LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, January 3, 2019

வட்டார வரலாறுகளே நாட்டு வரலாற்றின் அடிப்படை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அ.வெண்ணிலா பேச்சு-

     வந்தவாசி. டிசம்.22. வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டத்தின்
சார்பில் நடைபெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், வட்டார வரலாறுகளே
ஒரு நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கு அடிப்படையாக அமைகின்றன என்று
கவிஞர.வெண்ணிலா பேசும்போது குறிப்பிட்டார்.

        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார்.
விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.

        தொல்லியல் துறை ஆய்வாளரும் காப்பாட்சியருமான அ.ரஷீத்கான் எழுதிய ‘பெருநகர்
ஊர் வரலாறு’ எனும் நூலை வேலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர்
ஜெ.வெங்கடேசன் வெளியிட, கவிஞர் அ.வெண்ணிலா பெற்றுக்கொண்டார்.

          நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் அ.வெண்ணிலா பேசும்போது, "வரலாறு என்பது
வெறும் ஆண்டுவாரியான புள்ளி விவரங்கள் மட்டுமல்ல. அதையும் தாண்டி, அக்கால
மக்களின் வாழ்க்கை முறை, கலை, பண்பாடு, கலாச்சார விழுமியங்கள், வழிபாடு, உணவுப் பழக்கம்
என பலவற்றின் தொகுப்பிலிருந்தே வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பண்டைய
தமிழர்களைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள கல்வெட்டுகளும் வெளிநாட்டுப் பயணிகளின்
குறிப்புகளுமே நமக்கான ஆதாரங்களாக உள்ளன. கோவில்களிலுள்ள பெரும்பாலான கல்வெட்டுக்
குறிப்புகளை, கோயில்களைப் புனரமைக்கும் பணி எனும் பெயரால் அழித்துவிட்டோம்.
கோயில்களைப் புதுப்பிக்கும்போது கல்வெட்டுகளையும் குறிப்புகளையும் அப்படியே படியெடுப்பதோடு,
அவற்றை முறையாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளையும்  செய்ய வேண்டும்.
          ஒவ்வொரு ஊரின் பெயருக்குப் பின்னும் நாம் அறியாத பல வரலாறுகள் மறைந்திருக்கின்றன.
நம் முன்னோர்களின் வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் வரலாற்றைத்
தேடிக் கண்டெடுக்க வேண்டும். நமக்குத் தெரிந்த வரலாற்றுத் தகவல்கள் நம்மோடு அழிந்துவிடாமலிருக்க,
அவற்றை ஆவணமாகத் தொகுக்க வேண்டும். வளரும் இளைய தலைமுறையினருக்கு நம் முந்தைய
வரலாற்றைச் சொல்லித்தர வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.
          செப்பேடுகள், கல்வெட்டுகள், சங்க கால இலக்கியங்கள் இவற்றின் வழியே நமக்கு கிடைக்கும்
வரலாற்றுத் தரவுகளைத் தொகுத்து, அவற்றிலிருந்து நமக்கான உண்மையான வரலாற்றைக் கண்டறியும்
முயற்சியையும் நாம் தொடர வேண்டும். நமது வட்டார வரலாறுகளை நாம் எழுதினால், அந்த வரலாறே
நமது நாட்டு வரலாற்றிற்கான அடிப்படையாக அமையும்" என்று குறிப்பிட்டார். 

        ஆசியன் மெடிக்கல் அகாதெமியின் இயக்குநர் பீ.ரகமத்துல்லா, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க
தலைவர் அ.மு.உசேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

         விழாவில், ரூ.1000/- செலுத்தி, நூலகத்தின் 197-ஆவது நூலகப் புரவலராக இணைந்த
பீ.ரகமத்துல்லாவிற்கு பாராட்டுச் செய்யப்பட்டது.

          நிகழ்வை நூலக உதவியாளர் பு.நாராயணன் ஒருங்கிணைத்தார். நிறைவாக, நூலகர் ஜா.தமீம்
நன்றி கூறினார்.

    படக்குறிப்பு :
                            வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற வரலாற்று
நூல் வெளியீட்டு விழாவில், அ.ரஷீத்கான் எழுதிய ‘பெருநகர் ஊர் வரலாறு’ எனும் நூலை வேலூர்
மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ஜெ.வெங்கடேசன் வெளியிட, கவிஞர் அ.வெண்ணிலா
பெற்றுக்கொண்டார். அருகில் வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ்,  நூலாசிரியர.ரஷீத்கான்,
கிளை நூலகர் பூ.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7