
ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியிலுள்ள ஆர்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று(திங்கட்கிழமை) திடீரென எரிவாயு கசிவினால் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இரு குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் புத்தாண்டு தினமான இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்றைய தினம் கட்டட இடிபாடுகளில் சிக்கிய மேலும் மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
