
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் ஏழு தடவைகள் கூடியுள்ளது.
இந்நிலையில் நாளை (புதன்கிழமை) கூடவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.ரணசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பிற்பகல் 2 மணியளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், இராணுவ தளபதி மேகேஷ் சேனநாயக்க ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
