சூடான் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.நாட்டில் நிலவும் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சிவில் ஆட்சியை கோரியும் சூடானில் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சூடானின் முன்னைய புரட்சிகளைப் போலல்லாது, மக்கள் ஆட்சியை கோரி தற்போது வைத்தியத்துறையினரும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
சூடானின் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பின் பின்னணியில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சிக்கி குறைந்தது 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக எதிரணியுடன் இணைந்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கார்டோம் பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சுமார் 40 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், 46 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூடானிய முன்னாள் ஜனாதிபதி ஒமல் அல் பஷீரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் சூடானில் சுமுகமற்ற அரசியல் நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.





