வடமேற்கு சீன நகரான கோபி பாலைவன நகரம் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் குளிர்காலத்தில் பெருமளவு காட்டு அன்னங்களுக்கு வாழ்விடமாக அமைந்திருக்கிறது.40 ஆண்டுகளுக்கு முன்னர் வறண்ட பாலை நிலத்தை அண்மித்து காணப்பட்ட வடமேற்கு சீனாவின் சிங்ஜியாங் யுகூர் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள கோர்லா கிராமம் இன்று பெருநகரமாக மாற்றமடைந்துள்ளது.
வறண்டு, மரங்களை இழந்து மணல் நிறைந்து கிடந்த கோர்லாவில் தற்போது மூன்று ஆறுகள் பாய்வதுடன், வறண்டு கிடந்த பகுதிகள் சோலைகளாக மாறியுள்ளன. அதுமாத்திரமின்றி, வானுயர்ந்த கட்டடங்கள், வளமான வாழ்க்கை என கோர்லாவின் தோற்றமே மாறி உள்ளது.
இந்நகரம் தற்போது 300 க்கும் மேற்பட்ட காட்டு அன்னங்கள், மற்றும் பிற காட்டுப் பறவைகள் மற்றும் உள்ளூர் பறவைகளை பாதுகாக்கும் பராமரிக்கும் இடமாக மாற்றமடைந்துள்ளது.
இது குறித்து அன்னங்களின் பாதுகாவலர் ஒருவர் கூறுகையில், “இந்த ஆண்டு அதிகமான காட்டு அன்னங்கள் இங்கே வந்துள்ளன. ஒரு நாளைக்கு மூன்று முறை அவைகளுக்கு உணவு கொடுக்கிறோம். அவைகள் எங்களுடைய பிள்ளைகள் போன்றவை. கடந்த ஆண்டுகளில் மேலும் பல காட்டு பறவைகள் இங்கு வந்திருக்கின்றன. காட்டு அன்னங்கள் மட்டுமல்ல, காட்டு வாத்துகள் கூட வருகை தந்துள்ளன” எனத் தொிவித்தார்.





