சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இருந்து உத்தரவு வழங்கப்படாத நிலையில் அந்த உத்தரவுக்காக நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
எதிர்வரும் 2020 ஜனவரி 03 ஆம் திகதி ஜனாதிபதியின் விசேட உரையைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு புதிய அமர்வு தொடங்கிய பின்னர், மதியம் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடந்த 5ஆம் திகதி அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் சபாநாயகரின் அறிவிப்பு வரும்வரை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக பொறுமை காப்பதா அல்லது அறிவிப்பு வரும்வரை சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமா என்பது தொடர்பாக நாடாளுமன்ற அதிகாரிகள் சபாநாயகரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.