
லிப்ரா எனப்படும் எண்மான பணப்பறிமாற்ற
(டிஜிட்டல் கரன்சி) முறையை முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
குறுஞ்செய்தி அனுப்பவது போன்று மிக இலகுவாக பணத்தை சேமிப்பது, அனுப்புவது மற்றும் செலவு செய்வதை இந்த முறைமை இலகுவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஸ்மார்ட் கைத்தொலைபேசியும், இணைய வசதியும் குறித்த பணப்பறிமாற்ற முறைமைக்கு போதுமானது என ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான செலவுகள் தொடர்பாக தனது அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது.
இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும்போது வங்கிக் கணக்கு இல்லாதவர்களை மட்டுமல்லாது, அந்தந்த நாடுகளின் அடையாள அட்டைகள் இல்லாதவர்களை சரிபார்ப்பது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடினமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
ஊபர், மாஸ்டர் கார்ட் மற்றும் பேபெல் ஆகிய நிறுவனங்களும் இத்தகைய முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
ஏற்கெனவே உள்ள பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்ஸிகளை ஆய்வு செய்துள்ளதாகவும் லிப்ரா அவ்வாறாக இருக்காது என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
பிட்காயின் போன்று மெய்நிகர் பணமாக இல்லாமல் லிப்ரா உண்மையான சொத்துகளை கொண்டு சுதந்திரமாக மேலாண்மை செய்யப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
