
மாலிம்பட கட்டுவன்கொட குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மாத்தறையில் முன்னெடுக்கப்படும் நான்காம் கட்ட நீர் விநியோக திட்டத்தின் கீழ் கம்புறுபிட்டிய மாலிம்பட கடுவன்கொட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இத்திட்டத்திற்கு 18,200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளதுடன் 2022ஆம் ஆண்டளவில் திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திட்டம் மூலமாக 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நன்மையடைவார்கள் என்பதுடன் எதிர்காலத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நன்மையடைவார்கள். இத்திட்டத்தின் ஊடாக மாத்தறை மாவட்டத்திற்கு மாத்திரமன்றி அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதிக்கும் நீர் விநியோகிக்கப்படுவது விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்கி ஜயவர்தன, கைத்தொழில் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் புத்திக்க பத்திரன, அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்துக்கொண்டார்கள்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் சாகல ரத்னாயக்க, “இந்த திட்டத்தின் ஊடாக இன்னும் சில ஆண்டுகளில் நீரைப் பெற்றுக்கொள்ளவுள்ள மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். 18000 கோடி ரூபாய் பெறுமதியான திட்டத்தின் பணிகளே இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான மாபெரும் திட்டமொன்றினை தெனியாய போன்ற பின்தங்கிய பிரதேசத்தில் முன்னெடுப்பதற்காக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது நாம் 2001ஆம் ஆண்டு முன்மொழிந்த திட்டமாகும். 2004ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அரசாங்கம் இத்திட்டம் வேண்டாமென ஒதுக்கி வைத்தது.
இன்று அபிவிருத்தி திட்டங்கள் கிராமத்திற்கு வருகின்றன. அவை அனைத்தும் மக்களின் வாழ்வினை பலப்படுத்தும் அபிவிருத்தி திடங்களாகும். இதனுடாக இந்த அரசாங்கம் எவ்வித அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்ற கூற்றை பொய்யாகியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளிலும் நாம் வேலை செய்தோம். அதன் பிரதிபலன்களை தற்பொழுது அனுபவிக்கின்றோம். இன்னும் புதிய வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். அதன் பிரதிபலன்களை எதிர்காலத்தில் அனுபவிப்பீர்கள்.
நாம் திட்டமிட்ட முறையில் செயற்படுகின்றோம். பொருளாதாரத்தையும் பலப்படுத்துகின்றோம். உங்களுடைய பொருளாதாரத்தை பலப்படுத்துவதே எங்களின் பிரதான நோக்கமாகும்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
