தாக்குதல்களின் பின்னர் பெரும்பான்மை சிங்கள மக்களும் பாதிக்கப்பட்ட சமூகத்தவரும் முஸ்லிம் சமூகத்தவர்களை புரிந்துகொண்டு அன்றாட வாழ்க்கையை தடையின்றி வாழவும், சமய அனுட்டானங்களை முன்னெடுக்கவும் பக்கபலமாக இருப்பது மகிழ்விற்குரிய விடயமென மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தோஷமும் துக்கமும் இணைந்ததான ஈதுல் – பிதர் தின வாழ்த்துக்களை இலங்கை மற்றும் உலக வாழ் முஸ்லிம் மக்களிற்கு தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளால் தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களினால் அப்பாவி உயிர்கள் பலியான சோகமும் முஸ்லிம் மக்களின் உடைமைகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும் சோகம் நிறைந்த நிகழ்வுகளென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த புனித ரமழான் மாதத்தின் கடமைகளை அச்சுறுத்தலின்றி நிறைவேற்றிக்கொள்ள புரிந்துணர்வுடன் பணியாற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிகழ்வுகளின் அச்சுறுத்தல்களிலிருந்து முஸ்லிம் சமூகம் மீண்டெழுந்து வளமான நாட்டைக் கட்டியெழுப்ப, ஒன்றிணைந்து பயணிக்க நம்பிக்கையுடன் இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.





