லெஸ்ரஷையரில் வசிக்கும் ஹன்னா கோப்லி என்ற 29 வயதான பெண் தான் பெற்ற குழந்தையைக் கொலைசெய்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை லெஸ்ரர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் ஹன்னா கோப்லி தனக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கொலைசெய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஹன்னா கோப்லிக்கு 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையினால் சுற்றி தனது தந்தையின் ஸ்ரோனி ஸ்ரன்ரன் (Stoney Stanton) பகுதியிலுள்ள கால்நடைகள் வளர்க்கும் பண்ணை வளவிற்குள் எறிந்துள்ளார்.
ஹன்னா கோப்லி தனது கர்ப்பத்தை தனது தாய், தந்தைக்கும் நட்பு வட்டங்களுக்கும் தெரியாது மறைத்துள்ளார் என்றும் குழந்தையின் தந்தை யார் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.
மேலும் குழந்தையின் மரண விசாரணை அறிக்கையின்படி குழந்தைக்கு மண்டையில் மூன்று உடைவுகள் ஏற்பட்டன என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்ததன் பின்னர் ஹன்னா கோப்லி, ஸ்கெக்னெஸ் (Skegness) நகரில் விடுமுறையில் இருந்தபோது கடுமையான இரத்தக்கசிவு ஏற்பட்டதனால் மயக்கமடைந்து லெஸ்ரர் ரோயல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கர்ப்பம் குறித்து ஏன் அம்மாவிடம் கூறவில்லை என்று பொலிஸார் கேட்டபோது அம்மா இதைக் கேவலமாகக் கருதுவார் என்று நினைத்துக் கூறவில்லை என்று பதிலளித்தார்.
இந்த வழக்குக் குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதி சூசன் கார்; இந்த வழக்கு தன்னை மிகவும் கவலைக்குள்ளாகியுள்ளதாகவும் இதன் தீர்ப்பினை வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.






