
இதன் மூலம், உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் அல்பேர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் வில்லியம் ஹோக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை ஹரிப்பிரியா பெற்றுள்ளார்.
கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிவரும் பதினோரு வயதே ஆகும் ஹரிப்பிரியாவிடம் செய்தியாளர்கள் நேர்காணல் மேற்கொண்டபோது, தனது நுண்ணறிவு திறனை வைத்து எதிர்காலத்தில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
ஒருவரது அறிவுக்கூர்மையை அளவிடுவதற்கு பல்வேறு விதமான பரிசோதனைகள்/ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது நாட்டுக்கு நாடு அல்லது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது.
இங்கு அறிவுக்கூர்மை என்பது ஒரு விடயத்தை எவ்வளவு விரைவாக உள்வாங்கிக் கொள்வது என்பது மட்டுமின்றி, சிக்கல்களை தீர்ப்பதில் மூளையின் செயல்பாட்டு திறனை அடிப்படையாக கொண்டுள்ளது.
அதன்படி, உலகின் புகழ்பெற்ற அறிவுக்கூர்மை சோதனை கூடங்களில் ஒன்றாக திகழும் ‘பிரிட்டிஷ் மென்சாவின், ‘காட்டல் III பி (Cattell III B)’ எனும் தேர்வில் பங்கேற்ற பிரித்தானியா வாழ் தமிழ்ச் சிறுமியான ஹரிப்பிரியா, அந்த தேர்வின் அதிகபட்ச சாத்தியமுள்ள மதிப்பீடான 162 புள்ளிகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
அதாவது, அல்பேர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் வில்லியம் ஹோக்கிங்ஸ் போன்ற பிரபல அறிவியலாளர்களின் அறிவுக்கூர்மை மதிப்பீட்டை விட இவர் இரண்டு புள்ளிகள் அதிகமாக பெற்றுள்ளார்.
அதே போன்று, பிரிட்டிஷ் மென்சாவின் மற்றொரு அறிவுக்கூர்மை தேர்வான ‘கல்ச்சர் பெயார் ஸ்கேல் (Culture Fair Scale)’ என்பதிலும் அதிகபட்ச மதிப்பீடான 140 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி வெளியான இந்த பெறுபேறுகள் குறித்து அவர் கூறுகையில், “எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது அறிவுக்கூர்மையை பயன்படுத்தி எதிர்காலத்தில் நல்ல பல விடயங்களை செய்வதற்கு திட்டமிட்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.
