
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த திட்டத்தை கைவிடுமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், தற்போது மீண்டும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள்.
கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான செயலை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது.
இது போன்று மாநில உரிமைகளை மத்திய அரசே கைப்பற்றிக்கொள்ளும் நடவடிக்கைக்கு துணை போவது மிகுந்த வருத்தத்திற்குரியது.
பொது விநியோகம் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை. அதில் கை வைப்பது, தேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்பதை மத்திய உணவுத்துறை அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை.
மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களின் நீதிபதிகளை அகில இந்திய நீதித்துறைத் தேர்வு மூலம் தெரிவு செய்வோம் என்றும், அதற்காக தனியாக ஒரு ஆணையம் அமைப்போம் என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்தியில் அதிகாரங்களை குவித்துக் கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகார உள்நோக்கத்துடனேயே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை தி.மு.க. என்றைக்கும் ஏற்காது என குறிப்பிட்டுள்ளார்.
