
சிற்றுண்டிச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 மாணவர்களை நாளைவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகிடிவதையை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் கடந்த 7 ஆம் திகதி மாலை மோதல் ஏற்பட்டது.
பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர், முதலாம் வருட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்குள்ளும் பொரளையிலுள்ள மாணவர் விடுதியிலும் வைத்து கடந்த சில தினங்களாக பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டாம் வருட மாணவரொருவர் தாக்கப்பட்டிருந்தார். இதில் காயமடைந்த மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இதில் இவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களை தொடர்ந்தும் நாளைவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
