
மடக்கிப் பிடிக்கப்பட்ட நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தவகையில் ஜனவரி 23 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து ரீ-56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள், மகஸின் என்பனவற்றோடு வாழைச்சேனை 2ஆம் குறுக்கு விநாயகபுரம் கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் வாழைச்சேனை பொலிஸார், மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முஹம்மட் றிபான் முன்னிலையில் ஆஜராக்கியபோது நீதிவான், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனுமிடத்திலிருந்து அதே பொலிஸ் நிருவாகப் பிரிவில் உள்ளடங்கும் கறுவாக்கேணி பகுதிக்கு இந்த ஆயுதத்தையும் தோட்டாக்களையும் எடுத்துச் செல்லும்போது வழிமறித்த விஷேட அதிரடிப்படையினர் ஆயுதத்தையும் கைப்பற்றி இரு இளைஞர்களையும் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
