LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 22, 2021

மட்டக்களப்பில் புதிய பாதையில் பயணித்து வளர்ச்சிகண்டுவரும் வர்த்தக சினிமா!!

(கல்லடி நிருபர்)

 மட்டக்களப்பில் புதிய பாதையில் பயணித்து வளர்ச்சிகண்டுவரும் வர்த்தக சினிமா!!
வயது வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு பொழுதுபோக்கு ஊடகம் சினிமா என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் என்பதையும் தாண்டி மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் ஒரு உன்னத கலை வடிவமாகவும் திகழ்கிறது. சமுதாய முன்னேற்றக் கருத்துகளையும், நல்ல சிந்தனைகளையும் பார்ப்பவர் மத்தியில் விதைப்பதில் சினிமாவின் பங்கு அளப்பரியது. ஒரு சினிமா என்பது ஒரு சமூகத்தின் தனித்துவ அடையாளங்களையும் வாழ்வியல் முறைகளையும் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பணியையும் செய்கிறது.

திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை தாமாக கற்பனை செய்து மகிழ்வதும், தம்மால் நிஜத்தில் செய்யமுடியாமல் போன ஒரு விடயத்தை திரையில் தோன்றும் நாயகன் அல்லது நாயகி செய்வதைப் பார்த்து அவர்களை உண்மையான வீரர்களாகவும் தலைவர்களாகவும் ஏற்றுக்கொள்ள வைக்கும் மாயாஜாலத்தையும் சினிமாக்கள் செய்கின்றன.

என்னதான் சினிமா ஒரு கலைவடிவமாக இருந்தாலும், சினிமா எனச் சொல்லும் போது அங்கு பிரதானமாக தெரிவது வியாபாரமே! இன்று சினிமா என்பது மிகப் பெரிய முதலீட்டுடன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் உலகளாவிய வியாபாரமாக தோற்றம் பெற்றுள்ளது. இலங்கையில் - அதிலும் குறிப்பாக தமிழ் திரையுலகில் பெரும் ஆதிக்கம் செலுத்துபவை இந்திய தமிழ் சினிமாக்களே என்பதை எவருமே மறுக்க முடியாது. இலங்கை தமிழ் இரசிகர்களைப் பொறுத்தவரையில் தமது இரசனை என்ற பசிக்கு இந்திய திரைப்படங்கள், தான் தீனி போட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலைக்கு மூலகாரணம் எதுவென தேடிப் பார்ப்போமானால் இறுதியில் சினிமா எனும் வியாபாரம் தான் பிரதானமாக வந்து நிற்கும். 

எமது சினிமா வர்த்தக ரீதியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளராமல் போனதற்கு இங்கு இடம்பெற்ற அசாதாரன சூழ்நிலைகளே பிரதான காரணம் என்பது ஒரு சிலரின் வாதமாக இருக்கிறது. அது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இருந்தாலும், அது மட்டுமே காரணம் என்று கூறிவிட்டு நாம் ஒதுங்கிக் கொள்ள முடியாது. இன்றைய சூழலில் எம்மத்தியில் இருக்கும் பல்வேறு சவால்களைப் புரிந்துகொண்டு அதற்கான மாற்று யுத்திகளை வகுத்து அதனூடாக எமது சினிமாவை வளர்ப்பதே பொருத்தமாக இருக்கும்.

அந்தவகையில் வர்த்தரீதியிலான சினிமாக்களை தயாரிப்பதற்கு எமக்கு முன் உள்ள பிரதான சவால்களாக நவீன தொழில் நுட்பங்களைப் பெற்றக்கொள்வதும், அதனைக் கையாள்வதற்கான அனுபவமிக்க கலைஞர்களை உருவாக்குவதும், முழு நீளத் திரப்படங்களை உருவாக்க எடுக்கும் நீண்ட காலம், பெரும் பொருட்செலவு, என நீண்ட பட்டியல் காணப்படுகிறது. இவை தவிர இந்தியத் திரைப்படங்களின் பெரும் ஆளுமைக்கு மத்தியில் எமது ஈழத்து திரைப்படங்களை நோக்கியும் இரசிகர்களைத் திருப்புவதும் பெரும் போராட்டமாகவே அமையும். இவற்றிற்கு மத்தியில் எமது திரைப்படங்களை வர்த்தகரீதியில் வளர்க்கவே முடியாதா எனும் கேள்விக்கு “முடியும்” எனும் திடமான நம்பிக்கையில் புதிய முயற்சிகள் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.

வர்த்தக சினிமாவை வளர்க்க புதியதொரு கோணத்தில், புதியதொரு யுக்தியாக மட்டக்களப்பில் முழுநீளத் திரைப்படங்களுக்கு பதிலாக அதன் குறுகிய வடிவமாக சுமார் 30 முதல் 45 நிமிடங்களுக்கு இடைப்பட்ட சிறிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு அவை திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருவதுடன், ரசிகர்களின் அமோக ஆதரவினையும் பெற்றுவருகின்றது.

இந்தப் பரீட்சார்த்த முயற்சிக்காக மட்டக்களப்பில் வித்திட்டவர்களாக  சமூக ஆர்வலரும், பல்துறைக் கலைஞருமான தயாரிப்பாளர் ப. முரளிதரன் அவர்களும், இயக்குநர் கு. கோடீஸ்வரன் அவர்களும் திகழ்கின்றனர். இவர்களது முயற்சியில் முரளிதரனின் “விசுவல் ஆர்ட் மூவீஸ்” எனும் தயாரிப்பு நிறுவனத்தினூடாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுமார் 30 நிமிடங்கள் நீளம் கொண்ட “மாயை மற” எனும் சிறிய திரைப்படம் திரையிடப்பட்டு அமோக வரவேற்பைப்  பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த இருவரின் கூட்டணியில் “தளராதவன்” எனும் மற்றுமொரு சிறிய திரைப்படம் வெளியிடப்பட்டு அது முந்தைய சாதனைகளைத் தகர்த்ததுடன் பெருமளவான உள்ளுர், தேசிய மற்றும் சில தென்னிந்திய ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தமை குறிப்பிட வேண்டிய விடயம்.

முழு நீளத் திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக அமைந்திருந்தாலும் குறுகிய நேரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இந்த சிறிய திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் தயாரிப்பு செலவு குறைக்கப்படுவதுடன், குறுகிய காலத்திற்குள் தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டு இரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பது ஒரு தயாரிப்பாளராக ப. முரளிதரன் அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையாக காணப்படுகிறது. இதனை அவர் பல பேட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ச்சியாக கூறி வருவதுடன் இந்த உத்தியைப் பின்பற்றி பலரும் இவ்வாறான சினிமாக்களை தயாரிக்க முன்வரவேண்டும் என்றும் கோரிவருகின்றார். 

மறுபுறம், மட்டக்களப்பின் பிரபலமான இயக்குநராக அடையாளம் காணப்பட்டுள்ள கு. கோடீஸ்வரன் அவர்களும் திரையரங்கு இரசிகர்களைக் கவரும் விதமான ஜனரஞ்சக சினிமா பாணியில் சிறந்த கதை, திரைக்கதைகளைக் கொண்டு படங்களை இயக்கி வருகின்றார். சிறிய திரைப்படங்களாக இருந்தாலும் அவை தொடர்ச்சியாக வெளியிடப்படும் போது ஏனைய தொழில்துட்பக் கருவிகளின் தரமும், கலைஞர்களின் திறனும் தானாக மேம்படும் எனும் நம்பிக்கையை அவர் கொண்டுள்ளார். 
இவர்களின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவையும், வரவேற்பையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயம். நல்ல முயற்சிகளுக்கு எப்பொழுதும் மக்களின் ஆதரவு இருக்கும் என்பதற்கு சான்றாக அவர்களது திரைப்படங்கள் வெளியிடப்பட்ட சந்தர்ப்பங்களில் திரையரங்கில் முண்டியடித்த சனக்கூட்டமே சான்று. மேலும் இந்த முயற்சிக்குக் கிடைத்த ஒர் வெற்றியாக மட்டக்களப்பில் வசித்துவரும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்திய கலாநிதி கு.சுகுணன் அவர்களும் சினிமா தயாரிப்பில் தற்பொழுது ஆர்வம் காட்டுகிறார்.
அவர் “சிப்ஸ் சினிமாஸ்” எனும் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கூடாக “கலிகாலன்” எனும் சிறிய திரைப்படத்தினை, தற்பொழுது தயாரித்து வருகின்றார். 2021 – கார்த்திகை மாதம் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கும் இத்திரைப்படத்திற்கும் மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்திருப்பது மட்டக்களப்பில் சினிமா வர்த்தகரீதியில் வெற்றி பெறுவதற்கான காலம் கனிகின்றது என்றே கூறலாம். மேலும்  இதுவரை மட்டக்களப்பு திரையரங்குகளில் மாத்திரம் திரையிடப்பட்டு வந்த இவ்வகையான சிறிய திரைப்படங்கள், “கலிகாலன்” திரைப்படத்தின் மூலமாக அம்பாறை மாவட்டத்திற்கும் நகர்ந்திருப்பது இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியின் மற்றுமொரு சான்று என கூறலாம்.  

ஒவ்வாரு பெரிய சாதனைகளும் சிறிய முயற்சியிலும், இடைவிடாத உழைப்பிலும் தான் படைக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்திய சினிமா எனும் பெரும் விருட்சத்தின் அடியில்  துளிர்க்கும் எம்மவர் சினிமாவும் ஒரு பெரும் விருட்சமாக வளர வேண்டுமானால் இரசிகர்களின் ஆதரவு எனும் உரமும், இலாபம் எனும் நீரும் அவசியம். தாம் செலவழிக்கும் பணம் திரும்பி வரும் எனும் நம்பிக்கை மிகவும் தூர்ந்து போயிருக்கும் நிலையிலும் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ச்சியாக படம் தயாரிக்க முன்வந்திருக்கும் ப.முரளிதரன், வைத்திய கலாநிதி கு.சுகுணன் போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

அதே வேளை எமது ஈழத்துக் கலைஞர்களின் பாரிய முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான திரைப்படங்களை நாம் ஆர்வத்துடன் சென்று பார்வையிடுவதுடன், எமது கலைஞர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் எமது கலைஞர்களின் திறமைகளை நாம் பாராட்டுவதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக சினிமா பாரிய வளர்ச்சி காணும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

அத்தோடு எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியாகவுள்ள "கலிகாலன்" திரைப்படத்தை  திரையரங்குகளில் சென்று  பார்வையிடுவதுடன்  ரசிகர்கள் தமது ஆதரவை வழங்குவதன் மூலம் மேலும் பல சினிமாக்கள் கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பில் இருந்து பல திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதற்கும், மட்டக்களப்பு சினிமா வர்த்தக ரீதியில் வளர்ச்சி காண்பதற்கும் சினிமா துறை சார்ந்த ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவினையும்   மட்டக்களப்பில் இருந்து சினிமாத்துறைக்காக பாரிய பங்காற்றிவரும் கலைஞர்கள்   கோரிக்கை விடுக்கின்றனர் 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7