
காஷ்மீர் மாநிலத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், முதல் பக்தர் குழாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு காஷ்மீரில் உள்ள இமய மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிப்படுவதற்காக ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் நிகழாண்டுக்கான புனித யாத்திரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் முறைப்படி நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், சுமார் 46 நாட்கள் யாத்திரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த யாத்திரைக்காக நாடு முழுவதும் உள்ள சுமார் 1.5 இலட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த யாத்திரையை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு இதுவே இறுதிக்கட்டமாக இருக்கும் என எனது மனசாட்சி கூறுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
