
அந்தவகையில், முழுமையான அதிகாரத்துடனான பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு தமிழர் தரப்பில் கடந்த முப்பது வருடகாலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஏற்படுத்தப்படும் தடைகளை வன்மையாக கண்டிப்பதோடு, தரமுயர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் ஆதரித்து ஒத்துழைப்பு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 9ஆவது பேராளர் மாநாட்டில் இவ்வாறு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைவிட தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடியவாறு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான, நியாயமான நிரந்தரத் தீர்வொன்றை எட்டும் பொருட்டு தொடர்ந்தும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சித்து இலக்கை அடைதல்.
போருக்கு பின்னரான புதிய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அரசியல் கூட்டு முன்னணி ஒன்றிற்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஒத்துழைத்தல், இன்றைய சூழலில் அத்தகையதொரு கூட்டு முன்னணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கில், தமிழ் மக்களின் நலன்சார்ந்து இயங்கிவரும் இதர தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்.
அனைத்து இயக்கங்களினதும் முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் அனைவரும், மீண்டும் தன் சமூகத்தில் கௌரவத்துடனும், தன்னம்பிக்கையுடனும் ஒன்றித்து வாழக்கூடிய வகையில், அவர்களது சமூக பொருளாதார வாழ்வை வளப்படுத்துவதற்கான உதவிகளை அரசிடமிருந்தும், புலம்பெயர் தமிழ் சமூகத்திடமிருந்தும் சாத்தியமான அனைத்து தரப்பினரிடமிருந்தும் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
போன்றவற்றுடன், இலங்கைக்கு சர்வதேச அழுத்தம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில், காணிகளை விடுவிக்க போராடுதல், வடக்கு கிழக்கில் அபிவிருத்திளை ஊக்குவித்தல், கல்வித் துறை மேம்பாடு, இலங்கையின் அனைத்து முற்போக்கு அரசியல் மற்றும் சமூகசக்திகளுடன் இணைந்தும் பாடுபடுதல், சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆதரவளித்தல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
