
ரயில் மூலம் குடிநீர் கொண்டுவருவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி,வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலமாக கொண்டு வந்து சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக தனியாக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்.
குடிநீர் திட்டப் பணிகளுக்கு மேலதிகமாக ரூ.200 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள குடிநீர் விநியோகம் பற்றி விரிவான ஆய்வினை நடத்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் சீராக குடிநீர் வழங்கும் வகையில், இந்த ஆண்டு ஏற்கெனவே ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்திற்குப் பின்னர் குடிநீர் திட்டப் பணிகளுக்கு மேலும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார். இத்தொகையைக் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
