
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியின் மத்திய தர வீரர்கள் மந்தமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குசல் பெரேரா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் அணிக்காக சிறப்பானதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தாலும், மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடும் லஹிரு திரிமன்ன, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா போன்ற வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்குவது இல்லை.
இதனால், இலங்கை அணி நியூஸிலாந்து அணியிடமும், குறிப்பாக இறுதியாக நடைபெற்ற அவுஸ்ரேலியா அணியிடமும் தோல்வியை தழுவியது.
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான போட்டியில், ஆரம்ப விக்கெட்டுக்காக குசல் பெரேரா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் 115 ஓட்டங்களை பகிர்ந்திருந்த போதும், மத்திய தர வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தால், இலங்கை அணி 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், இலங்கை அணியின் மத்திய தரவரிசை வீரர்கள், முன்னைய துடுப்பாட்ட முறையை கையாள வேண்டுமென அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு தொடர்ந்தும் சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாதது கவலைக்குறிய விடயமாகும். மத்தியவரிசை வீரர்கள் அனுபவம் மிக்க வீரர்கள்.
அவர்கள் ஓட்டங்களை பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், என்னை பொருத்தவரையில் எமது முன்னைய துடுப்பாட்ட முறையை கையாண்டால் அவர்களால் மீண்டுவர முடியும் என நினைக்கிறேன்’ என கூறினார்.
இலங்கை அணி தற்போது ஐந்து போட்டிகளில் ஒன்றில் வெற்றி, இரண்டில் தோல்வி, இரண்டு போட்டிகள் கைவிடப்பட்ட நிலையில், 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்தநிலையில், மீதமுள்ள 4 போட்டிகளில் 2 போட்டிகளாவது கட்டாயம் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஆனால், இலங்கை அணி அடுத்து வரும் போட்டிகளில் பலம் பொருந்திய அணிகளான இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா போன்ற அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
எனினும், இவ்வாறானதொரு நெருக்கடியான நிலையில் இலங்கை அணி என்ன செய்யப் போகின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.
2007ஆம் ஆண்டு இலங்கை அணியை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற மஹேல ஜயவர்தனயால், அணிக்காக வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. எனினும், அவர் தலைமையில் இலங்கை அணி, பல வெற்றிகளை பெற்றுள்ளது.
மஹேல ஜயவர்தன தற்போது, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
