சுற்றாடல் பாதுகாப்பிற்கான தீர்மானங்கள் குறித்து எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் மீளப்பெறப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.அத்துடன், இலங்கையில் மணல், கல் மற்றும் மண் வியாபாரம் மிக மோசமான ஊழல் துறையாக காணப்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவற்றில் இடம்பெறும் முறைக்கேடுகளை தடுப்பதற்காக பல சட்டதிட்டங்களை கடந்த 4 ஆண்டுகளாக பரிந்துரைத்தாகவும் குறிப்பிட்டார்.
பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற “பசுமை மணல் தரிப்பிடம்” எனும் எண்ணக்கருவை அறிமுகம் செய்யும் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “மரங்களை வெட்டுதல், சட்டவிரோத கல், மணல், மண் அகழ்வு காரணமாக ஏற்படும் பாரிய சுற்றாடல் அழிவைத் தடுப்பதற்கு பல சட்டதிட்டங்களை அமுல்படுத்தியுள்ளேன். எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தபோதும் சுற்றாடல் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அந்த தீர்மானங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது.
அபிவிருத்திப் பணிகளுக்காக கல், மணல், மண் போன்றவை தேவையாக இருந்தாலும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் சரியான முகாமைத்துவத்தின் கீழ் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் புதிய தொழிநுட்ப வழிமுறைகளுடன் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும்” எனத் தெரிவித்தார்.
“பசுமை மணல் துறைமுகம்” எண்ணக்கருவின் கீழ் ஆறும் ஆற்றங்கரையும் அதை அண்மித்த சூழலும் பாதுகாக்கப்படுகின்றது. இந்த திட்டத்திற்கமைய ஆற்றங்கரையின் 10 அடி வரையிலான பிரதேசம் பசுமை வலயமாக அடையாளப்படுத்தப்படுவதுடன், அப்பிரதேசத்தில் காடு வளர்ப்பு மேற்கொள்ளப்படும். அதனூடாக மணல் துறைமுகத்திற்கு மூன்று அடி அளவிலான பாதை பாதுகாக்கப்படும்.
இந்த திட்டத்தின் காரணமாக ஆற்றுக்குள் வாகனங்களை இறக்க முடியாது என்பதுடன், மணல் அகழ்வின்போது உரிய சட்டங்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த திட்டத்தினால் 10 அடி தூரம் வரை கூடைகளை பயன்படுத்தி மணலை கொண்டுசெல்ல நேரிடும். மணல் அகழ்விற்காக பயன்படுத்தும் படகுகள், இயந்திரம் பொருத்தாதவைகளாக இருக்க வேண்டும்.
தற்போது பசுமை மணல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் அதை நடைமுறைப்படுத்தாதவர்களுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்காதிருப்பதற்கும் சட்டத்தை பின்பற்றாதவர்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென புவியியல் ஆராய்ச்சி மற்றும் புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





