
பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், அதனுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் விரைந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகளைப் பாராட்டுகின்றோம்.
தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் நியாயமானவை என்றாலும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமானது இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றோம்.
சில கைதுகள் கலாசார ரீதியிலான புரிந்துணர்வின்மை மற்றும் பொதுமக்களில் சிலர் வெளியிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் என சட்டத்திற்கு முரணான கைது நடவடிக்கைகள் குறித்து அண்மையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
உதாரணமாக பெண்ணொருவர் அணிந்திருந்த ஆடையில் தர்ம சக்கரம் ஒன்றைக் காரணம் காட்டி கைது செய்யப்பட்டமை அரேபிய மொழியில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டமை போன்றனவும் அடங்கும்.
இவர்கள் அனைவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்தே சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறியக்கிடைத்துள்ளது.
இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கு சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
