
பிள்ளையார் ஆலயத்தில் தமிழா்களின் நிலவுரிமையை நிலைநாட்டும் வகையில் 108 பானைகளில் பொங்கல் பொங்கும் தமிழர் திருவிழா நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.
இந்த திருவிழா நிகழ்வில் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தாலும், அரசிய்ல தலைவர்களின் தலையீட்டுடன் அவை சுமுகமாக்கப்பட்டு பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில், தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததோடு, வடக்கு கிழக்கின் மாவட்டங்களில் இருந்து பெருமளவு பொதுமக்கள், இளைஞர்களும் பங்குகொண்டனர்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி .சிவமோகன், சி.ஸ்ரீதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
அவர்களுடன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமனற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மற்றும் ஏனைய பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
முல்லைத்தீவின் எல்லையோரத்தில், வடக்கு கிழக்கு இதய பூமிகளை குறிவைத்து மேற்கொள்ளப்படும் குடியேற்றத் திட்டங்களில் இறுதியாக சிக்கியுள்ள தமிழர்களின் பாரம்பரிய நிலமே இந்த பகுதியாகும்.
பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் அதிகாரத் தரப்புக்களின் பின்னணியில் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை பௌத்த வழிபாட்டிடமாக மாற்றும் முயற்சி பல வருடமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்த கோயில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
