சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். கடந்த சில ஆண்டுகளாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்த பொன்.மாணிக்கவேல், தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகள் பலவற்றை மீட்டார்.
கொள்ளை போனதை கண்டுபிடித்து அதில் தொடர்புடையவர் மீதும் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்தும் மீட்டுக் கொண்டு வந்தார்.
பொன் மாணிக்கவேல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலையுடன் பணியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதிய ஐஜியாக யார் வருவார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங்-ஐ தமிழக அரசு நியமித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரூரில் உள்ள தமிழ்நாடு காகித நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அபய் குமார் சிங், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபி பதவி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
