ஹொங்கொங்கில் வெளியாகும் பிரபல நாளிதலொன்று இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
ஹொங்கொங்கின் கோவ்லூன் பகுதியிலுள்ள தனது முகாமிலிருந்து சீன இராணுவத்தினர், நேற்று (சனிக்கிழமை) வெளியேறி, போராட்டக்காரர்கள் ஏற்படுத்தியிருந்த வீதித் தடுப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சாதாரண உடையணிந்திருந்த அவர்களள் ரென்ஃப்ரூ வீதியில் இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.. அவர்களுடன் ஹொங்கொங் தீயணைப்பு வீரர்களும், பொலிஸாரும் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுப் பணிகளை மேற்கொள்ள ஹொங்கொங் அரசு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தாமாக முன்வந்து அந்தப் பணிகளை மேற்கொண்டதாகவும் சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக சீர்த்திருத்தங்களை வலியுறுத்தி ஹொங்கொங் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட சட்டமூலத்தை அந்த நகரப் பேரவையில் தலைமை நிர்வாகி கேரி லாம் ஐந்து மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்தார்.
அந்தச் சட்டம், ஹொங்கொங்வாசிகள் மீது சீன அரசு அடக்குமுறையைக் கையாள்வதற்கு வழிவகுக்கும் என்று கூறி, ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டமூலம் மீளப் பெறப்பட்டது.
எனினும், ஹொங்கொங் தலைமை நிர்வாகியை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும், தற்போதைய தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலக வேண்டும், போராட்டக்காரர்கள் மீது அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் செய்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.