ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க தான் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாவது தொடர்பாக பிரச்சினைகளை எழுப்பி தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற விவாதத்தின் போது, பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தன்னை தெரிவுக்குழு முன் அழைப்பதற்கான முடிவு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் செயற்பாடா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, தெரிவுக்குழு முன் ஆஜராவது பொருத்தமானது என்று கூறினார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து மேலதிக விளக்கங்களை நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களிடமிருந்து தகவலை பெறலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன் வரவழைக்கப்பட்ட ஒரு நபர் என இது குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்ப்பதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தில் சபாநாயகரின் முடிவைக் கடைப்பிடிப்பது நல்லது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





