
ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மக்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஓக்டோபர் 26 ஆம் திகதி இந்த நாட்டின் மிகவும் இருண்ட தினமாகவே பதியப்பட்டுள்ளது. எமது எதிர்த்தரப்பினரின் சூழ்ச்சியால், எமது பிரதமரும் சட்டபூர்வமான அரசாங்கமும் நீக்கப்பட்ட ஒரு தினமாகும்.
மூன்றரை வருடங்களுக்கு முன்னர் மக்கள் துரத்தியடித்த அந்த குழுவினர், இதன் ஊடாக மீண்டும் ஆதிகாரத்துக்கு வந்துவிட முடியும் என நினைத்தார்கள். பின் கதவால் வெட்கமின்றி வந்தார்கள்.
இந்த நாள் முதல் அவர்களுக்கு தோல்விமட்டும்தான் மிச்சமாக இருந்தது. நாம் நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றின் ஊடாக அவர்களை முன்கதவால் விரட்டியடித்துள்ளோம்.
இந்த சூழ்ச்சியால் நாடே பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்தது. இந்த சூழ்ச்சியை யாரும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நாடாளுமன்றில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் கன்னத்தில் அடித்தார்கள். மிளகாய்த் தூள் வீசினார்கள்.
என்னை 14 தடவைகள் பிரதமராக வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். சபாநாயகருக்கும் அழைப்பு விடுத்தார். ஆனால், நாம் இருவரும் வேண்டாம் என நிராகரித்துவிட்டோம்.
பதவிகளை விட எமக்கு மனசாட்சிதான் முக்கியமானது. எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதேல்லாம் எனக்கு 1993 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி எனது தந்தையின் மரணம் தான் நினைவுக்கு வந்தது.
நான் எப்போதும் எனது தந்தையைக் காட்டிக்கொடுக்க மாட்டேன். தாயை காட்டிக்கொடுக்கமாட்டேன். நான் பதவிக்கு செல்வதாக இருந்தால், அது மக்களின் ஆணைக்கு இணங்கவே என்பதை நான் இங்கு கூறிக்கொள்கிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
