
இரா.சம்பந்தன், ஆயுதப் போராட்டம் மீண்டும் வேண்டும் என்று கூறிவில்லை என வட. மாகாண அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைகள் ஜனநாயக வழியில் அல்லது சாத்வீக வழியில் தீர்க்கப்படவேண்டும் என்றே இரா.சம்பந்தன் தெரிவித்துவருவதாகவும், ஆயுதப் போராட்டம் வேண்டும் என்று சொல்லப்படும் கருத்தில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவருடைய இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், “கடந்த மாதம் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தன் ஆற்றிய உரையில் கூறப்பட்டதாக விடயங்கள் வெளியே வந்திருக்கின்றது. குறிப்பாக அரசியல்வாதிகள் சிலர் தமிழரசுக் கட்சி மீது சேறுபூச முயற்சித்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் அந்த கூட்டத்தில் இருந்தவன் என்ற வகையிலும், தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் என்ற வகையிலும், இரா.சம்பந்தன் பேசாத ஒரு விடயத்தை பேசியதாகக் கூறப்படுவது பொய் என கூற விரும்புகின்றேன்.
அவர் அந்த கூட்டத்தில், ஆயுதப் போராட்டம் ஒன்று தேவை அல்லது மீண்டும் தமிழர்கள் ஆயுதம் தாங்கிப் போராடவேண்டும் எனக் கூறியதாக கதைகள் வெளியே சொல்லப்படுகின்றது. ஆனால் உண்மையில் அவர் அங்கே கூறிய விடயம் வேறு.
அதாவது பிரேமதாஸ காலத்தில் அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டது. அதேபோல் சந்திரிக்கா, மஹிந்த காலத்திலும் பேசப்பட்டது. ஆனால் அதையே இப்போது மறைக்கப் பார்க்கிறீா்கள், மறக்க பார்க்கிறீர்கள் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தீர்வு விடயத்தில் காட்டப்பட்ட வேகத்தை எதற்காக இப்போது காட்டவில்லை? என்று கேள்வி எழுப்பினாரே தவிர மீண்டும் ஆயுதம் ஏந்தவேண்டும், மீண்டும் போராட்டம் வரவேண்டும் எனக் கூறவில்லை.
இந்நிலையில் சிலர், தங்களுடைய கற்பனைக்கு ஏற்றபடி கற்பிதம் செய்துள்ளனர். அது அநாகாிகமான வேலையாகும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் ஜனநாயக வழியில் அல்லது சாத்வீக வழியில் தீர்க்கப்படவேண்டும் எனக் கூறும் ஒருவரே இரா.சம்மந்தன். அவர் எந்தக் காலத்திலும் ஆயுதப் போராட்டம் வேண்டும் எனக் கூறவில்லை. இனிமேல் கூறப்போவதும் இல்லை.
இந்நிலையில் இந்த கற்பனையை வைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சி மீது சேறுபூசும் செயற்பாட்டை நிறுத்தவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
