேலைசெய்யும் பணியாளர்களுக்கு நிறுவனத்தின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என்று பணியாளர் சம்மேளனத்தைச் சேர்ந்த அண்டி கேஸ் தெரிவித்துள்ளார்.





