
பிரித்தானியத் தூதரால் அனுப்பப்பட்டதாக கருதப்படும் மின்னஞ்சல்களில் அமெரிக்க ஜனாதிபதியை திறமையற்றவர், தகுதியற்றவர் மற்றும் பாதுகாப்பற்றவர் என அவர் விவரித்துள்ளார். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை பிளவுபட்டுள்ளது எனவும் இந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய தூதரால் அனுப்பப்பட்ட ரகசிய மின்னஞ்சல்கள் யாரோ ஒருவரால் பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தூதரை அமரிக்க ஜனாதிபதி கடுமையாக விமர்சித்ததுடன் தனது நிர்வாகம் தூதருடன் இணைந்து பணியாற்றாது எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் பிரித்தானிய தூதரின் கருத்துக்களுடன் உடன்படாத போதும் அவருக்கு பூரண ஆதரவு வழங்குவதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதர் பதவியிலுந்து விலகுவதாக கிம் டரோச் இன்று அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த தூதரகத்திலிருந்து உத்தியோகபூர்வ ஆவணங்கள் கசிந்ததிலிருந்து எனது நிலைப்பாடு மற்றும் எனது மீதமுள்ள பதவிக்காலம் குறித்து ஏராளமான ஊகங்கள் உள்ளன.
தூதராக நான் ஊகங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். தற்போதைய சூழ்நிலையில் நான் விரும்பியபடி எனது பங்களிப்பைச் செய்ய இயலாது.
எனது பதவி இந்த ஆண்டு இறுதி வரை முடிவடையவில்லை என்றாலும், தற்போதைய சூழ்நிலைகளில் புதிய தூதர் ஒருவரை நியமிக்க அனுமதிப்பதே சிறந்தது.
இந்த கடினமான சில நாட்களில் தங்கள் ஆதரவை வழங்கிய பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
