
இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டியில், பரம எதிரி நாடுகளான இந்தியா அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
நேற்று மென்செஸ்டர் ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
நீலம் மற்றும் பச்சை வண்ண ஆடைகளால் மைதானத்தில் புடை சூழ்ந்திருந்த இரசிகர்கள் சத்தமிட்டு வீரர்களை உற்சாக படுத்த, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போட்டி ஆரம்பமானது.
இந்தியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர், பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் அமிரின் முதல் ஓவரை ஒருவிதமான பதற்றத்தடன் எதிர்கொண்டனர்.
வழமைக்கு மாறாக கொஞ்சம் வேகமாகவே அமிர் பந்தை வீச, ஆரம்ப பந்துகளை நிதானமாக எதிர்கொண்ட இருவரும், பந்துகளின் நுணுக்கங்களை விரைவில் புரிந்து கொண்டு ஓட்டங்களை குவிக்க தொடங்கினர்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை திறம்பட எதிர்கொண்ட இருவரும், பாகிஸ்தான் அணியில் யார் பந்து வீசினாலும் அடிக்கும் திறனை பிற்பாடு வளர்த்துக் கொண்டனர். இதன்போது 7 வீரர்கள் தங்களது பந்து வீச்சு திறனை இந்திய வீரர்களிடம் சோதித்தனர்.எனினும் அது எடுபடவில்லை.
ஆரம்பமே அமர்களப்படுத்திய இவர்கள், 136 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டுக்காக பகிர்ந்து கொண்டனர். 23.5ஆவது ஓவரில் ராகுல் 57 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, வஹாப் ரியாஸின் பந்தில் பாபர் அசாமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதுவே இரு அணிகளுக்கிடையிலான சிறந்த ஆரம்ப இணைப்பாட்டமாகும். இதற்கு முன்னதாக 1996ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும் சித்துவும் இணைந்து 90 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த இணைப்பாட்ட சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.
எனினும் காயமடைந்த ஷிகர் தவானின் பதிலீடுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கப்பட்ட ராகுல், எவ்வித குறைபாடுமின்றி தனது பங்கினை செவ்வனே செய்த திருப்தியுடன் ஓய்வறை திரும்பினார்.
இதனையடுத்து களமிறங்கிய விராட் கோஹ்லி, ரோஹித் சர்மாவுக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்க ரோஹித் சர்மா, தனது 24ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்.
இருவரும் இணைந்து 98 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, ரோஹித் சர்மா 140 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
எனினும், ரோஹித் சர்மா 32 ஓட்டங்கள் பெற்றிருந்த போது பாகிஸ்தான் அணிக்கு ரன் அவுட் வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும் அதனை அவர்கள் தவறவிட்டனர்.
ரோஹித் சர்மாவின் இந்த ஓட்ட எண்ணிக்கையானது, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இரு அணிகளுக்கிடையில் துடுப்பாட்ட வீரொருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னர் விராட் கோஹ்லி 107 ஓட்டங்கள் பெற்றதே அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.
அத்தோடு கடந்த உலகக்கிண்ண தொடரின் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், கோஹ்லி சதம் அடித்திருந்தார். இம்முறை ரோஹித் சர்மா அடித்தார்.
இதன்பிறகு தரவரிசையில் மாற்றம் நிகழ்த்தப்பட்டு விஜய் சங்கருக்கு பதிலாக அதிரடியாக துடுப்பெடுத்தாடுவதற்கு ஹர்திக் பாண்ட்யா களமிறக்கப்பட்டார்.
இவர் 19 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்ரிகள் அடங்களாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய டோனி ஒரு ஓட்டத்துடன் ஏமாற்றினார்.
இதனையடுத்து, கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் நிதானத்துடன் பந்துகளை எதிர்கொண்டு ஓட்டங்களை சேர்த்தார்.
இந்த நிலையில், அணித்தலைவர் விராட் கோஹ்லி 77 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை, மொஹமட் அமிரின் பவுஸ் பந்துக்கு துடுப்பாட்ட மட்டையை சுழற்றி அடிக்க முயன்ற போது, விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
ஆனால் இந்த ஆட்டமிழப்பினை தொலைக்காட்சி வாயிலாக பார்க்கும் போது, பந்து துடுப்பாட்ட மட்டையில் படாமலேயே சென்றது. ஆனால் பந்து துடுப்பாட்ட மட்டையை நெருங்கும் போது டிக் என சத்தம் கேட்டது. எனினும் கோஹ்லி மைதானத்ததை விட்டு வெளியேறியதால் ஆட்டமிழப்பு கொடுக்கப்பட்டது.
துடுப்பாட்ட மட்டை பிடியில் ஏற்பட்ட சத்தமே அது என பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளர்களால் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு துரதிஷ்டவசமாக விராட் கோஹ்லி ஆட்டமிழந்து வெளியேறினாலும் அவர், மிகப் பெரிய சாதனையை பதிவு செய்த மகிழ்சியுடனேயே ஓய்வறை திரும்பினார்.
விராட் கோஹ்லி இப்போட்டியின் போது, ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ஓட்டங்களை கடந்தார். அத்தோடு குறைந்த இன்னிங்சுகளில் 11000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அவர் 222 இன்னிங்சுகளில் இந்த ஓட்ட எண்ணிக்கையை கடந்தார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்சுகளில் 11000 ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது கோஹ்லி முறியடித்துள்ளார்.
அத்தோடு, கோஹ்லிக்கு 10000 ஓட்டங்களிலிருந்து 11000 ஓட்டங்களை எட்டுவதற்கு 17 இன்னிங்களே தேவைப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து விஜய் சங்கரும் கேதர் ஜாதவ்வும் ஜோடி சேர்ந்து 22 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இந்தியா அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது விஜய் சங்கர் 15 ஓட்டங்களுடனும், கேதர் ஜாதவ் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இதுவே பாகிஸ்தான் அணிக்கெதிராக இந்தியா அணி நிர்ணயித்த மூன்றாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
2005ஆம் ஆண்டு விசாக்கப்பட்டினத்தில் வைத்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ஓட்டங்கள் பெற்றதே சாதனை ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு சார்பில், மொஹமட் அமிர் 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான மொஹமட் ஆமிர் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோருக்கு ஆடுகளத்தின் நடுப்பகுதியை பந்துவீசும் போது சேதப்படுத்தியதற்கான இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் இன்னொரு முறை அதாவது மூன்றாவது முறையும் அவர்கள் எச்சரிக்கப்பட்டால், அவர்களுக்கு பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்.
இதனைதொடர்ந்து, 337 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிதானமான இந்திய ஆரம்ப பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டது.
பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் சிறந்த லெந்துகளுடன் பந்து வீசிய போதும், பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான இமாம் உல் ஹக் மற்றம் பகர் சமான் ஆகியோர் பந்துகளை நேர்தியாக எதிர்கொண்டனர்.
இந்த தருணத்தில் முதல் விக்கெட்டை எவ்வாறு தகர்த்தெறிவது என இந்தியா அணி யோசித்துக் கொண்டிருந்த போது, துரதிஷ்ட வசமாக மூன்றாவது ஓவரில் நான்காவது பந்தை வீசிய போது கால் தசைப்பிடிப்பு காரணமாக புவனேஸ்வர் குமார் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆனாலும் எவ்வித அழுத்தங்களையும் எதிர்கொள்ளாத இந்தியா அணி, மீதமுள்ள இரு பந்துகளையும் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வீச வாய்ப்பு கொடுத்தது.
பின்னர் உடனே மாற்றம் மேற்கொள்ளப்பட்டு தமிழக வீரர் விஜய் சங்கருக்கு பந்து வீச கொடுக்கப்பட்டது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தனது முதல் போட்டியில், முதல் பந்தை வீசிய விஜய் சங்கர், இமாம் உல் ஹக்கை எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழக்க செய்து அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்காக இரசிகர்களை கொண்டாட வைத்தார்.
இதனையடுத்து பகர் சமானுடன் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் இணைந்து அணிக்காக சிறப்பான இணைப்பாட்டத்தை கொடுக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை, சிறந்த ஒவருக்கான சராசரியுடன் கூடியது.
இந்த இணைப்பாட்டத்தை பிரிக்க இந்தியா அணி கடுமையாக போராடியது. இதன்பலனாக இருவரும் 104 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, குல்தீப் யாதவ் தனது சுழலில் பாபர் அசாமை சிக்க வைத்தார்.
பாபர் அசாம் 48 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்த ஓவருக்கு அடுத்த ஓவர் மற்றொரு துடுப்பாட்ட வீரரான பகர் சமானும் குல்தீப் யாதவ்வின் சுழலில் சிக்கினார். இதன்போது பகர் சமான் 62 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் மொஹட் ஹபீஸ் 9 ஓட்டங்களுடன் ஏமாற்ற, அடுத்து களமிறங்கிய மற்றொரு அனுபவ வீரர் சொயிப் மலிக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் மட்டும், பந்துளை நிதானமாக கையாண்டு களத்தில் நின்றார்.
இதனையடுத்து களமிறங்கிய இமாட் வசிம், சப்ராஸ் அஹமட்டுடன் ஜோடி சேர்ந்து 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, இந்த இணைப்பாட்டமும் பிரிக்கப்பட்டது. இதன்போது சப்ராஸ் அஹமட் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைதொடர்ந்து இமாட் வசிம் மற்றும் சதாப் கான் ஆகியோர் இணைந்து 47 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழைக் குறுகிட்டது. இதன்போது, இமாட் வசிம் 46 ஓட்டங்களுடனும், சதாப் கான் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.
இப்போட்டியின் போது அவ்வப்போது மழைக் குறுக்கிட்ட போதும், பின்னர் போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. ஆனால் இறுதியில் மழை விடாது தொடர்சியாக பெய்தால், வெற்றியை தீர்மானிப்பதற்கு டக்வத் லுயிஸ் முறையை போட்டி நடுவர்கள் தேர்வு செய்தனர்.
இதற்கமைய இந்தியா அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 86 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா அணி 7 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.
இதேவேளை உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக ஒரு அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட அதிக வெற்றிகளாக இந்த வெற்றி பதிவானது.
உலகக்கிண்ண வரலாற்றில் இந்தியா அணி, பாகிஸ்தானை எதிர்கொண்ட 7 போட்டிகளிலுமே வெற்றிபெற்றுள்ளது.
கடந்த ஐ.சி.சி. சம்பியன் கிண்ண தொடரை போலவே இப்போட்டியிலும் பாகிஸ்தான் அணியின் வீரர்களான மொஹமட் அமிர் மற்றும் பகர் சமான் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 113 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 14 பவுண்ரிகள் அடங்களாக 140 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரோஹித் சர்மா தெரிவுசெய்யப்பட்டார்.
பல எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போரில் இந்தியா அணி வென்று சாதித்துள்ளது.
