
காலிஸ்தான் ஆதரவாளரைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நவ்ஜோத் சிங் சித்துவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர், இந்தியாவின் குர்தாஸ்பூர் இடையே வழித்தடம் அமைக்கும் அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சிக்கு பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து கடந்த இரு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் சென்றிருந்தார்.
ஏற்கெனவே இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்ற சித்து, பாகிஸ்தான் ராணுவத் தளபதியை கட்டி அணைத்த சம்பவத்துக்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். தற்போது, காலிஸ்தான் ஆதரவு தலைவருடன் கைலுக்கியதற்கு கண்டனம் வலுத்துள்ளது.
இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், “ காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் காங்கிரஸைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து சிரித்துப்பேசியது வெளியுலகத்துக்கு தெரிந்தது. ஆனால், சித்து தனக்கு சாவ்லா யாரென்று தெரியாது என்று மறைக்கிறார்.
காலிஸ்தான் அமைப்பின் தலைவர் பற்றித் தெரியாது என்று சித்து கூறுகிறார். என்னைப்பொறுத்தவரை, சித்துவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, அவரிடம் தேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
காலிஸ்தான் தலைவரைச் சந்தித்தது குறித்து பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவிடம் கேட்டபோது, “ எனக்கு காலிஸ்தான் அமைப்பின் தலைவர் யாரென்று தெரியாது. பாகிஸ்தான் சென்றிருந்தபோது, சாவ்லா எனக்குக் கைகொடுத்தார் நான் மகிழ்ச்சி தெரிவித்தேன். மற்றவகையில் நான் கர்தார்பூர் வழித்தடம் நிகழ்ச்சிக்கு மட்டுமே சென்றிருந்தேன். இந்த முயற்சி இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சை தொடங்கிவைக்கும் என் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் சாவ்லா, சமீபத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயத்துடன் பேசுவது போன்ற புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பல சகப்தங்களாக சீக்கியர்கள் வேண்டிக்கொண்ட தமது மத தலங்களுக்கு செல்வதற்கான அனுமதி இந்திய பாக்கிஸ்தான் அரசினால் முடங்கி கிடந்தாலும் சிந்து மற்றும் இம்ரான்கான் நட்பினால் கதவை அகலத்திறந்தது என்பது உண்மையே.
