
மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது நாடாளுமன்ற சலுகைகளை இழக்க நேரிடுமென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர் தெரிவித்துள்ளார்.
கொலொன்னாவ பிரதேசத்தில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். எஸ்.எம்.மரிக்கர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் தேர்தலில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்தவர்களும், பொதுமக்களின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களும் எந்தக் கட்சியாக இருந்தாலும் தோற்கடிக்கப்படுவார்கள்.
சிலர் ஜனாதிபதி தேர்தல் நடந்த அடுத்த கணமே நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு முயற்சித்தார்கள். ஆனால் நான்கரை வருடங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம். அதற்கு அனைவரும் செவிசாய்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஓய்வூதியத்தை பெற வேண்டும் என்றால் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை நாடாளுமன்றம் இருக்க வேண்டும். மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்ற கலைக்கப்பட்டால் ஓய்வூதியத்தை வழங்க முடியாது. இந்த விடயங்கள் எதற்கும் எங்களிடம் முன்னுரிமை கிடையாது.
நாங்கள் முன்னுரிமை கொடுப்பது எதிர்கட்சி என்ற ரீதியில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு எதிர்கட்சியாகத்தான் தேர்தலுக்கு முகம்கொடுக்க இருக்கின்றோம்.
எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது இருக்கின்ற 225 பேரில் 75 பேர் வரை வெற்றிபெறப்போவதில்லை. அவர்கள் தோற்றுவிடுவார்கள்.
புதிய உறுப்பினர்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மக்களின் பணத்தையும், சொத்துக்களையும் சூறையாடிவர்களும், குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்களும் வெற்றிபெறப்போவதில்லை.
எனவே, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றக் கூடிய இளம் உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்வதற்கே நாங்கள் முயற்சித்து வருகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
