
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ரொக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ரொக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன்-2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாகும். இதனூடக நிலவின் தென்துருவமுனையில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் முதல் முறையாக ரோவர் வாகனம் ஒன்றும் இணைக்கப்படுகின்றது. இந்த ரோவர் வாகனம் லேண்டர் பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும்.
விண்ணில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டவுடன் ரொக்கெட்டிலிருந்து, இந்த அமைப்பு பிரிக்கப்படும். அதன் பிறகு ஆர்பிட்டரின் உதவியுடன், நிலவின் சுற்றுப்பாதைக்கு இந்த அமைப்பு சென்றடையும். திட்டமிட்ட நிலவின் சுற்றுப்பாதைக்கு இந்த அமைப்பு சென்றவுடன், ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் பிரிக்கப்படும். பின்னர் லேண்டரிலிருந்து நிலவின் பரப்பில் ரோவர் வாகனம் இறக்கப்பட்டு, ஆய்வை மேற்கொள்ளும்.
சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கி சிறிய வண்டி போன்ற இயந்திரத்தைக் கொண்டு அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும். சந்திரயான்-1 விண்கலத்தை விட, தொழில்நுட்ப அளவில் அதிக வளர்ச்சி பெற்றதாக இந்த சந்திரயான் -2 அமைந்துள்ளது.
சந்திரயான்-2 திட்டம் மூலம் நிலவின் தென்துருவத்தில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த பாறைகள் பற்றிய அளவிடமுடியாத தகவல்கள் கிடைக்கும்.
உலகம் தோன்றியக்காலம் எப்படி தோன்றியது என்பது பற்றிய தெளிவும் கிடைக்கும். இதற்காக இந்தியா 800 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2008ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 2 செயற்கைக்கோளை நிலவில் செலுத்தவுள்ளது.
